ரசவாதி:  விமர்சனம்  

ரசவாதி:  விமர்சனம்  

நாயகன் அர்ஜூன் தாஸ், கொடைக்கானலி ஒரு சித்த மருத்துவராக இருக்கிறார். அதே நேரம் இயற்கை ஆர்வலராகவும் வாழ்கிறார்.

அதே கொடைக்கானலில்ஒரு தனியார் ரெஸ்டாரண்டில் மேனஜராக வந்து சேர்கிறார் நாயகி தன்யா.

இருவரும் எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்கள். நட்பாகி, காதலாகிறது.

இந்த நிலையில், அதே ஊருக்கு காவல் ஆய்வாளராக வருகிறார் சுஜித் சங்கர். சிறு வயதில் தனது தாய், தந்தையரின் சண்டை- தாய் தீக்குளிப்பு ஆகியவற்றைப் பார்த்தவர்.. ஆகவே மனநிலை மாறுபாடு கொண்டவர்.

அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா இருவரும் காதலிப்பதை பார்த்த இவருக்கு ஆத்திரம் வருகிறது. அவர்களது காதலை உடைக்க பல்வேறு விசயங்களை செய்கிறார். கடுமையாக தாக்குகிறார்.

அவருக்கு அர்ஜூன்தாஸ் மீது என்ன கோபம், அவரது எண்ணப்படியே காதலை பிரித்தாரா.. என்ன ஆனது என்பதே கதை.

நாயகன் அர்ஜூன்தாஸ் வழக்கம்போலவே சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். சரிவர நடக்க முடியாத, வித்தியாச நடையிலேயே நடிப்பை உணர்த்திவிட்டார். அதே போல, இயற்கையை அழிப்பவர்களிடம் பொங்குது, காதலை மென்மையாக வெளிப்படுத்துவது என அதகளம் புரிந்து இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.

அழகில் மட்டுமின்றி நடிப்பிலும் மிளிர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன். எப்போதும் முகத்தில் மென்சோகத்தை வெளிப்படுத்துவது, காதலை வெளிப்படுத்தி வெட்கத்தைக் காட்டுவது என்று ரசிக்க வைக்கிறார்.

படத்தின் மற்றொரு கதாநாயகியான ரேஷ்மா வெங்கடேஷும் சிறப்பாக நடித்து உள்ளார். காதல் காட்சிகளில் துள்ளலான நடிப்பு. அதே போல கணவனின் கொடுமைக்கு ஆளாகும்போது பரிதாபப்பட வைக்கிறார். அதிலும் அந்த தற்கொலை காட்சியில் பதைபதைக்க வைத்துவிடுகிறார். சிறப்பு.

வில்லனாக மிரட்டி இருக்கிறார் சுஜித் சங்கர்.  பார்வை, வசன உச்சரிப்பு, உடல் மொழி அனைத்தும் அசத்தல்.

ரிஷிகாந்த், ரம்யா, ஜி எம் சுந்தர் என பிறரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் தமனின் இசை இரண்டும் படத்திற்கு பலம்.

வெறும் காதல் கதையாக இல்லாமல், மனோதத்துவ ரீதியான படமாக அளித்து சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அதோடு இயற்கை மீதான கவனத்தை ஈர்க்கும்படியான காட்சிகளுக்காக கூடுதலாக பாராட்டலாம்.

மனநோயை தீர்க்கும் மருந்து பூண்டு என்பதை ஒரு காட்சியில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மரத்தோடு பேசுவது,
பாதரசத்தைத் தொட்டு பேசும் வசனங்கள்,  நான்கு வகையான குடிகார்கள், வீட்டிலிருந்து ஈ ஒன்றை ஜன்னலை திறந்து வெளியே விடுவது என பல காட்சிகள் ஈர்ப்பு.

மொத்தத்தில் ரசித்துப் பார்க்க வேண்டிய படம்.

 

Related Posts