விமர்சனம்: ரணம் – அறம் தவறேல்

விமர்சனம்: ரணம் – அறம் தவறேல்

சிதைந்து போன  – உயிரற்ற – உடலை வைத்து, இறந்தவர் முகத்தை துல்லியமாக வரைந்து, அவர் யார் என்பதை சொல்லும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். காவல் துறைக்கு பேருதவியாக இருக்கிறார்.

ஒரு விபத்தில் தனது  மனைவியை பறிகொடுக்கிறார். அதோடு இவருக்கும் 2 வருட நினைவுகள் அழிந்து போகின்றன.

இதற்கிடையே, வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இந்த நிலையில் வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப்.கிடைத்த உடல் பாகங்கள் அனைத்தும் வேறு வேறு உடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரிய வருகிறது.

இறந்தவர்கள் யார், இந்த வழக்கிற்கும் வைபவிற்கும் என்ன தொடர்பு  என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் வைபவ் சிறப்பாக நடித்து உள்ளார். பொதுவாக நாயகர்கள் பயந்து ஒதுங்கும் கதாபாத்திரம். துணிந்து நடித்து பாராட்டுகளை அள்ளுகிறார் வைபவ்.

எமோஷன்ஸ், காதல், அப்பாவித்தனம் என பல கோணங்களில் வழக்கமான தனது வித்தியாசமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வந்து அதிரடியாக நடித்து இருக்கிறார் தன்யா ஹோப். நடை உடை பாவனியில் ஒரு போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார்.

நந்திதாவும் சிறப்பாக நடித்து உள்ளார். பத்து வயது குழந்தைக்கு தாய் என்கிற கதாபாத்திரம், கனமானதுதான் ஆனால் அனாயாசமாக நடித்து உள்ளார்.

தவிர சரஸ் மேனன், ப்ரனிதி, சுரேஷ் சக்ரவர்த்தி, டார்லிங் மதன் என அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக நிற்கிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவும் சிறப்பு.

வழக்கமான க்ரைம் த்ரில்லர் படமாக இல்லாமல்,  உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குநர்.

ரணம் அறம் தவறேல் –  தரமான க்ரைம் த்ரில்லர் என்பதோடு மனதை கனக்கவும் வைக்கிறது.

 

Related Posts