ராயன் : விமர்சனம்
தனுஷின் ராயன் திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
பவர் பாண்டி படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கும் படம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவது, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என எதிர்பார்ப்பை எகிறச் செய்தது இந்தத் திரைப்படம்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ராயன்… பார்ப்போம்.
சிறுவன் (தனுஷின்) தாய் தந்தை, “இரு தம்பிகளையும், தங்கையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள். டவுனுக்கு போய் வருகிறோம்” என்று சொல்லி செல்கின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவே இல்லை. இதனால் தனது தம்பிகள் மற்றும் தங்கையுடன் ஊர் பூசாரியிடம் சென்று உதவி கேட்கிறான் சிறுவன்.
அப்போது, கைக்குழந்தையான தனுஷின் தங்கையை வேறொருவரிடம் விலை பேசி விற்க முயல்கிறார் பூசாரி. இதை அறிந்து கொண்ட சிறுவன், மறுக்கிறான். ஒரு கட்டத்தில், அரிவாளை எடுத்து பூசாரியை கொன்றுவிடுகிறான். பிறகு தம்பிகள், தங்கையுடன்
அங்கு செல்வராகவனின் உதவியோடு, மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கஆரம்பிக்கிறான். பிறகு பாஸ்ட் புட் கடை வைத்து நடத்துகிறார்.
அப்போது சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் துரை என்பவரின் மகனை, தனுசின் தம்பி சந்தீப் கிஷன் கொன்றுவிட, இதனால் சந்தீப் கிஷனை கொல்ல துரை முடிவு செய்கிறார்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
தனுஷ் நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எப்போதும் குடும்பத்தின் நினைப்பாகவே இருப்பது, அவர்களுக்காக உழைப்பது, மூத்த தம்பி தவறான வழியில் செல்லும்போது கண்டிப்பது, குடும்பத்துக்கு ஆபத்து என்றவுடன் அதிரடியாக களம் இறங்குவது என மிரட்டி இருக்கிறார் தனுஷ்.
இவரது தம்பிகளாக சந்தீப் கிஷன். காளிதாஸ் ஜெயராம், தங்கையாக துஷாரா. தனுசுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவராக செல்வராகவன், காவல்துறை அதிகாரியாக பிரகாஷ் ராஜ், தாதாக்களாக, சரவணன், எஸ்.ஜே.சூர்யா… அனைவரும் நிறைவான நடிப்பை அளித்து உள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை படம் முழுதும் ஒரு கதாபாத்திரமாகவே வந்து அசத்துகிறது. சோகக்காட்சிகளிலும் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் இன்னும் நெருங்கி வருகிறது இசை. அதே போல பாடல்களும் சிறப்பு. குறிப்பாக டைட்டில் சாங் உருக வைக்கிறது.
ஓம் பிகராஷ் ஒளிப்பதிவு அசத்தல். குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் இரவுக் காட்சிகளிலும் அசரவைக்கிறது.
ஜாக்கியின் கலை இயக்கம் அற்புதம். அந்த பின் தங்கிய குடியிருப்பு, வீடுகள், சாலை என நிஜ ஊரையே உருவாக்கி இருக்கிறார்.
பீட்டர் ஹெய்டனின் சண்டைக் காட்சிகள் மிரட்டுகின்றன.
இயக்குனராக இரண்டாம் முறை ஜெயித்து இருக்கிறார் தனுஷ். துவக்க காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை, அடுத்து என்ன என்கிற எதிர்பார்ப்புடன் செல்கிறது.
கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம், அவர்களை நடிக்க வைத்த விதம் இரண்டும் சிறப்பு. செண்டிமெண்ட் காட்சிகளில் உருக வைக்கும் தனுஸ், அதிரடி காட்சிகளில் மிரள வைக்கிறார்.
மொத்தத்தில் ராயன்… அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
