சீயான் 63… இனி ‘பவர்ஹவுஸ்’! ஆக்ஷன் வேட்டையோடு களம் இறங்கும் விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சீயான் 63’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை ஒரு தெறிக்கவிடும் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்பு: ‘பவர்ஹவுஸ்’!
ஏற்கனவே விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய நிலையில், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராட்சச கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஆரம்பத்தில் மிகவும் அமைதியான, அன்பான ஒரு குடும்ப சூழலை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. கல்யாண சாப்பாடு ஆர்டருக்காக சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஒரு அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதோடு காட்சிகள் நகர்கின்றன. அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களாக ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ் என ஒவ்வொருவரும் அறிமுகமாகி, மனதை வருடும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே வீடியோவின் போக்கே தலைகீழாக மாறுகிறது! பூட்டியிருக்கும் ஒரு ரகசிய அறையை விக்ரம் திறந்து உள்ளே நுழைய, அங்கே அடிபட்டு ரத்தக் காயங்களுடன் கிடக்கும் அடியாட்கள் அதிர வைக்கிறார்கள். அவசியமான அமைதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரமான புயலாக விக்ரமின் இன்னோர் அவதாரம் வெளிப்படுகிறது.
குடும்ப உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களமும், சீயானின் அசுரத்தனமான கமர்ஷியல் ஆக்ஷனும் ஒன்றுசேரும் விருந்தாக ‘பவர்ஹவுஸ்’ அமையப் போகிறது என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாகிறது. உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு, பரபரப்பான திரைக்கதை, அதிரடி சண்டைக்காட்சிகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்கள் இதில் நிறைந்திருக்கின்றன.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம், விஷ்ணு ஜி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்குகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜி.சரவணன், சாய் சித்தார்த் இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
இசை அரக்கன் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், ஷான் கருப்புசாமி வசனங்களையும் கவனிக்கின்றனர். சண்டைப் பயிற்சிகளை ஸ்டண்ட் சில்வாவும், நடனத்தை பிருந்தாவும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிராஸ்டாவும் மேற்கொள்கின்றனர். ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமியும், விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னாவும் பணியாற்றுகின்றனர்.
குடும்பக் கதையும் தெறிக்கும் ஆக்ஷனும் கலந்த இந்த ‘பவர்ஹவுஸ்’ அறிவிப்பு, விக்ரம் ரசிகர்களைக் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது!

