‘ஸ்ரீ கேசரி நந்தன்’: தமிழ் இயக்குநரின் குஜராத்தி திரைப்படம்! ஏழு மொழிகளில் ரிலீஸ்!

‘ஸ்ரீ கேசரி நந்தன்’: தமிழ் இயக்குநரின் குஜராத்தி திரைப்படம்! ஏழு மொழிகளில் ரிலீஸ்!

அட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசாமியா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் குஜராத்தி திரையுலகின் முதல் பான்-இந்தியா திரைப்படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’! இப்படத்தின் கெத்தான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத்தி திரையுலகை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை, விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார்.

குஜராத்தி மொழியில் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

தென்னிந்திய மற்றும் குஜராத்தி கலைஞர்களின் அதிரடி கூட்டணியில், முன்னணி நடிகர்களான அர்பித் ரங்கா மற்றும் மௌலிக் சௌஹான் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சர்வதேச தரத்திலான காட்சியமைப்பிற்காக சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய, பிரபல கன்னட இசையமைப்பாளர் அபிநந்தன் காஷ்யப் இசையமைக்கிறார். மஹிபால் சிங் ரணாவத், ராஜேஷ் தாக்கூர், ஹிரேன் படேல் மற்றும் பரேஷ் ஜக்டா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் கைகோர்த்துள்ளனர்.

நம்பிக்கை, பக்தி, பாரம்பரியம் மற்றும் சமூக மாற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’, பாரம்பரியமான ஒரு கதையை நவீன தொழில்நுட்பத்துடனும் தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்டமான ஸ்டைலிலும் திரைக்குக் கொண்டுவருகிறது.

குஜராத்தின் கலாச்சார மதிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மாபெரும் முயற்சியாக உருவாகும் இத்திரைப்படம், வரும் 2027-ஆம் ஆண்டு ராம நவமி திருநாளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஆரவாரமாக வெளியாகவுள்ளது!

Related Posts