“அரசியல் பிரவேசம்!” : ரஜினி புது ஸ்டேட்மெண்ட்!

‘தனது அரசியல் பிரவேசம் பற்றி, நடிகர் ரஜினி மறைமுகமாக.. ஆனால் தெளிவாகச் சொல்லிவிட்டார்!’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ரஜினி ரசிகரான முரளி என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்த  பதிவில், “தலைவா! ( ரஜினி!)  நீ வரும் 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்; தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைபோட வேண்டும்:  அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை நீ  உருவாக்க  வேண்டும்! இதுவே என் இறுதி ஆசை. உன்னை அரிணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்பதுதான் எனது ஒரு வருத்தம்!”  எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதனைக் கண்ட நடிகர் ரஜினிகாந்த், அந்த ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “முரளி!  நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வந்துடுவீங்க. குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ்… குடும்பத்துடன் வீட்டிற்கு வாங்க. நான் உங்கள பாக்கிறேன்.  தைரியமா இருங்க, நான் ஆண்டவன வேண்டிக்கிறேன். தைரியமா இருங்க… தைரியமா இருங்க… வாழ்க வளமுடன்,” என பேசியுள்ளார்.

யாரோ ஒரு ரசிகருக்காக ரஜினி ஆடியோ வெளியிட்டதும், அதில் உருக்கமாகப் பேசியதும் பலரையும் கவர்ந்துள்ளது.

அதே நேரம், “குறிப்பிட்ட ரசிகர், தனது உடல் நலத்தைவிட, ரஜினியின் அரசியல் குறித்தே பேசியிருக்கிறார். ஆனால் ரஜினியோ, அந்த ரசிகரின் நலனுக்காக பேசியிருக்கிறார். அந்த ரசிகர் ஆவலுடன் எதிர்பார்க்கும், அரசியல் பிரவேச கருத்துக்கு ரஜினி பதில் அளிக்கவே இல்லை.

ஏற்கெனவே, ‘நாட்டில் புரட்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன்’  என்றார். அப்போதே, அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்பது தெளிவாக தெரிந்தது.

ஆனாலும், அவர் அரசியலுக்கு வரப்போவதாக சில அரசியல் பிரமுகர்களும், பல தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளும் தொடர்ந்து யூகங்களை வெளியிட்டு வருகின்றன. இதற்கு பதிலாகத்தான் ரஜினி அந்த ரசிகரின் அரசியல் வேண்டுகோள் குறித்து ஒரு வார்த்தையும் கூறாமல், ரசிகரின் உடல் நலன் குறித்து மட்டுமே பேசி ஆடியோ வெளியிட்டிருக்கிறார்.

ரஜினி தனது ஒவ்வொரு செயலையும் மிக மிக திட்டமிட்டு செய்யக்கூடியவர். இந்த ஆடியோவும், தன்னை அரசியலுக்கு இழுக்கும் சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுக்கு அவர் அளித்த தெளிவான பதில்தான்!” என்கிறார்கள்.

‘ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, கதாநாயகனைப் பற்றி கூறி, ‘ஆண்டவா! இவனை புரிஞ்சுக்கிறதுக்கே, தனி மூளை வேணும்! அதுக்காக தனி மூளை கொடு!’ என்பார். அது போல ரஜினியின் பேச்சுக்களை… அதில் உள்ள கருத்துக்களைப் புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும் போல! ‘ என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Related Posts