ரஜினி போலவே தலைசுற்றிய சகாயம்! : முன்னாள் பொறுப்பாளர் அதிர்ச்சி தகவல்!
1995ம் ஆண்டு முதல் இன்று வரை கால் நூற்றாண்டு காலமாக, தொடரும் கேள்வி, “நடிகர் ரஜினி கட்சி துவங்குவாரா?” என்பதுதான்.
தனது அரசியல் அபிலாசைகளை திரைப்படங்கள் மற்றும் பேச்சுக்கள் மூலம் மறைமுகமாக ரஜினி தெரிவிக்க, அதை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க, “தலைவர் முதல்வர் ஆவது நிச்சயம்; நாம் மந்திரி ஆவது லட்சியம்!’ என்று அவரது ரசிகர்கள் ஆர்வமிகுதியில் இருந்தார்கள்.

ஆனால், தற்போது கொரோனாவை காரணம் காட்டி, அரசியல் பேச்சுக்களை ஒத்திவைத்திருக்கிறார் ரஜினி.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம், “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை! சரியான நபரை முதல்வர் பொறுப்பில் அமர வைப்பேன்!” என்றார்.
அதற்கு அவரது ரசிகர்கள், “ஊஹூம்.. நீங்கள்தான் முதல்வர் ஆக வேண்டும்!” என ஆவேசமாக பதிலுரைத்தனர்.
இந்நிலையில், “ரஜினி மனதில் இருக்கும் முதல்வர்(!), நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்துள்ள சகாயம் ஐ.ஏ.எஸ்.தான்!” என்று சில ஊடகங்களில் யூகங்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது அந்த பரபரப்பும் அடங்கியிருக்கிறது.

ஆனால், ரஜினி மற்றும் சகாயம் இருவருக்கும் இடையேயான ஒரு ஒற்றுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
2017ல் கட்சி துவங்க இருப்பதாக சொன்ன ரஜினி, “முந்தா நாள் ஒரு ரிப்போர்ட்டர், டக்குனு மைக்கை நீட்டி, ‘சார்! உங்கள் கொள்கைகள் என்ன’ன்னு கேட்டார்! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்! ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சி!” என்றார்.
இதே போல, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸும், “கொள்கை” என்றவுடன் ஷாக் ஆன விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.
சகாயத்தின், ‘மக்கள் பாதை’ அமைப்பில் தீவிரமாக இயங்கியவர், சமூக ஆர்வலர் பழ.ரகுபதி. பிறகு, சகாயத்துடன் ஏற்பட்ட மன வேறுபாட்டால் விலகிவிட்டார்.

அவர், வைகறை யு டியுப் சேனலில், “சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு துவங்கி கிட்டதட்ட மூன்று வருடங்கள் கழித்தே நான் அதில் இணைந்தேன். அதுவரை அந்த அமைப்புக்கு கொள்கை என்று ஏதுமில்லை. ஆகவே, சகாயத்திடம், ‘அமைப்புக்கு என்ன கொள்கை என்பதை வரையறை செய்ய வேண்டும்!’ என்றேன். ஏனோ இதனால் அதிர்ந்துபோன சகாயம், என் மீது ஆத்திரப்பட ஆரம்பித்துவிட்டார்!” என்று பழ.ரகுபதி அந்த யு டியுபில் தெரிவித்துள்ளார்.
ஆக, ரஜினி கட்சி துங்கினால், சகாயம் முதல்வர் வேட்பாளர் என்பது சரியாகத்தான் இருக்கும் போல!

