பழனி முருகன் வரலாறு விநியோகம்: தி.வி.க.வினர் விடுவிப்பு!

பழனி முருகன் வரலாறு விநியோகம்: தி.வி.க.வினர் விடுவிப்பு!

இன்றும் நாளையும் பழனியில், “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடுட்டை, தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை பிரம்மாண்டமாக நடத்துகிறது. இந்நிலையில், திராவிடர் விடுதலை கழகம், ‘பழனி கோயில் வழிபாடு – உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்’ எனும் நூலை விற்பனை செய்ய திட்டமிட்டது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்த, தி.வி.க. திண்டுக்கல் மாவட்டத் தலைவர்  மருதமூர்த்தி உள்ளிட்ட  எழுவர், தமிழ்நாடு காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஆனாலும் பிற தோழர்கள், புத்தகத்தை பக்தர்களுக்கு இலவசமாகவே விநியோகித்தனர்.

இந்நிலைியல், தி.வி.க. தலைவர் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம், தமது கட்சியினர் தடுத்து வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் , “முருகன் மாநாட்டை ஒட்டி  பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டோம். ஏற்கெனவே தி.வி.க. வெளியிட்ட,  ‘பழனி கோயில் வழிபாடு – உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்’ என்ற நூலை, அடக்க விலையான ரூ.30க்கு பதிலாக,  ரூ.10க்கு விற்பனை செய்ய ஏற்பாடுகளை செய்து வந்தோம்.

ஆனால்,  இந்த பணியில் இயங்கிக்கொண்டு இருந்த தி.வி.க. திண்டுக்கல் மாவட்டத் தலைவர்  மருதமூர்த்தி உள்ளிட்ட தோழர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.

அந்நூலில் அறிய வரலாற்று உண்மைகள் ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டு உள்ளன.

தமிழர்கள் வசம் இருந்த பழனிக் கோயில் பார்ப்பனர்கள் வசம் பறிபோன வரலாறு, அதை மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள், இது குறித்து பழனி திருபோகநாதர் ஆதினம் தவத்திரு சிவானந்த புலிப்பாணி அடிகளார் கூறியது போன்ற தகவல்கள் உள்ளன.

ஆரியக் கற்பனைக் கதைகளை நம்பி ஏற்றுக் கொண்டிருக்கும் கடவுளர்களுக்கு மேலாக – மாற்றாக முத்தமிழ் முருகனை பரிந்துரைக்கும் தமிழ்நாட்டு அரசுக்கு – அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க எடுக்கும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்கு – வலு சேர்க்கும் முயற்சி இது.

இதை இப்போதாவது புரிந்து கொண்டு  தோழரை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம்” என்று தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.

இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு, ‘முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஏற்பட்ட கறை!’   என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில், “பழனி கோயிலின் உரிமை பண்டாரம் என்பவர்களிடமே பல நூறு ஆண்டுகளாக இருந்தது என்பது உண்மை வரலாறு. சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பாக, திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் பார்ப்பனர்களிடம் வலுக்கட்டாயமாக, பழனி கோயில் உரிமை கையளிக்கப்பட்டது. இதைச் செய்தவர், திருமலை நாயக்கரின் தளவாய் ராமப்பய்யர்.

இதற்கான ஆதாரமாக ‘ பழனி தாம்பூல சாசனம் சாசனம்’ என்ற கல்வெட்டு இன்றும் உள்ளது.
இந்த வரலாற்று ஆதாரத்தை சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்களும் பலமுறை எடுத்துக் கூறி இருக்கிறார். அவரது இந்தப் பேச்சு, இணையத்திலும் வீடியோவாக உள்ளது.

மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழ்நாடு அரசின், அறநிலையத்துறை நியமித்த ஆலோசனை குழு உறுப்பினர்களில் ஒருவர் சுகி சிவம் .

இவர், தற்போது பழனி முருகன் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அங்கம் வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உண்மையான வரலாற்றைச் சொல்லும் புத்தகத்தை விநியோகம் செய்ய முற்பட்டார் என்று, தி.வி.க.வின் மருதமூர்த்தி உள்ளிட்டோர் காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது  சரியல்ல.

அறிவியலையும் உண்மையான வரலாற்றையும் மக்களிடம் பரப்புவது நமது கடமை அல்லவா?

இந்த கைது நடவடிக்கை, ‘இந்துத்துவ பாஜக ஒன்றிய அரசுக்கு சார்பான செயல்’ என்றே பார்க்கப்படும்.

‘வரும் காலங்களிலும் தமிழ்நாட்டில் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது; சரிக்குச் சரியாக எதிர்த்து நிற்கும் கட்சிகள் இல்லை. இதே போல ஒன்றியத்திலும் பாஜகவே அடுத்து ஆட்சிக்கு வரும். ஆகவே பாஜகவுடன் எதிர்ப்போக்கு வேண்டாம். அதனால் தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை தடையின்றி பெறலாம்’ என தி.மு.க. அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் – முடிவு செய்திருக்கக் கூடும்.

ஆனாலும் மருதமூர்த்தி அவர்கள் போன்றோரின் கைதுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை” – இவ்வாறு பத்திரிகையாளர் டி.வி.சோமு குறிப்பிட்டு இருந்தார்.இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்ட தி.வி.க.வினர் எழுவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Posts