கருணாநிதி விழாவில் கலந்துகொள்ளாதது ஏன்? கமல் விளக்கம்

கருணாநிதி விழாவில் கலந்துகொள்ளாதது ஏன்? கமல் விளக்கம்

கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாகச் சென்னை, கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகக் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்நிகழ்வில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்று ஒரு தகவல் உலவியது. ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில், “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts