கவிஞர் பழனிபாரதியை கலங்க வைத்த கவிதை!
தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் பழநிபாரதி. பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
பழனி பாரதி, மிகச் சிறந்த கவிஞரும் என்பதையும் அனைவரும் அறிவர்.
நெருப்புப் பார்வைகள், வெளிநடப்பு, காதலின் பின்கதவு உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தை என்னும் இலக்கிய ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
இவரை உவமைக் கவிஞர் சுரதா “இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்” என்று பாராட்டியுள்ளார்.
பொது விசயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க, பாடல் எழுத கவிஞர்கள் பலரும் தயங்கிப் பதுங்கும் நிலையில், தனது எண்ணங்களை தயக்கமின்றி கவிதைகளாக வெளிப்படுத்துபவர் பழனி பாரதி.
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளை ஒட்டி இவர் எழுதிய, ‘பிரபாகரன்… வழித்துணையல்ல.. வழி’ என்ற பாடல் மறக்க முடியாதது.
இவர் இரு நாட்களுக்கு முன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டார். அதோடு, “எழுதியவர் யார் என தெரியவில்லை.. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவர் விழிகளிலும் கடைசி வரி்யில் கண்ணீரே அவனது பெயராகி வழிகிறது…” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, “கவிஞர் தெரிந்தவர்கள் பதிவிடலாம்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னூட்டத்தில் சிலர், “இந்த கவிதையை எழுதுயது ரஜினிகாந்தன் கந்தன்” என குறிப்பிடவே கவிஞர் பெயரையும் பதிவில் இணைத்தார், பழனி பாரதி.
ஒரே துறை சார்ந்தவர்கள் மற்றவர்களை புகழ்வதை விரும்பாத சூழலே நிலவுகிறது. அதுவும் படைப்புலகம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆனால் கவிஞர் பழனி பாரதி, அதிலும் தான் வித்தியாசமான மனிதர்.. இல்லைியல்லை.. இயல்பான மனிதர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கவிஞர் பழனிபாரதியை நெகிழவைத்த அந்த கவிதை..
அக்காவுக்கு ஏழைத் தாய்வீட்டு பொங்கல் வரிசை…
ஒருகட்டு கருப்பங்கழி
காய்வெட்டா வாங்கிவந்த
பூவன்பழம் நாலுசீப்பு
கூடவே
ரெண்டண்ணம்
இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து
கடன்சொல்லி வாங்கிவந்த
பூணம் பொடவை ஒண்ணும்
பூப்போட்ட கைலி ஒண்ணும்
வரிசைப்பணம் அம்பதும்
வடக உருண்டை பொட்டலமும்
என
அம்மா அனுப்பிவைப்பாள்
அக்காவுக்கு
பொங்கல் சீர்
உந்திப் பெடல்மிதித்து
சந்தோஷமாய்
சைக்கிளேறிப்போகும்
என்னை
தெருமுனையில் திரும்பும்வரை
கையசைத்து
பின்மறைவாள்
ஆறுமைலுக்கு
அப்பாலிருக்கும்
அக்காவீடு போவதற்குள்
தெப்பலாய் நனைந்திருப்பேன்
தேகமெல்லாம்
வியர்த்திருப்பேன்
தெருமுக்கு கடைநிறுத்தி
தின்பண்டம் கொஞ்சம்
மயிலாத்தாவிடம்
பேரம்பேசி
மல்லிப்பூ ரெண்டுமுழம்
என
என்பங்குக்கு கொஞ்சம்
சீர்வரிசைப்பைக்குள்ளே
சேர்த்தே
எடுத்துப்போவேன்
” வாடா” தம்பியென
வாஞ்சையோடு அழைக்கும்
அக்காவின் வீட்டுக்குள்
வெரால்மீனு கொழம்பும்
மசால்வடையும்
மணக்கும்
எப்படியும் வருவான்
தம்பியென
கெவுளிச்சத்தத்தை வைத்தே
கணித்துசெய்திருப்பாள்
அக்கா
பனைவிசிறி தந்துவிட்டு
மோரெடுத்துவர
உள்ளறைநோக்கி ஓடும்
அக்காவுக்கு
பிறந்தவீட்டு சீரைக் கண்டு
பெருமை
பிடிபடாது.
பாக்கு இடிக்கும்
மாமியாக்காரி
பார்க்கட்டும் என்பதற்காகவே
தெருத்திண்ணையிலேயே
பரத்திவைப்பாள்
பிறந்த வீட்டு
சீதனத்தை.
“இந்த
இத்துப்போன வாழைக்காயத்
தூக்கிட்டுத்தான்
இம்புட்டுத்தூரம்
வந்தானாக்கும்”
என்னும்
நக்கலுக்கு வெகுண்டு
நாசிவிடைக்க
கிளம்புகையில்
பதறிஓடிவந்து
பாதையை மறிப்பாள்
அக்கா.
வரிசைப்பணத்தைக்
கையில்திணித்துவிட்டு
“வர்றேன்க்கா” என்ற
ஒற்றைச்சொல்லுக்கு
ஓலமிட்டு
அழுவாள்
அழுகை அடக்கி
சிரிக்கமுயன்று
கண்ணீர்மறைத்து
கவலை விழுங்கும் அக்காவை
இன்றுநேற்றா
பார்க்கிறேன்
வரிசை குறித்த
வாக்குவாதங்கள்
வருடந்தோறும்
அரங்கேறியபடிதான் இருக்கும்
அக்காவின்
புகுந்தவீட்டில்
சைக்கிள்தள்ளி
விருட்டென ஏறிமிதிக்கையில்
“வெறும்பயக் குடும்பத்துக்கு
வீறாப்புக்கு கொறச்சலில்லே”
என்னும்
குத்தல் வாசகம் கேட்டு
உச்சிவெயில்கணக்காய்
உள்ளம்
கொதிக்கும்
வெரால்மீனுகொழம்பும்
மசால்வடைவாசமும்
தெருமுனைவரை
என்னை
துரத்திவந்து
பின்மறையும்
உச்சிவெயிலில்
ஆவேசங்கொப்பளிக்க
பசித்தவயிறோடு
திரும்பும் நான்
எப்படிக் கேட்கமுடியும்
அக்காவிடம்
அம்மா கேட்டனுப்பிய
சாயம்போன இரவிக்கை
இரண்டும்
கட்டிப் பழசான
சேலை ஒன்றும் ?