ஆன்லைன் சூதாட்டம்.. மேலும் ஒரு தற்கொலை; அவசர சட்டம் தேவை! : அன்புமணி
“ஆன்லைன் சூதாட்டம் மேலும் ஒரு த்தில் பணத்தை இழந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்” என பா.ம.க. இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோயம்பேடு தினேஷ் கடந்த 5 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் 12-ஆவது உயிர். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் தினமும் இத்தகைய தற்கொலைகள் நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் வாடிக்கையான ஒன்றாகி விடும்!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது. தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அனைத்து காரணங்களுடன் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

