படையப்பா: கருணாநிதி, ஜெயலலிதாவுக்கே அல்வா கொடுத்த ரஜினி!
‘ரஜினி படங்களைப் பார்க்கக்கூடாது’ என்று நான் முடிவெடுத்தது, எனது பள்ளிக் காலத்தில். அவரது மாப்பிள்ளை திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் இந்த முடிவு. தளபதி பார்த்தேன். செய்தியாளராக வந்த பிறகு, தவிர்க்க முடியாமல், பத்திரிகையாளர் காட்சிகளில் பார்ப்பேன்.
அப்படித்தான் படையப்பா படத்தை சமீபத்தில், செய்தியாளர் காட்சியில் பார்த்தேன்.
@ “மகள் கல்யாணம் நடக்கலை” என்று ராதாரவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வது, ரஜினியும், “என் மகள் திருமணம் நடக்கலேனா மூச்சு போச்சு” என பேசுவது ஆகிய காட்சிகள்… பெண்களுக்கு திருமணம்தான் முக்கியம்.. அது அவர்களுக்கானது அல்ல குடும்பத்தினருக்கானது.. குடும்ப மானத்தைக் காப்பது என்கிற முட்டாள்த்தனமான பார்வை.
(அதே நேரம், நிஜவாழ்க்கையில் தனது மூத்த பெண்ணின் மனமுறிவை ஏற்றவர், இரண்டாம் மகளுக்கு மறுமணம் செய்வித்தவர் என்கிற வகையில் நவீீன மனிதராக பாராட்டப்பட வேண்டியவர் நிஜ ரஜினி!)
தவிர இந்தப் படத்தில் மகளின் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் காட்சி. மணக்கோலத்தில் இருக்கும் அந்த இளைஞனை கடத்தி வந்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரஜினி.
சரி, மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த அந்த மணமகளுக்கு – குடும்பத்தினருக்கு மானம் போகாதா.. அவர்கள் உயிரைவிட்டுவிட மாட்டார்களா… பெரிய லாஜிக் மீிறல் படத்தில்!
@ பெண்களின் திருமணம் என்பது அவர்களுக்காக அல்ல குடும்ப மானத்துக்காக என்பது போல அவர்களை இழிபடுத்தும் காட்சிகள் இன்னும் உண்டு..!
“அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை” என்றொரு வசனம். (வருமானத்தை மறைத்ததாக விவகாரம், பள்ளி இடத்துக்கு வாடகை தராதது, பண மோசடி புகார், ஊழயிர்களுக்கு சம்பளம் தராத விவகாரம் என ரஜினியும் அவரது மனைவி லதாவும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது!)
“பொம்பளை பொம்பளையா இருக்கணும்.. பஜாரியா இருக்கக்கூடாது” என்பது போன்ற வசனங்களும் உண்டு.
குறிப்பாக, கடைசி காட்சியில் நீலாம்பரி கதாபாத்திரம் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறது.
அப்போது நாயகன் படையப்பா ரஜினி, ” அதிகமா கோவப்படற பொம்பளையோட கதி இப்படித்தான்!” என்கிறார்.
“ஆண் கோபப்படலாம்.. பெண் கோபப்பட்டால் மரணம்தான்!” என்கிற காட்சி..கதை எழுதி நடித்தது ரஜினி!
என்ன ஒரு கொடூரமான பிற்போக்குத்தனம் இது!
@ சம்பந்தமே இல்லாமல் சமஸ்கிருத பிற்போக்குத்தனத்தை உயர்த்தும் காட்சியும் உண்டு. தனது காதலியைப் பற்றி ரஜினி சொல்லும்போது, படையப்பா, “பிரயோஜகம்,
சாத்வீகம்” என்றெல்லாம் பேசுவார்.
“கதை மட்டுமல்ல.. படத்தின் பெரும்பாலான வசனங்களை எழுதியது ரஜினிதான்!” என பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியது நினைவுக்கு வருகிறது.
@ பழைய இன்னும் சில மூடத்தனங்களை நிறுவ முயற்சிக்கிறார் ரஜினி.
சிகப்பு உடையைப் பார்த்தால் மாடு வெறியாகி முட்டும் என்பதை இரு காட்சிகளில் சொல்கிறார் கதாசிரியர் – நடிகர் ரஜினி.
மாடுகளுக்கு, சிகப்பு உள்ளிட்ட எந்த நிறத்தையும் வேறுபடுத்தி அறிய தெரியாது. துணி அசையும் வேகத்தைப் பார்த்து மிரண்டு போய் முட்ட வரும். அவ்வளவுதான்.
அதே போல பாம்பு புற்று அருகில் பால் வைத்து ஹீரோயின் வணங்க.. அந்த பாம்பும் வந்து பால் குடிப்பது போலவும் காட்சி இருக்கிறது.
இதுவும் முட்டாள்த்தனமான நம்பிக்கை.
@ “அட.. திரைப்படம் தானே.. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா” என்று சிலர் சொல்லக்கூடும். 
ரஜினி நடிக்கும் கதாபாத்திரங்களைப்போலவே உடை அணிந்து, “நடிக்கவும்” செய்வார்கள் ரசிகர்கள்.. அதுவும் சாலைகளிலேயே! “இந்தியாவில் சிகரெட் பழக்கம் அதிகரிக்க, ரஜினி போன்ற பிரபல நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தது முக்கிய காரணம்” என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டதும் உண்டு.
இதைத் தொடர்ந்து துணிச்சலுடன் வெளிப்படையாக கண்டித்தவர்கள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸும், பாமக தலைவர் அன்புமணியும்தான்.
பிற கட்சியினரைப் போல ரஜினியை வெத்தாக புகழ்வதோ, கண்டுகொள்ளாமல் போவதோ இன்றி, துணிச்சலுடன் மக்கள் நலனுக்காக ரஜினியை – பொது நல எண்ணமே இல்லாத அவரது புகை, மது காட்சிகளை கண்டித்தது பா.ம.க.தான்.
ஆனால் ரஜினி தொடர்ந்தார். இதையடுத்தே பா.ம.க.வினரால், ரஜினியின் பாபா பட பெட்டி தூக்கிச் செல்லப்பட்டது. பிறகு ரஜினி, புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்தார்.
ஒரு நிகழ்வில், “புகைப்பழக்கத்தினால் பல உடல் நலக்கோளாறுகள் எனக்கு ஏற்பட்டு விட்டன. புகைப் பிடிப்பதை விட்டுவிட்டேன். நீங்களும் விட்டுவிடுங்கள்” என்றார்.
ஆனால் சமீப காலமாக புகைக்காட்சிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆக.. தன்னை பின்பற்றும் ரசிகர்களுக்கு ரஜினி நல்லதைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை… அறியாமையை புகட்டலாமா?
@ இப்படி மூட நம்பிக்கைகளை அழுத்தமாக சொல்லும் படையப்பா, பாரம்பரியத்தை கிண்டலடிக்கும் காட்சியும் உண்டு.
வேட்டி சட்டையில் நிற்கும் ரஜினியை, அவரது மகளின் தோழிகள் “கண்ட்ரி மேன்” என சொல்ல.. உடனே “ஸ்டைலாக” கோட் சூட்டில் வந்து பாட்டு பாடுகிறார். எல்லோரும் வியந்து கை தட்டுகிறார்கள். (இதே போன்ற காட்சிகள் அவரது வேறு படங்களில் இருந்ததாக விமர்சனங்களில் படித்த நினைவு!
ஆனால் இந்தப் படம் சொல்லும் இன்னொரு செய்தி.. தமிர் பிடித்த பெண் மார்டன் டிரஸ்ஸில் வருவாள்.. அடக்கமான பெண் பாவாடை -தாவணி, புடவையில் வருவாள்!
பழைய விசயங்களில் எதைப் பின்பற்ற வேண்டும், எதை பின்பற்றக்கூடாது என்கிற தெளிவு நிஜ வாழ்க்கையில் ரஜினிக்கு இருக்கிறது… விகாரத்து, மறுமணம் உட்பட. அதை படங்களில் சொல்ல விரும்புவது இல்லை.
@ இதே போல இன்னொரு காட்சி.. ரம்யா கிருஷ்ணன் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்து ரஜினியை நிற்கவைக்க.. கண நேரத்தில் துண்டால் மேலே ஏதோ செய்கிறார்.. மேலிருந்து ஊஞ்சல் வந்து விழுகிறது.. அதில் ஸ்டாலாக(!) அமர்கிறார்!
ராவணனின் அரண்மனையில் அனுமாருக்கு நாற்காலி தராததால், அவர் தன் வாலை சுருட்டி சுருட்டி ராவணனின் அரியணைக்கு மேல் உயரமாக கொண்டு சென்று அமர்ந்ததாக ஒரு கதை உண்டு. அதுதான் நினைவுக்கு வந்தது.
@ நிஜத்திலேயே “செட் அப் சரியில்லை.. எல்லாத்தையும் மாத்தணும்” என்று சொல்லி அரசியலுக்கு வந்து, வந்த வேகத்திலேயே பெவிலியனுக்குத் திரும்பியவர் ரஜினி.
இந்தப் படத்தில், “ஐஜி ஷூட்டிங் ஆர்டர் கொடுங்க.. நான் ஹோம் மினிஸ்டர் சொல்றேன்..” என்று ஒரு கதாபாத்திரம் சொல்வது போல ஒரு காட்சி.
ஷூட்டிங் ஆர்டர் கொடுக்கும் உரிமை, மாவட்ட ஆட்சியருக்கே உண்டு. அவர்தான் சழ் நிலையை கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
நாட்டின் செட் அப்பை மாற்ற நினைத்த ரஜினி, இதையெல்லாம் விசாரித்து காட்சி வைக்க வேண்டாமா! (கதை அவர்தான்!)
@ ராவணன் என்றதும் நினைவுக்கு வருகிறது.
இந்தப் படத்தில், “வெற்றிக் கொடிகட்டு..” பாடலில், “இன்னோர் உயிரை கொன்று
புசிப்பது மிருகமடா; இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா..” என்ற வரிகள் வருகின்றன.
அசைவம் உண்பர்களை வெளிப்படையாக, “மிருகம்” என்று சொல்லும வரி இது. பின்னாட்களில் இதே கருத்தை மேடையிலும் பேசியவர் ரஜினி.
அதே போல, அடுத்த வரி அரக்கர்களை இழிவுபடுத்துவது. அதாவது, அரக்கர்கள் தமிழர்களே என்கிற என்பது வைரமுத்து போன்றவர்கள் கருத்து.
வைரமுத்துதான், “ராவணன் தோற்றதால் அரக்கன் என இழிபபடுத்தினார்கள்.. அவன் உயர்ந்தவன்” என்றெல்லாம் மேடையிலும், கட்டுரைகளிலும் குறிப்பிடுபவர்.
ஆனால் சமீபத்தில்கூட, இவர், ‘வெற்றிக்கொடிகட்டு’ பாடல் எப்போது கேட்டாலும் என் அத்துணை நரம்புகளும் பாம்புகளாய்ப் படமெடுக்கும்” என புளகாங்கிதம் அடைந்தார்.
@ இன்னொரு பாடலில், “தங்கபஸ்பம் திண்ணவனும் மண்ணுக்குள்ள..” என்கிற வார்த்தைகள் வருகின்றன. தங்கபஸ்பம் தின்றதாக சொல்லப்படும் பிரபலம் யார் என்பது அனைவரும் அறிந்ததே!
@ அரசியலுக்கு வரும் தைரியம் ரஜினிக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆனால ஆசை உண்டு. அதை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.
படையப்பா ரஜினியின் நண்பர், ” நீ அரசியலுக்கு வரணும்” என்கிறார்.
ரஜினி, “நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா” என சொல்கிறார்.
அதற்கு நண்பர், “மக்கள் நல்லா இருக்கணுமே” என்கிறார்.
உடனே ரஜினி, “ஆண்டவன் நினைத்தால் வருவேன்” என்கிறார்.
அதேபோல, ‘ஆட்சியே அவங்க பக்கம் இருக்கு?’ ஒருவர் சொல்ல.. ‘போடா, ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்ற பதிலடி வருகிறது.
“வந்துருவேன் வந்துருவேன்” என அரசியல்வாதிகளை மிரட்ட ரஜினி பயன்படுத்திய காட்சிகள் இவை.
@ நாசர் நடிக்கும் மோசமான அரசியல்வாதி, சிகப்பு துண்டு போட்டு வருவார். அதாவது, கம்யூனிஸ்டுகளை கிண்டலடிக்கிறாராம் கதாசிரியர் ரஜினி!
தவிர இந்தக் கதாபாத்திரத்துக்கு ‘சூர்ய பிரகாஷ்’ என பெயர் வைத்து இருக்கிறார் நடிகர் – தயாரிப்பாளர் -. குறிப்பாக – கதாசிரியர் ரஜினி!
தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல. ( அதே போல பாபா படத்தில், ‘இப்போ ராமசாமி’ என்ற காமெடிஅரசியல்வாதி கபாதாத்திரம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதையை மனதில் கொண்டு வைக்கப்பட்டது என்கிற பேச்சு எழுந்தது.)
@ ரஜினியின் பட டயலாக்குள் பலவற்றை த.வெ.க மேடையில் விஜய் பயன்படுத்துகிறார். இந்தப் படத்தில் “இது டிரெய்லர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான்..” வரும் ரஜினி வசனமும் அதில் ஒன்று.
@ விஜய் ரசிகர்களை தற்குறி என்கிறோம். இவர்களுக்கு முன்னோடி தற்குறி ரஜினி ரசிகர்கள்தான்.
படத்தை நிஜமென நினைக்கும் மனக்கோளாறு இவர்களுக்கும் உண்டு. படத்தில் ரஜினியை திட்டும் வில்லன் கதாபாத்திர நடிகர்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார்.
அருணாச்சலம் படத்தில், வடிவுக்கரசி (கபாதாத்திரம்) ரஜினியை, “அநாதை” என்று ஏசும். படம் வெளியான பிறகு… வேறு ஒரு படப்பிடிப்புக்காக திண்டுக்கல்லில் ரயில் ஏறுகிறார் வடிவுக்கரசி. ரயில் நகரவில்லை.
ரஜினி ரசிகர்கள் ரயில் மறியல் செய்கிறார்கள். வடிவுக்கரசி மன்னிப்பு கேட்டால்தான் ரயில் பாதையில் இருந்து எழுந்திருப்போம் என்கிறார்கள். அதன்படியே வடிவுக்கரசி மன்னிப்பு கேட்க.. அந்த அறிவாளிகள் ரயில் பாதையை விட்டு எழ.. ரயில் நகர்ந்தது.
அதே போன்ற சம்பவம் படையப்பா நாயகி ரம்யா கிருஸ்ணனுக்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருந்தது.
இது குறித்து ரம்யா கிருஸ்ணனிடம் செய்தியாளர் கேட்க.. அவர் தெளிவாக சொன்னார்:
“ரஜினிக்கு எதிரா யாரோ திட்டம் போட்டு எடுத்த படத்துலயா நான் நடிச்சிருக்கேன்.? ரஜினியே கதையை முடிவு பண்ணி, அவரே பணம் போட்டு எடுத்திருக்கிற படத்துல… அவர் அழைப்பினாலதானே அப்படி நடிச்சிருக்கேன்?! “
@ ஜெயலலிதா கதாபாத்திரமா என ஒரு பேச்சு பரபரப்பாக பத்திரிகைகளில் வெளியானது. இல்லை என படக்குழுவினர் மறுத்தனர்.
பிறகு பல ஆண்டுகள் கழித்து, படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “ஜெயலலிதாவை மனதில் வைத்துத்தான், ரம்யா கிருஸ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரத்தை உருவாக்கினேன்” என பேசினார். இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். “அம்மா இருக்கும்போது இதைச் சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்” என்று ஆவேசப்பட்டார்.
அதே நேரம் படையப்பா படம் வெளியான நேரத்தில் நடந்த ஒரு விசயத்தை, அந்தப் படத்தில் பணியாற்றிய ரமேஸ் கண்ணா தெரிவித்தார். அது, “அந்தப் படத்தை ஜெயலலிதா பார்த்துட்டு, நல்லா இருக்குனு பாராட்டினாங்க” என்றார். அடுத்து அவர் சொன்னதுதான் ஹைலைட், “அந்த படத்தின் பிரிண்ட்டை ஜெயலலிதாவுக்கு அனுப்பியது ரஜினிதான்!”
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்போது ஜெயலலிதாவுக்கு படத்தை அனுப்பினார் ரஜினி என்கிற செய்தி வெளிவரவே இல்லை.
தவிர தற்போது ரஜினி, “படையப்பா படத்தைப் பார்க்கவேண்டும் என ஜெயலலிதா கேட்டார். அனுப்பி வைத்தேன்”என்றுசொல்லி இருக்கிறார். ஜெயலலிதா இப்போது இல்லை என்பதை நினைவில் கொள்க.
இன்னொரு பக்கம்.. படையப்பா படத்தை(யும்) கருணாநிதி பாராட்டித்தள்ளினார் என பாடலாசிரியர் வைரமுத்து பதிவு செய்துள்ளார்.
அவர், “படத்தின் முதல் பிரதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. விஜயராகவா சாலையில் தேவி ஸ்ரீதேவி குறுந்திரையரங்கில் இந்தத் திரையீடு நிகழ்ந்தது. படம் பார்த்த கருணாநிதி, “படையப்பா; பழைய சாதனைகளை உடையப்பா என்றிருக்கிறது’ என்று வாயார வாழ்த்திவிட்டுச் சென்றார்” என்கிறார் வைரமுத்து.
பெண்ணடிமைத்தனம், முட்டாள்த்தனம், தமிழ் பாரம்பரியத்தை இழிவு செய்வது என பல்வேறு ஆபத்தான கருத்துக்கள் நிறைந்த படத்தை ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் பாராட்டி இருக்கிறார்கள். அதுவும் பகுத்தறிவுக்கு பெயர் போன கருணாநிதி!
தவிர, அரசியலில் எதிர் துருவங்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் படம் பார்க்கவைத்து பாராட்டு பெற்று.. ரஜினியின் திறமையே திறமை!
(தவிர படையப்பா படத்தில் சமஸ்கிருதத்தை பயன்படுத்தி காட்சி வைத்தது, பிற்காலத்தில் பெரியார் குறித்து பொய்த் தகவல் பரப்பி அவதூறு செய்தது, இவருக்கு என்ன தகுதி இருக்கிறென்று தெரியவில்லை.. முரசொலி பவள விழாவுக்கு அழைத்தது, அங்கு எதுவும் பேசாமல் திரும்பியது எல்லாம் வரலாறு..)

@ படையப்பா திரைப்பட தயாரிப்பாளர்கள் என யார் யாருடைய பெயரோ இருந்தது. 26 வருடங்களுக்குப் பிறகு அது தான் தயாரித்த படம் என சொல்லி இருக்கிறார்ரஜினி. அதாவது பினாமிகளை வைத்து படம் தயாரித்து இருக்கிறார். இது சட்டப்படி சரியா என்ற கேள்வி இப்போதும் எழ வில்லை!
இதுதான் ரஜினியின் ஆன்மிகம்.. அரசியல்!
ரஜினியாய் இருப்பதன் வசதி ரஜினிக்குத்தான் தெரியும்!
– டி.வி.சோமு
