விமர்சனம்: நூடுல்ஸ்

விமர்சனம்: நூடுல்ஸ்

ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.  இவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனுடன் ஒரு பிரச்சினையில் மோதல் ஏற்படுகிறது. மேலும்,  தனது மகள் கையில் இருந்த செல்போனை திருட முயன்றவனை ஷீலா ராஜ்குமார் பிடித்து இழுக்க அவன் கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடக்கிறான். அவன் இறந்து போனதாக பதறி உடலை வீட்டின் ஒரு அறையில் மறைத்து வைக்கிறார்கள்.

அப்போது ஹரிஷ் உத்தமனை ஆட்டோ டிரைவரை தாக்கிய ஒரு வழக்கில் கைது செய்ய   இன்ஸ்பெக்டர் மதன் வீட்டுக்குள் வருகிறார். தவிர காதல் தம்பதியிடம் நீண்ட நாட்கள்  பேசாமல் இருக்கும் (ஷீலா ராஜ்குமாரின் ) பெற்றோரும் வருகிறார்கள்.

இந்த சிக்கலான சூழலில் இருந்து காதல் தம்பதி தப்பித்ததா என்பதுதான் கதை.

பல படங்களில் வில்லனாக வந்த ஹரிஷ் உத்தமன், இந்தப் படத்தில் ஹீரோ. மனைவியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற போராடுவதாகட்டும், பிள்ளையிடம் பாசம் காண்பிப்பதாகட்டும்.. சிறப்பாகவே கதாபாத்திரத்துக்குப் பொருந்தி இருக்கிறார்.

ஷீலா ராஜ்குமார் இயல்பான குடும்பத்தலைவியாக முத்திரை பதிக்கிறார்.  ஆரம்பத்தில் காவல் அதிகாரியிடம் சட்டம் பேசுவது, பிறகு பயந்து ஒளிவது என சிறப்பாக நடித்து இருக்கிறார்.

காவல் அதிகாரியாக வரும் மதன் மிரட்டுகிறார்.  வழக்கறிஞராக வரும் வசந்த் மாரிமுத்து ரசிக்க வைக்கிறார்.

தவிர திருநாவுக்கரசு, ஜெயந்தி, மஹினா, ஷோபன் மில்லர் என அனைவருமே இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

ராபர்ட் சற்குணத்தின் இசை, படத்துக்கு பலம் சேர்க்கிறது.

பெரும்பகுதி காட்சிகள் சிறிய வீட்டுக்குள்ளேயே நகர்கிறது. ஆனாலும்  அலுப்புத்தட்டாத ஒளிப்பதிவு. விநோத்ராஜூக்கு பாராட்டுகள்.

இரண்டே நிமிடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை சிக்கலாகவும் ஆகும்.. அதே நேரம் தீர்வும் கிடைக்கும் என்ற எளிய கருத்தை மையமாக வைத்து முழுப்படத்தையும் அளித்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி.

அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.