நிறங்கள் மூன்று: திரை விமர்சனம்

நிறங்கள் மூன்று: திரை விமர்சனம்

மூன்று வெவ்வேறு கதைகளை அழகாக ஒரு புள்ளியில் இணைத்து க்ரைம் த்ரில்லராகக் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

திரைப்பட இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்கிற தீவிரத்தில் இருக்கிறார் அதர்வா. ஒரு கதையை எழுதிவிட்டு, அதை படமாக்க தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை சந்திக்கிறார். அந்த படத்துக்கான பைலட் படத்தையும் எடுத்து வருகிறார்.அந்த பைலட் படத்தில், அதிகாலை நேரத்தில் ஒரு பெண்ணை கடத்துவது போல காட்சி. இதைப் பார்த்த பள்ளி மாணவன், தனது தோழியைத்தான் கடத்துகிறார்கள் என நினைத்து விடுகிறார். ஏனென்றால், அந்த நேரத்தில் அவரது தோழி காணாமல் போயிருக்கிறார்.

இன்னொரு பக்கம், அரசியல்வாதியின் மகன் விபத்தை ஏற்படுத்திவிட, அவனை லாக் அப்பில் அடைக்கிறார் இன்ஸ்பெக்டர். பணம் வாங்கிக்கொண்டு விடுகிறார். இந்த விவகாரத்தில் மோதல்.

இப்படி வெவ்வேறு கோணத்தில் நகரும் கதைகள் ஒரு புள்ளியில் இணைகின்றன.

அதர்வா சிறப்பாக நடித்து உள்ளார். இயக்குநராக வாய்ப்புத்தேடி, ஆர்வமும் ஆதங்கமுமாக அவர் பேசுவது, போதையில் தன்னை மறந்து பேசுவது – பரிதவிப்பது என்று அசத்துகிறார்.பள்ளி மாணவனாக வரும் துஷ்யந்த் கல்லூரி முடித்தவர் போல் இருக்கிறார். ஆனால் இயல்பாக நடித்து உள்ளார்.

இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார், ஆசிரியராக வரும் ரஹ்மான் ஆகியோர் வழக்கம் போல சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

அதிலும் கிண்டலும் கேலியுமாக – தெனாவட்டாக பேசும் அந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் சரத்துக்கு முக்கியமான ஒன்று.

அம்மு அபிராமி, ஜான் விஜய், சந்தானபாரதி உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்துள்ளனர்.இரவில் – இருளில் டிஜோ டாமியின் ஒளிப்பதிவு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அபாரம்.

இசையும் படத்துக்கு பலம். குறிப்பாக ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை சிறப்பு.

வெவ்வேறு குணமுள்ள மனிதர்களை அவர்களின் நல்ல – தீய முகங்களோடு கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.. வெவ்வேறு கதைகள் போல வந்தாலும் குழப்பமில்லாமல் நேர்த்தியாக ஒன்றினைத்து அளித்திருக்கிறார்.

ரசித்துப் பார்க்கலாம்.

Related Posts