‘நாங்கள்’: திரைப்பட விமர்சனம்
தங்கள் பிள்ளைகள் மீது, பாசம் – கண்டிப்பு என்கிற பெயரில் பெற்றோர் நிகழ்த்தும் வன்முறைகள் பற்றி சொல்லும் திரைப்படம்.
1990 வருட காலகட்டம்…
மனைவியை பிரிந்து மூன்று ஆண் பிள்ளைகளுடன் வாழ்கிறார் ராஜ்குமார். பள்ளி ஒன்றை நடத்தி, நட்டமடைகிறார்.
பிள்ளைகள் மீது கண்டிப்பு என்கிற பெயரில் அதீத கட்டுப்பாடு, அடிகளும் உண்டு.. இதனால் மூன்று பிள்ளைகளும், பள்ளி செல்லும் போதும், தனது நாயுடன் விளையாடும் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் வீட்டிற்கு வரும் போது பயந்து நடுங்குகிறார்கள்.
ராஜ்குமார் கொஞ்சம் வித்தியாசமான மனநிலையில் இருக்கிறார். மின்சாரம் இல்லாமல் வீட்டை வைத்திருப்பது, தண்ணீரை வெளியில் இருந்து எடுத்து பிள்ளைகளை கொண்டுவர வைப்பது என டார்ச்சர் செய்கிறார். ஒரு கட்டத்தில் அம்மாவை தேடி செல்கிறார்கள் பிள்ளைகள். ஆனால், ‘படிக்க வைக்க வசதி இல்லை’ என்று திருப்பி அனுப்பிவிடுகிறார் தாத்தா. 
மீண்டும் சேர்ந்து வாழ விரும்பி வரும் மனைவியையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் ராஜ் குமார். குழந்தைகள் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
மனநிலை சற்று பாதிக்கப்பட்ட தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார் அப்துல். படிக்க வில்லையே என்கிற ஆதங்கத்தில் பிள்ளைகளை அடித்துவிட்டு, பிறகு அவர்களை கட்டி பிடித்து அழுவது, மனைவியை ஏற்று கொள்ளாமல் இறுக்கமாக இருப்பது என பல காட்சிகளில் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார்.
மகன்களாக நடித்திருக்கும் மிதுன் . ரித்திக் மோகன் , நிதின் தினேஷ் மூன்று பேரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அன்புக்கு ஏங்கும் காட்சிகளிலும் சரி, குழந்தை பருவத்திற்கே உரித்தான சில சேட்டைகளில் ஈடுபடுவதும் சரி… அற்புதமான நடிப்பு. றிப்பாக . மூத்த மகனாக வரும் மிதுன் மிக நன்றாக நடித்து அசத்தி இருக்கிறார்.

வேத் சங்கர் சுகவனத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவும் அற்புதம். ஊட்டியின் அழகை கண் முன் நிறுத்துகிறது.
படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு ஆகியவற்றையும் செய்திருக்கிறார் அவினாஷ் பிரகாஷ்.
பரபரப்பான காட்சிகள் சேசிங் – சண்டை காட்சிகள் போன்றவை இல்லாமல் மனித உணர்வுகளை நிதானமாக வெளிப்படுத்தி இருக்கும் திரைப்படம்.
