மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: சாதி அல்ல.. ‘செக்ஸ் ஆப்’ காரணம்?
கடந்த 2023 ஆண்டு நாங்குநேரியில் சின்னதுரை என்கிற மாணவர், பிற சாதி மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீண்டும் தாக்கப்பட்டார் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2023 ஆகஸ்ட் மாதம் சின்னதுரையின் வீடு புகுந்த சக மாணவர்கள், அரிவாளை கொண்டு சின்னதுரையை சரமாரியாக வெட்டினர். அதைத் தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து வந்தவர்கள், சின்னதுரையையும் அவரது சகோதரியையும் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தங்கையை விட, சின்னதுரைக்குதான் வெட்டு காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சின்னதுரையின் உயிர் காப்பாற்றப்பட்டது. தொடர் சிகிச்சை காரணமாக அவரால் பள்ளிக்கு வர முடியாமல் போனது. இருப்பினும் ஆசிரியர்கள் தினமும் இரண்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே சின்னதுரைக்கு பாடம் எடுக்கப்பட்டது.
அவரும் அவரது தாயாரும் தொடர்ந்து நாங்குநேரியில் தங்கியிருந்தால் பாதுகாப்பு இருக்காது என்பதால் அவர்களுக்கு பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டதுடன், சின்னதுரைக்கு பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் சேர அதிகாரிகள் உதவினார்கள். அத்துடன் அவரது தாயாருக்கும் ரெட்டியார்பட்டி பள்ளியில் சத்துணவு சமையலராக பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரும் அவரது சகோதரியும் பாளையங்கோட்டை பகுதியில் படித்து வந்தனர்.
இன்னொரு புறம், இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 7 பேரை காவல்துறை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது.
சின்னதுரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்களை பெற்றார். தன்னைப்போலவே தன்னை வெட்டிய மாணவர்களும் சிறப்பாக படிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரை அனைவரும் நெகிழ்ந்து பாராட்டினர்.
சிஏ படித்து ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே தனது கனவு என்று சின்னதுரை கூறி வந்த நிலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் 94 மதிப்பெண்களையும் பெற்று அசத்தியிருந்தார். தற்போது உயர்கல்வி பயின்று வருகிறார்.

“சின்னதுரை கிரைண்டர் என்கிற ஆப் மூலம் சிலரிடம் பழகி வந்தார். அவர்களது அழைப்பின்பேரில், தாமிரபரணி கொக்கிரகுளம் அருகே சென்றார். அங்கு ஐந்தாறு பேர் சேர்ந்து சின்னதுரையை தாக்கியதுடன், அவரது செல்போனையும் பறித்துக்கொண்டனர்” என்று முதல் தகவல் வெளியானது.
தவிர, இந்தத்தாக்குதல் குறித்தும், குறிப்பிட்ட கிரைண்டர் ஆப் மற்றும் அதன் மூலம் பழக்கமானவர்கள் குறித்தும் சின்னதுரை தகவல் தெரிவிக்க மறுப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரைண்டர் செயலி (Grindr App) என்பது என்ன,
தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர், பால் புதுமையர்கள் ஆகியோர் தங்களுக்கான துணையைத் தேடிக் கொள்ள உதவும் ஒரு டேட்டிங் செயலி (Dating App). இந்தச் செயலி தன் மூலம் ஒரு தன்பால் ஈர்ப்பாளரோ, திருநரோ, பால் புதுமையரோ, தாம் வாழும் பகுதியில் தங்கள் பாலின தேர்வுக்கேற்ப ஒரு துணையைத் தேடிக்கொள்ளலாம். இருபாலின ஈர்ப்பாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
பாலுணர்வை தீர்த்துக்கொள்ள பயன்படும் என்கிற அறிவிப்பில் உலவும் இச் செயலி, பல்வேறு குற்றச் செயல்களுக்குக் காரணமாகிறது. அதாவது இந்த செயலி மூலம் நட்பாக வருபவர்களை பாலியல் ஆசை காண்பித்து தனி இடத்துக்கு அழைத்து தாக்கி பணம், நகை, செல்போனை பறிப்பது தொடர்கதை ஆகிவருகிறது.
தகவல் தர மறுக்கும் சின்னதுரை நன்றி: விகடன்
சமீபத்தில் ராமநாதபுரத்தில் ஐ.டி. இளைஞர் ஒருவர், கிரைண்டர் ஆப் மூலம் ஒரு பெண்ணை(!) தொடர்பு கொள்ள, அந்தப் பெண் தனி இடத்துக்கு அழைத்திருக்கிறார். இவர் அங்கு செல்ல.. அங்கே அந்தப் பெண்ணுடன் நான்கைநது ஆண்கள் இருந்திருக்கின்றனர்.
அந்த இளைஞரை அடித்துத் துன்புறுத்தி, அவரது ஏடிஎம் கார்டுகளின் பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு 3 ஆயிரம் மற்றும் 13 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டனர். அந்த இளைஞரை வைத்து போன் செய்து அவரது வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லி மீண்டும் அடித்து, துன்றுத்தியுள்ளனர். இப்படியாக ரூ.37 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டனர். தவிர இளைஞரின் செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர்.
பின்னர் அந்த இளைஞரை உடலில் ஆடை இல்லாமல் வீடியோ எடுத்துக்கொண்டு அவரது செல்போனை வாங்கி அதில் இருந்த தகவல்களை முற்றிலுமாக அழித்துவிட்டு, செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் அவர்கள் செல்போனில் ஆடை இல்லாமல் எடுத்த வீடியோவை ஆன்லைனில் வெளியேற்றி விடுவோம் என மிரட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
பிறகு அந்த மர்ம நபர்களில் ஒருவர் பைக்கில் ஏற்றி வந்து வேதாளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
அதே போல கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை சூலூர் அருகே பிரவீன் என்ற வாலிபருக்கு இதே போன்ற சம்பவம் நடந்தது.
இதற்கிடையே, இந்த கிரைண்டர் ஆப்-பை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த வருடமே தெரிவித்தது.
திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜா என்பவர், இந்த Grindr Gay app என்ற பாலியல் செயலியைப் பயன்படுத்தி பிறருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பணம் பறித்ததாகவும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையனர்.
இது குறித்த வழக்கில் நீதிபதி பரதசக்கரவர்த்தி,” போலீசார் இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவது குறித்து, மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மொபைல் செயலியை தடை செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
கடந்த வாரம், பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர், “போதைப் பொருட்களை பதுக்குவோர் விற்பனை செய்வோரை தேடிப்பிடித்து வருகிறோம். அவர்களில் பத்தில் ஐந்து பேர், கிரைண்டர் ஆப் மூலம் போதை மருந்து விற்பனை செய்துள்ளனர்” என்றார்.

ஆகவே இந்த கிரைண்டர் ஆப் என்பது பாலியல் இச்சை மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்படுவது தெரியவருகிறது.
இந்த ஆப்பினை, பயன்படுத்தியே மாணவன் சின்னதுரை சிலரிடம் பழகி இருக்கிறார். அவர்களது அழைப்பின் பேரில் தனி இடத்துக்கு சென்றவர் தாக்கப்பட்டு இருக்கிறார். அந்த ஆப் மற்றும் “நண்பர்கள்” குறித்து தகவல் தெரிவிக்க மறுக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆகவே, ராமநாதபுரத்தில் ஒரு இளைஞரை இதே போன்ற ஆப் கும்பல், நிர்வாணப்படுத்தி தாக்கி வீடியோ எடுத்தது போல சின்னதுரையையும் எடுத்ததா.. அதனால் சம்பவம் குறித்து பேச அவர் தயங்குகிறாரா என்கிற கேள்வி எழுகிறது.
எப்படியானாலும் சின்னதுரை வெளிப்படையாக நடந்தவற்றைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக இருக்கும்.
சமூகவலைதளவாசிகளுக்கு ஓர் வேண்டுகோள்:
சின்னதுரை முன்பு தாக்கப்பட்டது, சாதி வெறியால் என்பது உறுதியாகி அந்த குற்றத்தில் தொடர்புள்ளோர் மீது நவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சின்னதுரை மீதான சமீபத்திய தாக்குதல், ஆப் மூலம் அப்பாவிகளை குறிவைத்து தாக்கி பணம், நகை, செல்போன் பறிக்கும் அந்தக் கும்பல் செய்தது என்றே கருத வேண்டி உள்ளது. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
ஆனால், “மீண்டும் சாதி வெறியால் தாக்கப்பட்டார் சின்னதுரை” என்று சமூகவலைதளத்தில் பதிவிடுவோர், தவிர்க்க வேண்டும். அறியாமல், வீண் பதட்டத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
முதல் காரணம், வழக்கு திசைமாற்றப்பட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் தாமதமாகும்.
இரண்டாவது காரணம், சம்பந்தமே இல்லாத விசயங்களில் “சாதி”யை காரணம் சொன்னால், உண்மையில் பட்டியலினத்தவர் சாதி வெறியால் பாதிக்கப்படும்போது அது குறித்த கவன ஈர்ப்பு இருக்காது. இது பட்டியல் இனத்தவருக்கு செய்யும் தீமையே ஆகும்.
(குறிப்பு:
முகப்பு படம்: கிரைண்டர் ஆப் மூலம் நடந்த முந்தைய தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.
மாணவர் சின்னதுரையின் படம் தவிர்க்கப்பட்டு உள்ளது.)
- டி.வி.சோமு
