“இசைங்கிறது மனசுக்குள்ள பிரளயத்தை ஏற்படுத்தணும்!”: இசையமைப்பாளர் ஜெர்சன்!

“இசைங்கிறது மனசுக்குள்ள பிரளயத்தை ஏற்படுத்தணும்!”:  இசையமைப்பாளர் ஜெர்சன்!

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள, “மருது ஆண்ட பூமியடா…” சோகத்தில் நெகிழ வைக்க, ‘வேட்டையாட வாராளே வெட்டுடைய காளி…’ என்ற பாடல் நரம்புகளை முறுக்கேற வைக்கிறது.

இப்பாடல்களுக்கு இசை அமைத்து இருப்பவர் ஜெர்சன்.

அப்பா பிரான்சிஸ் தம்பிதுரையுடன் இசை நிகழ்ச்சி ஒன்றில்….

அவரிடம், tamilankural.com இதழுக்காக பேசினோம். அப்போதுதான் தெரிந்தது.. ஆழமான இசை பாரம்பரியத்தில் இருந்து வந்திருக்கிறார் ஜெர்சன்.

பற்பல ஆண்டுகளாக, தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மக்களின் இசைஉள்ளத்தை, மேடைக் கச்சேரிகளால் கட்டிப்போட்டு வைத்திருப்பது, கோல்டன் ஆர்கெஸ்ட்ரா. இதன் நிறுவனர், பிரான்சிஸ் தம்பிதுரையின் ஒரே மகன்தான் ஜெர்சன்.

இதோ ஜெர்சன் பேசுகிறார்…

“குழந்தைங்க விளையாட்டு பொருட்களைப் பார்த்து வளர்ந்திருப்பாங்க.. நான் பார்த்தது வளர்ந்தது எல்லாம் வீடு நிறைய நிறைஞ்சி இருக்கிற கிடார், டிரம்ஸ், சாக்ஸபோன்.. இப்படி இசைக் கருவிகளைத்தான். நான் அறியாமலேயே என் மனசுல இவை எல்லாம் பதிஞ்சிருச்சு.

யாரும் கத்துத்தர அவசியம் இல்லாமலேயே, டிரம்ஸ், கிடார், கீ போர்டு எல்லாம் எ டுத்து வாசிக்கஆரம்பிச்சேன். ஆரம்பத்துல டிரம்ஸ் கைவந்துச்சு.. அப்புறம் கீ போர்டு.. அடுத்து கிடார்!

ஆனாலும் முறையான குரு வேணுமில்லையா… என் அப்பாவே எனக்கு நல்ல குருவா அமைஞ்சார். அதனால இசைக்கருவிகளை முறையா கத்துக்கிட்டேன்..!

ஏற்கெனவே சொன்ன மாதிரி வீடு நிறைய இசைக்கருவிகள், எப்பவும் இசையோடவே வாழற அப்பா,வந்துட்டு போற இசைக்கலைஞர்கள், கச்சேரி புக் செய்ய வர்றவங்க… இப்படி இசையாவே அமைஞ்சிருச்சு என் வாழ்க்கை.

நான் சின்ன பிள்ளையா இருந்தகாலத்துல, ஒரே நாள்ல ஐஞ்சு புரோகிராம் எல்லாம் அப்பா நடத்தி இருக்காங்க…

ஒரு கட்டத்தில அவங்ககூட போயி, மேடைக் கச்சேரியில டிரம்ஸ் வாசிக்க ஆரம்பிச்சேன்.

பாடகர் அந்தோணி தாசனுடன்..

அப்பா இசையோடவே தன்னோட வாழ்க்கைப் பயணத்தை அமைச்சிக்கிட்டார். ஆரம்பத்தில மேடைக்கச்சேரி.. பிறகு, சொந்தமா ஸ்டூடியோ… இதில சினிமாவோட ஆடியோ சம்பந்தமான அத்தனை வேலைகளையும் சிறப்பா முடிக்கலாம்… இதனால எல்லாம் எனக்கு இசைக்கருவிகள் வாசிக்கிறதோட.. இசை அமைக்கும் ஆர்வம் வந்தது…

மனசுக்குள்ள நிறைய புதுப்புது இசை கோர்வைகள் தோணும்..!

அந்த நம்பிக்கையில, பத்தாம் வகுப்பு முடிச்ச உடனே, தஞ்சையில இருந்து சென்னைக்குக் கிளம்பிட்டேன். இந்த நேரத்தில என் அப்பவோட சேர்த்து, அம்மா ஆரோக்ய மேரிக்கும் தேங்க்ஸ் சொல்லணும்.  என் இசை ஆர்வத்தை ஊக்கப்டுத்தியதில அவங்களுக்கும் பெரும் பங்கு இருக்கு.

சென்னைக்கு போனவுடனே.. சினிமாவில இசை அமைக்க வாய்ப்பு தேடினேன். அது அப்போ அமையல.. ஆனா அதைவிட சிறப்பான ஒன்னு அமைஞ்சது… அது, அற்புதமான காதல்.

என் மனைவி யமுனாவை சென்னையிலதான் சந்திச்சேன்.

சீக்கிரமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோம். அவங்கதான், “சவுண்ட் இன்ஜினியரிங் படி.. இசை அமைக்க ரொம்பவே உதவும்”னு சொன்னாங்க. உடனே, பாண்டிச்சேரியில சவுண்ட் இன்ஜியரிங் டிப்ளமா படிச்சேன்.

2017ல எங்க மேரேஜ் நடந்துச்சு… ஒரே ஒரு மகன்… யாசன் பிரான்சிஸ். ஒன்றாம் வகுப்பு ப டிக்கிறார்…” என்றவர், மீண்டும் தனது திரைப் பயணம் குறித்து பேச ஆரம்பித்தார்:

“கிடுகு படத்தோட எடிட்டர் ஆரஞ்ச் சிவா, எங்க பேமிலிக்கு நெருக்கமானவர். அவர்தான் அந்தப் படத்தோட இயக்குநர் வீரமுருகன்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார்.அந்தப் படத்தில ஒரே ஒரு பாடல்தான். சிவன் பற்றிய அந்த பாடலுக்கு இசை அமைச்சேன். அடுத்து அவர் இயக்கின நாதுராம் கோட்சே படத்துல நான்கு பாடல்கள்.. நான்தான் இசை அமைச்சேன். கேட்டவங்க பாராட்டினாங்க. ஆனா இரண்டு படங்களும் பிரச்சினையில சிக்குச்சு. அதனால என்னோட இசைக்கு வெளிச்சம் கிடைக்காம போச்சு.

ஆனா இயக்குநர் வீரமுருகன் நம்பிக்கையோட, “அடுத்த படத்துக்கும் நீதான் மியூஸிக் பண்றே” என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.

அதே மாதிரி இப்போ அவர் இயக்கும் கலன் படத்துக்கு நான்தான் இசையமைப்பாளர். மொத்தம் மூணு பாடல்கள். காளி ஆட்ட பாட்டு ஒன்னு, ஒப்பாரி பாடல் ஒன்னு… இரண்டும் ஆடியோ பங்சன்ல திரையிடப்பட்டு எல்லோரையும் கவர்ந்துச்சு. ரொம்ப சந்தோசமா.. மன நிறைவா இருக்கு. இன்னொரு பாட்டும் இருக்கு. படம் வெளியாகும்போது அதுவும் ஹிட் ஆகும்னு நம்புறேன்.

இடையில, சாய் கிருஷ்ணா இயக்கின காபி என்ற படத்துக்கு இசை அமைச்சேன். அதில என் இசையில, பிரபல இசை அமைப்பாளர்.. நடிகர், ஜி.வி.பிரகாஷ் பாடினார். அதுவே என் இசைக்கான அங்கீகாரமா நினைக்கிறேன். அதோட, என் மியூசக் ரொம்ப நல்லா இருக்கிறதா மனம் விட்டு பாராட்டினார்.

‘கலன்’ திரைப்பட ஆடியோ விழா…

இதற்கிடையில, பாடகர் அந்தோணிதாசன் ட்ரூப்ல, கீபோர்டு வாசிச்சி இருக்கேன். திரைப்பட இயக்குநர்கள் பலர்கிட்ட என்னை அறிமுகப்படுத்திட்டு வர்றாரு. அவரை மறக்கவே முடியாது” என்றார் ஜெர்சன்.

“இசை அமைப்பதில் உங்களுக்கான ஐடியா அல்லது வரையறை.. ஏதும் வைத்து இருக்கிறீர்களா” என்றோம்.

அவர், “இசைன்னா மனசுக்குள்ள பிரளயத்தை ஏற்படுத்தணும்.  அது கிராமிய இசையா இருக்கலாம், வெஸ்ட்டர்ன் மியூசிக்கா இருக்லாம்.. அல்லது வேற எதுவாவும் இருக்லாம்! அதே நேரம் பாடலோட வார்த்தைகள் எல்லாருக்கும் தெளிவா புரியற மாதிரி அமைக்க நினைக்கிறேன். அதுதான் அந்த வரிகளுக்கு.. வரிகளின் படைப்பாளிகளுக்கு, ரசிகர்களுக்கு நான் தரும் மரியாதையா இருக்கும்” என்கிறார் தெளிவாக.

“எதிர்கால திட்டம்…” என்று கேட்டால், “நிறைய படங்களுக்கு இசை அமைக்கணும்.. விதவிதமா இசை அமைக்கணும்…! என் பேவரைட், ஏ.ஆர்.ரஹ்மான்.. அவரை மாதிரி வரணும்!” என்கிறார் நம்பிக்கையுடன்.

நம்பிக்கையும் திறமையும் உள்ள ஜெர்சன் நிச்சயம் உச்சம் தொடுவார்!

– தமிழ் இனியா

Related Posts