’டப்பாங்குத்து’ : திரைப்பட விமர்சனம்

’டப்பாங்குத்து’ : திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் தொன்மையான கலைகளில் ஒன்றான டப்பாங்குத்து பற்றி வந்திருக்கும் திரைப்படம் இது.

சிறந்த தெருக்கூத்து கலைஞனான சங்கரபாண்டி சொந்தமாக குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

நாயகி தீப்தி, தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொடுக்கும் தரகரான சைக்கிள் மாமா என்பவரின் மேற்பார்வையில் வளர்கிறார். அப்பா யார் என தெரியாது.. அம்மா யாருடனோ சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீப்தி, நாயகனின் கலைக்குழுவில் இணைந்து நடனமாட விரும்புகிறார். ஆனால், சைக்கிள் மாமா தடைவிதிக்கிறார். தீப்தியை பணக்காரர்களுக்கு தாரை வார்க்க நினைக்கிறார்.நாயகனை காதலித்தாலும், தனது அம்மா யார் என்று கண்டுபிடித்து, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பிறகே திருமணம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் நாயகி.

இதற்கிடையே நாயகனின் கலைக்குழுவை சிதைக்க திட்டமிட்டு செயல்படுகிறார் சைக்கிள் மாமா.

நாயகியின் அம்மாவை கண்டுபிடிக்க முடிந்ததா… சைக்கிள் மாமாவின் சதித் திட்டங்களை நாயகன் வென்றாரா என்பதுதான் கதை.

மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் பிரபலமான தெருக்கூத்து கலையை – அந்த கலைஞர்களின் வாழ்க்கையை சொன்னதற்காகவே இயக்குநர் முத்துவீராவை பாராட்ட வேண்டும். தவிர படம் நெடுகிலும் பாடல் மற்றும் ஆட்டத்துடன் கூடிய திரைக்கதைக்காக இன்னொரு பாராட்டு.

நாயகன் சங்கரபாண்டியன் சிறப்பாக நடித்து உள்ளார். சைக்கிள் மாமாவின் சதித் திட்டங்களால் ஆத்திரமடைவது, தாயின் மறைவுக்குக் காரணமாகிவிட்டோமே என அழுது புலம்புவது என அருமையாக நடித்து உள்ளார்.

நாயகி தீப்தியும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகனுடன் இணைந்து தந்தை குறித்த ரகசியத்தை சொல்லும் இறுதிக் காட்சியில், நடனத்துடன் சேர்த்து வெளிப்படுத்தும் நடிப்பு சிறப்பு.

நாயகனின் நடனக் குழுவில் பப்பூன் வேடம் போடும் காதல் சுகுமார், நகைச்சுவையோடு, சிறந்த நடனக்கலைஞர் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக உடுக்கை பூசாரி பாடலில் அசத்திவிட்டார். வாழ்த்துகள்.

வில்லனாக வரும் ஆண்ட்ரூஸ் “தர்மலிங்கம்” , கதாநாயகியின் தோழியாக வரும் – துர்கா “ராசாத்தி” உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

சரவணன் இசையில் நாட்டுப்புற பாடல்கள் அனைத்தும் தாளம்போட வைக்கின்றன. நிறைய பாடல்கள் இருந்தாலும் அலுப்புதட்டாமல் ரசிக்க வைத்த அவருக்கும் பாராட்டுகள். குறிப்பாக தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளைக் கொண்டு உருவாகி இருக்கும் பாடல்.. அதை எழுதியவர்.. ஆகா!

ஒளிப்பதிவாளர் ராஜா கே.பக்தவச்சலா, கிராமிய காட்சிகளை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள எஸ்.டி.குணசேகரன் நடனம் அமைத்திருக்கும் தீனா மாஸ்டர் ஆகியோரும் தங்கள் பணியை நிறைவாக செய்து இருக்கின்றனர்.

கால ஓட்டத்தில் அழிந்து வரும் தெருக்கூத்து கலையை சிறப்பாக கொண்டு வந்து கண்முன் நிறுத்திய இயக்குநர் முத்துவீராவுக்கு மீண்டும் பாராட்டுகள். குறிப்பாக, புதிய பொருளாதார கொள்கை வந்த 1990களில்தான் பாரம்பரிய கலைகள் அழிந்தன என்கிற புரிதலோடு படம் துவங்கியது சிறப்பு.

தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.