மூக்குத்தி அம்மன்… பகுத்தறிவா, பிராமணருக்கு ஆதரவா?: : வெடிக்கும் சர்ச்சை!
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜே. சரவணனுடன் இணைந்து இயக்கி ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள படம். நயன்தாரா அம்மனாக தோன்றுகிறார்.
“போலி கார்பரேட் சாமியார்களை நம்பாதீர்கள் என்கிற கான்செப்டுடன் வந்திருக்கும் படம்” என்ற விமர்சனத்தையும், “பிராமணர்களுக்கு ஆதரவாக இந்துத்துவத்தை வளர்க்கிற படம்” என்றும் ஒரே நேரத்தில் இருவித விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
வெள்ளிமலை பகுதியில் காட்டை அழித்து ஆசிரமம் கட்ட முயலலும், கார்பரேட் சாமியார், அதை எப்படி நாயகன் தடுக்கிறார் என்பதே அடிப்படை கதை.
சமூகவலைதளங்களில் பலரும், “ஈசா யோகா மையம் அமைந்திருப்பது வெள்ளியங்கிரி மலை. தவிர, காடுகள் மற்றும் காட்டு உயிரிகளை அழித்தது என புகார்களுக்கு ஆளானது அம்மையம். அதே குற்றச்சாட்டுக்களை, படத்தின் வில்லனான கார்பரேட் சாமியார் மீது வைக்கிறது படம். இதனால், “ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவை வில்லனாக சித்தரிக்கிறது இப்படம்!” என்று எழுதி வருகின்றனர்.
அதே நேரம், “படத்தின் வில்லனான கார்பரேட் சாமியாரின் நடை உடை பாவனையில், ஜகி வாசுதேவ் மட்டுமல்ல.. யாகவா முனிவர், ராம்தேவ், நித்தியானந்தா என பிராமணர் அல்லாத சாமியார்களை மட்டுமே படம் குறிவைக்கிறது! கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இடைத்தரகர் தேவையில்லை என்று படம் சொல்கிறது. ஆனால் ஆதிகாலத்தில் இருந்து இப்படி இடைத்தரகர்களாக இருக்கும் பிராமணர்களை படம் சுட்டிக்காட்டவில்லை. மேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்களை படத்தில் காட்டவில்லை..” என்று படத்தை எதிர்ப்போர் விமர்சிக்கிறார்கள்.
படத்தை ஆதரிப்போர், “பாபா என்றதும் சிவசங்கர் பாபா பெயரும் நினைவுக்கு வரும். அவரைப்போலவே படத்தின் வில்லனும் ஆடுகிறார். சிவசங்கர் பாபா பிராமணர்தான்.
தவிர, மூக்குத்தி அம்மன் கோயில் புற்றில் பால் ஊற்றெடுக்கும் காட்சியில் அதை வியந்து போற்றுவது பிராமண தோற்றமுள்ள கதாபாத்திரங்கள்தான். தவிர, “புள்ளையாண்டானுக்கு வேலை கிடைக்கும்..” என்று சொல்லி ஒரு பிராமணர் யாகம் நடத்த.. அதை ஒரு கதாபாத்திரம் கிண்டலடிக்கும் காட்சியும் உள்ளது. ஆகவே எவருக்கும் ஆதரவாக படத்தை எடுக்கவில்லை” என்கிறார்கள் ஆதரிப்போர்.
“கிறிஸ்துவ பள்ளியில் மாணவர்களை மதம் மாற்றுவது போல எடுத்திருக்கிறார்கள்! மக்களை சரி சமமாக நடத்தி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தந்தவர்கள் கிறிஸ்துவர்களே. தங்களது மத இழிவைப் போக்கத்தானே ஒடுக்கப்பட்ட இந்து மக்கள் கணிசமானோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார்கள்” என்று விமர்சனம் வர, “வெள்ளையர் காலத்தில் கிறிஸ்தவர்கள் மக்கள் தொண்டு செய்தனர். அதனால் ஈர்க்கப்பட்டும், தங்கள் மத இழிவைப் போக்கவும் இந்து மக்களில் கணிசமானோர் மதம் மாறியது உண்மையே. ஆனால் தற்போது பிரெய்ன்வாஷ் செய்தும், ஆசை காட்டியும்தானே மதமாற்றம் நடக்கிறது!” என்கிறார்கள் படத்தை ஆதரிப்போர்.
மேலும் இவர்கள், “இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விமர்சிக்கும் நபர்களை தோலுறிக்கும் விதமாக, ‘ நான் மசூதியில் கஞ்சி குடிப்பேன்.. சர்ச்சில் அப்பன் சாப்பிடுவேன்.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் குடிக்கமாட்டேன்.. ‘ என்று ஒரு நபர் பேசும் காட்சி வருகிறது. இதுதான் சிலரை ஆத்திரப்பட வைத்துள்ளது.
ஆனால், இதே படத்தில், ‘தமிழ்நாட்டில் மட்டும்தான் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை. ஆகவேதான் இங்கே ஆசிரமம் வைக்க எல்லா உதவிகளையும் செய்கிறார்கள்’ என்றும் ஒரு வசனம் வருகிறது. பிறகு எப்படி இந்துத்துவத்துக்கு ஆதரவான படம் என இதைச் சொல்ல முடியும்?” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு, “கடவுளை வணங்க இடைத்தரகர்கள் வேண்டாம் என்பதை மட்டும் படம் சொல்லவில்லை. சமையல்கட்டிலேயே பெண்களை முடக்கிப்போடுவது குறித்த காட்சி, ஓடிப்போன கணவனை மனைவி புறக்கணிக்கும் காட்சி என பெண்ணுரிமை குறித்தும் காட்சிகள் உள்ளன. நகைச்சுவையுடன் நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறோம்!” என்கிறார்கள்.
ஆக, மூக்குத்தி அம்மன் திரைப்படம், சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மட்டும் மறுக்க முடியாது.
(‘மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து சமூகவலைதளத்தில் வலம் வரும் கருத்துக்களின் தொகுப்பே இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. – ஆசிரியர், tamilalankural.com)