போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைம்ஸ் செயலியை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ. கே.கணபதி
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்கவும், பெற்றோர் – மாணவர் – ஆசிரியர்கள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு கூடவம் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் சைம்ஸ் என்கிற ஆப் உருவாக்கப்பட்ட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் மாணவரின் வருகை உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும். தவிர பாடங்கள் குறித்த தகவல்களும் மாணவர்களுக்குச் சென்றடையும். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்குமான உறவும் நேரடியாக ஏற்படும். இவற்றின் காரணமாக மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் மேலும் மேம்பாடு ஏற்படும்.
இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர் மாதிரி அரசு மேநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மாலதி இருந்தபோது, தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இந்த ஆப்-பினை அங்கு அறிமுகம் செய்தார். பிறகு சென்னை கோடம்பாக்கம் அரசு மேநிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டின்போது மாறுதலாகி வந்த பிறகு சென்னை மாவட்டத்திலேயே முதன் முறையாக இந்த செயலியை அறிமுகம் செய்தார்.
தற்போது போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் மாலதி, இங்கும் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த “சைம்ஸ்” செயலியை, மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. காரப்பாக்கம் கே.கணபதி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி முனனிலை வகித்தார். மற்ற ஆசிரியர்களும் பெற்றோர் – ஆசிரியர் கழக உறுப்பினர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலதி, இந்த செயலியின் நன்மைகளை எடுத்துக் கூறினார்.
எம்.எல்.ஏ. கே.கணபதி பேசும்போது, அரசுப் பள்ளிகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். மேலும் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் இந்த அரசு செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, “எனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் இந்த ஆப் இருப்பதாக தெரியவில்லை. தலைமை ஆசிரியர் மாலதி, முன்முயற்சி எடுத்து இந்த ஆப்பினை அறிமுகப்படுத்தி உள்ளார். அது போல மற்ற பள்ளிகளிலும் இந்த சாம்ஸ் ஆப்பினை உருவாக்க வேண்டும்” என்றார்.

