படை தலைவன்: திரைப்பட விமர்சனம்
விஜயகாந்த் தனது படங்களில், பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுவார். அவரது மகன் சண்முகபாண்டியன், இந்தப் படத்தில் அவரது மகன் சண்முகபாண்டியன், பயங்கரமான மனிதர்களிடமிருந்து வன விலங்குகளை காப்பாற்றுகிறார்.
நாயகன் வேலு, தனது தந்தை மற்றும் தங்கையுடன் வாழ்கிறார். இந்த இருவரைவிட, தான் வளர்க்கும் யானையுடன் வாழ்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். அவரும் அவரது தந்தையும் யானையை அப்படி பார்த்துக்கொள்கிறார்கள். 
இந்த நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் – வட்டிக்கு விடும் ஆசாமி – யானையை அபகரிக்கப் பார்க்கிறார். முடியவில்லை என்றதும், ஆளை வைத்து யானைக்கு மதம் பிடிக்க வைத்து, சிக்கலை ஏற்படுத்துகிறார். வனத்துறை வசம் சென்றுவிடுகிறது யானை. அதை மீட்க ஏகத்துக்கு முயற்சிக்கிறார் நாயகன் வேலு. ஆனால் வனத்துறை வசம் இருந்த யானை தப்பி ஓடிவிட்டது என்கிறார்கள். அந்த யானையைத் தேடி பயணமாகிறார் வேலு.
யானை கிடைத்ததா… அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் என்ன என்பதுதான் கதை.
நாயகன் வேலுவாக, சண்முகபாண்டியன் நடித்து உள்ளார். தனது முந்தைய படங்களான மதுரைவீரன், சகாப்தம் ஆகியவற்றில் வந்ததைவிட வித்தியாசமான தோற்றத்தில் மிரட்டுகிறார். தந்தை மீதும், தங்கை மீதும் காண்பிக்கும் அதே பாசத்தை யானை மீதும் வெளிிப்படுத்தும் பாங்கு ரசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளில் மிரள வைக்கிறார். அதுவும் கிளைமாகஸ் சண்டைக் காட்சி அதிரவைக்கிறது.
நாயகனின் தந்தையாக வருகிறார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. அருமையான நடிப்பு. யானையை பறிக்க நயவஞ்சகமாக செயல்படும் உறவினரிடம் அவர் பேசும் காட்சியும், பார்க்கும் பார்வையும் ஒரு உதாரணம். அதே போல, அரசு அதிகாரியிடம், “கூச்சப்படாம கேளுங்க.. எவ்ளோ வேணாலும் தர்றோம்.. எங்க யானையை விட்டுருங்க” என கதறும் காட்சியில் உருக வைக்கிறார்.
நாயகி யாமினி சந்தருக்கு அவ்ளவாக நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், கிராமத்தில் எல்லோரும் பயந்து நிற்க… தைரியமாக, “நான் யானையைக் காட்டுகிறேன்.. வா” என புறப்பட்டுச் செல்லும் இடத்தில் கவனிக்க வைக்கிறார்.
நாயகியின் தந்தையாக வரும் முனிஷ் காந்த் சிறப்பாக நடித்து உள்ளார். ஆனால் நகைச்சுவையைத்தானே அவரிடம் எதிர்பார்க்கிறோம். அது இல்லை. சீரியஸான கதாபாத்திரம்.
சிறு வேடம் என்றாலும் அருள்தாஸ் ஈர்க்கிறார். தனது மாடுகளை பறிகொடுத்த ஆதங்கத்தை கண்களிலேயே வெளிப்படுத்துகிறார். கிளைமாகஸ் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
மிக முக்கியமாக…. ஏ.ஐ. உருவாக்கத்தில் விஜயகாந்த் ஒரு காட்சியில் வருகிறார். அசத்தலான காட்சி. திரையில் கண்டு களியுங்கள்.
மற்றபடி ஸ்ரீஜித் ரவி, யூகி சேது, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
எஸ்.ஆர். சதீஷ்குமாரின் கேமரா கவர்கிறது. குறிப்பாக வனப்பகுதிகளை கண் முன் நிறுத்தி இருக்கிறார்.
வழக்கமான காதல், மோதல் என்று இல்லாமல் ( படத்தில் டூயட் கூட கிடையாது!) விலங்குகள் மீது வைக்கும் பாசம் குறித்த படத்தை அளித்ததற்காக இயக்குநர் அன்புவை பாராட்டலாம்.
