விமர்சனம்: மிஷன் சாப்டர் 1

விமர்சனம்: மிஷன் சாப்டர் 1

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் 1.

போலீஸ் அதிகாரி அருண் விஜய் தன் மகளின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார். அங்கு அறுவை சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. ஹவாலா மூலம் வந்த பணத்தை வாங்குவதற்காக பேருந்தில்  செல்கிறார். அப்போது ரவுடிகள் அவரிடமிருந்து பணத்தை பறிக்க முயல்கின்றனர். அவர்களை விரட்டி அடிக்கிறார் அருண்விஜய். இந்த தகராறை அடுத்து, காவல்துறை அருண்விஜயை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

அந்த  சிறையில்  பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூவர் அடைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை விடுவிப்பதற்காக வெளியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் திட்டமிடுகிறார். அதன்  ஒரு பகுதியாக, சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கலவரத்தை மூட்டுகிறார். இந்த கலவர சூழலை பயன்படுத்தி தீவிரவாதிகளை தப்ப முயல்கிறார்கள். இதை, யில் வார்டன் எமி ஜாக்சன் தடுக்க முனைய,  அவரால் முடியவில்லை.

இதை உணர்ந்து கொண்ட அருண் விஜய் லண்டன் சிறையில் இருந்து மதில் சுவர் தாண்டி குதித்து தப்பிக்க முயலும் நூற்றுக்கணக் கான கைதிகளை ஒற்றை ஆளாக போராடி தடுத்து நிறுத்துகிறார்.

இதை அறிந்த  தீவிரவாதி கும்பல், அருண் விஜயை கொலை செய்ய முயல்கின்றனர்.  இதற்கிடையில் மருத்துவமனையில் இருக்கும் குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு அருண்விஜய்யை ஒரு தீவிர வாதி மிரட்டுகிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ஆஜானுபாகுவான உயரம், அதிரடி சண்டை என நிஜ போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார் அருண்விஜய். அதே நேரம், மகள் மீது கொண்ட பாசம், அந்த குழந்தையை காப்பாற்ற துடிக்கும் துடிப்பு என நெகிழ வைக்கும் நடிப்பையும் அளித்து இருக்கிறார்.

மதராசப்பட்டினம் படத்தில் எமி ஜாக்சனை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய ஏ.எல். விஜய் மீண்டும் அவரை தமிழ் திரைக்குக்  கொண்டு வந்திருக்கிறார்.  அருண் விஜய்க்கு ஈடாக, எமியும் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார்.  செவிலி பெண்ணாக வரும் நிமிஷா சஜயனும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துமே கச்சிதம். ஆக்‌ஷன் பிரியர்களை நிச்சயம் இந்த மிஷன் சாப்டர் 1 ஈர்க்கும்.

Related Posts