மெய்யழகா… சொந்த ஊர் அல்ல.. சென்னைதாம்பா சொர்க்கம்!: கலைமாமணி வி.கே.டி.பாலன்

மெய்யழகா… சொந்த ஊர் அல்ல.. சென்னைதாம்பா சொர்க்கம்!: கலைமாமணி வி.கே.டி.பாலன்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி- அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தைப் பாராட்டி பலரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நானும் நெகிழ்ந்து பாராட்டினேன். பாராட்டுகிறேன். படம் பார்த்து கலங்கினேன்.

உறவினரின் சூழ்ச்சியால் வீட்டை இழந்து, அதனால் மனம் நொந்து சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார் அரவிந்த்சாமி. ஆனாலும் ஊர்ப்பாசம் இருக்கிறது. போகவும் மனம் தடுக்கிறது. தவிர்க்க முடியாத ஒரு திருமணத்துக்காக ஊருக்குச் செல்கிறார். அங்கே ஊரை மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.

படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும், “சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து பாரம்பரியத்தை இழந்துவிட்டோம், நிலாவைப் பார்க்க மறந்துவிட்டோம்” என்று நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சுவாமி, படத்தை வெளியிட்ட சக்திவேலன் உள்ளிட்டோர் ஆதங்கப்பட்டனர். எனக்கும்.. என்னைப்போன்ற வெகு பலருக்கும் அந்த ஆதங்கம் உண்டு.

இந்த நிலையில், “சொந்த ஊர் அல்ல… சென்னைதான் சொர்க்கம்” என பிரபல தொழிலதிபர் மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வி.கே.டி. பாலன் பேசிய மூன்று நிமிட வீடியோ நமது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், “ஜமீன்கள், சொத்து உள்ளவர்கள், ஆதிக்க சாதியினருக்குத்தான் சொந்த ஊர் பாசம் உண்டு” என்று சொல்வதும், “என்னை சொந்த ஊர் அடிமைப்படுத்தியது… சென்னைதான் தலைநிமிர்ந்து வாழ வைத்தது” என்பதும் சிந்திக்க வைக்கிறது.

மேலும் சொந்த ஊரில் அவர் பட்ட அவமானங்களை, பாலன் அய்யா சொல்லும் போது நமது கண்கள் கலங்குகின்றன…

மெய்யழகன் படத்தை உணர்வு பூர்வமாக சிறப்பாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிரேம்குமார். அதில் சந்தேகமில்லை.

அதே நேரம் அதற்கு நேரெதிர் கோணம்… ஊருக்கே செல்ல விரும்பவில்லை என சொல்பவர்கலின் கோணம், நெஞ்சைக் குத்தும் நிஜம்.

– டி.வி.சோமு

வி.கே.டி.பாலன் அவர்கள் பேசிய நெஞ்சை உருக்கும் அந்த வீடியோ..

Related Posts