” ‘மெய்யழகன்’ ஒரு நச்சு- மோசடியான கற்பனை!”: ‘காட்டாறு’ இதழ் விமர்சனம்!
படத்தின் நீளம் விமர்சிக்கப்பட்டாலும், “மனித அன்பை, உறவுகளின் சிறப்பை, ஊர் நினைவுகளை சிறப்பாக கூறிய படம்” என்று பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் படம் வெளியாகி இருக்கும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் படத்தை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தி.வி.கழகத்தின் காட்டாறு இதழின், முகநூல் பக்கத்தில், “இப்படம் நச்சு எண்ணத்தை விதைக்கிறது” என்று விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த விமர்சனம்:
“அன்பு, அக்கறை, பாசம், மனிதநேயம் வெள்ளந்தித்தன்மை போன்ற பண்புகள் அனைத்தும் – தான் பிறந்த ஜாதியைச் சேர்ந்த சொந்தக்காரர்களிடம் மட்டும் தான் இருக்கும் என்ற ஒரு மோசடியான கற்பனையை மெய்யழகன் விதைக்கிறான்.
குடும்பப் பெருமை, பிறந்த வீட்டுப் பெருமை, பிறந்த ஊரின் பெருமை இவைகளை எல்லாம், பிறப்பின் அடிப்படையில் ஆணாதிக்கம், ஜாதி ஆதிக்கம், ஊர் ஆதிக்கங்களைப் பெற்றவர்களுக்கு மெய்யழகன் மலரும் நினைவுகளை உருவாக்கலாம்.
ஆனால், அதே நீடாமங்கலம் பகுதிகளில், சேரிகளில் அடைக்கப்பட்டு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ, அவர்களின் இன்றைய வாரிசுகளுக்கோ, அந்த கிராமத்து வாழ்க்கை, எந்த வகையான நினைவுகளை மலரவைக்கும்? நீடாமங்கலம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த கிராமமும், மகிழ்வான மலரும் நினைவுகளைக் கொடுக்க வாய்ப்பே இல்லை.
பெரியாரிய அமைப்புகளில் எத்தனையோ தோழர்கள் ஜாதி, மதம், அமைப்புகள் கடந்து, தங்களுக்குள் அன்பு, அக்கறை, பாசம், மனித நேயங்களோடு வாழ்வதையும் – நோய்நொடிகள், நல்லது கெட்டதுகளில் ஜாதிக்காரர்களைவிட உண்மையான அக்கறையோடு ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்பதையும் நேரடியாகப் பார்த்து வாழும் நம்மைப் போன்றவர்களுக்கு மெய்யழகன் ஒரு தவறான வழிகாட்டுவதாகவே தெரிகிறது.
இயக்குநர் பிரேம்குமார் அவர்கள், எமது தோழர்களுக்கு நண்பர். 1996, 97 ல் நம்முடன் களத்தில் பணியாற்றிய கருஞ்சட்டைத் தோழர்கள் அவருடன் இருக்கிறார்கள். பெரியாரைப் பற்றியும் நன்றாக அறிந்து வைத்துள்ளவர். நாம் சொல்லும் விமர்சனங்களால் அவர் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராகச் சென்றுவிட மாட்டார். எனது நோக்கமும் அது அல்ல.
ஊர்ப் பெருமை, ஜாதிப்பெருமை, குடும்பப் பெருமை, ஆண் பெருமை போன்ற எல்லா ஆதிக்கச் சிந்தனைகளும் பல பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சியவாதிகளின் மனதிலும் இன்னும் இருக்கிறது என்ற இந்தச் சூழல் மெய்யழகன் போன்ற படங்களால் மேலும் கெட்டிதட்டிப் போய்விடக்கூடாது என்று தோழமையுடன் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன்.
வீடு என்ற எல்லையைக் கடந்த குடும்பங்களையும், ஜாதி என்ற எல்லையைக் கடந்த சொந்தங்களையும் உருவாக்குவதே ஜாதி ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்பில் மிக முக்கியமான கடமை ஆகும். அதை நோக்கிப் பயணிக்க வேண்டிய முற்போக்காளர்களையும், மக்களையும் மெய்யழகன் எதிர்த்திசையில் சிந்திக்க வைத்துள்ளான் என்பதை ஓ.டி.டி வெளியீட்டிற்குப் பிறகு வரும் விமர்சனங்கள் வழியாக அறிய முடிகிறது. எனவே தான் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன்.
ஏற்கனவே அன்பு, பாசம், அக்கறை, குடும்பப் பெருமை. இயற்கையான வாழ்க்கை போன்ற ஆயுதங்களால் வலிமை பெற்றிருக்கும் ஜாதியையும், குடும்பம் எனும் ஆணாதிக்க நிறுவனத்தையும் மேலும் வலிமைப்படுத்த வரும் எவையானாலும் அவற்றை நாம் கவனத்துடன் கையாள வேண்டும். நாமும் உணர்ச்சி வசப்பட்டு, Toxic சிந்தனைகளுக்கு மென்மேலும் மெருகேற்ற வேண்டியதில்லை” – இவ்வாறு காட்டாறு இதழின் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
( குறிப்பு:
மெய்யழகன் படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் சொந்த ஊர்ப் பாசம் – சொந்தங்களின் நேசத்தை மிக நெகிழ்ந்து பாராட்டி tamilankural.com இதழில் கட்டுரைகள் எழுதினேன்; யு டியுப் சேனல்களில் பேசினேன்.
அதே நேரம், ‘சொந்தபந்த பெருமை, நெகிழ்ச்சி என்பதெல்லாம் வசதியும், வலுவான சாதி பின்னணியும் கொண்டவருக்குத்தான்’ என்பதை, ஒரு தொ.கா. நிகழ்ச்சியில் பொட்டில் அறைந்தாற்போல சமூக ஆர்வலர் வி.கே.டி.பாலன் பேசியதையும், இப்படத்துடன் தொடர்பு படுத்தி, கடந்த செப்டம்பர் 29 அன்று செய்தி வெளியிட்டேன். அந்த செய்தி – வீடியோ கீழே!; டி.வி.சோமு, ஆசிரியர், tamilankural.com)
“மெய்யழகா… சொந்த ஊர் அல்ல.. சென்னைதாம்பா சொர்க்கம்!”: கலைமாமணி வி.கே.டி.பாலன் பேட்டி
https://tamilankural.com/meiyazhagan-karthi-arvind-swamy-vkt-balan-caste-house-kalaignar-tv/

