“விஜய் செயல்பாடு பிடிக்கல..!”: த.வெ.க.வில் இருந்து விலகி பா.ம.க-ல் இணைந்த இளைஞர்கள்!
நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. முதல் மாநாடு நடைபெற உள்ள சூழலில் அக்கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பா.ம.க.வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி உள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடு, இன்று (அக்.27), விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு மைதானத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் கட் அவுட்களோடு, சுந்திரப்போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் கட் அவுட்டும் வைக்கப்பட்டது கவனத்தை ஈர்த்தது.
“அஞ்சலை அம்மாள் மிக முக்கியமான சுதந்திரப்போராளி என்றாலும், பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்பது வருத்தமான உண்மை. அவருக்கு மாநாட்டில் கட் அவுட் வைத்திருப்பது, வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் – குறிப்பாக பா.ம.க.வினர்- இடையே ஈர்ப்பை ஏற்படுத்தும் என நினைத்தே கட் அவுட் வைத்து உள்ளனர். ஏற்கெனவே, பா.ம.க. கட்சிக் கொடியில் பிரதான இடம் பிடித்திருக்கும் சிவப்பு, மஞ்சள் நிறத்தை தனது கட்சிக் கொடியில் வைத்தார் விஜய். அதோடு, பா.ம.க.வுக்கு முக்கியமான யானை குறியீடையும் கொடியில் வைத்தார்” என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், திண்டிவனம் தைலாபுரத்தோட்டத்தில், .ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அவர்கள், “தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், பாமகவில் இணைந்ததோம்” என தெரிவித்து உள்ளனர்.
விக்கிரவாண்டி வி.சாலையில் த.வெ.க. மாநாடு நடைபெற உள்ள நிலையில், திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
