“சூர்யாவுக்குத்தான் அரசியலுக்கு வர தகுதி இருக்கு!”: ‘கங்குவா’ விழாவில் போஸ் வெங்கட்!
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘கங்குவா’திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டும் பேசினார்.
அவர், “ நான் தற்போது பல இடங்களில் அரசியல் பேசுகிறேன், அதனால் இந்த இடத்திலும் அரசியல் பேச விரும்புகிறேன்.
ஒரு நடிகர் என்றால் தன் ரசிகர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும், அது இந்த அரங்கத்தில் சிறப்பாக இருப்பதை பார்க்கும்போதே சூர்யாவின் ரசிகர்களின் ஒழுக்கம் தெரிகிறது. அதேபோல், ரசிகர்களுக்கு தர்மம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்,
மக்களின் பிரச்சனைகளை கவனித்து அதனை தீர்க்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், அவர்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும், பிறகு தான் அரசியலுக்கு வர வேண்டும்.
அந்த வகையில், நடிகர் சூர்யா இவை அனைத்தையுமே செய்துவிட்டார், எனவே அவர் அவரது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மேலும் சில நல்ல படங்களை கொடுத்த பிறகு நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்.
நடிகராக இருந்தாலும் சரி, பேச்சாளராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் மக்கள் தலைவராகலாம், அரசியலுக்கும் வரலாம். ஆனால், அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர்கள் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும், அதன் பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் கருத்து. அப்படி பார்த்தால் நடிகர் சூர்யா, தமிழக மக்களுக்காக பலவற்றை செய்து விட்டார். எனவே, அவர் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.” என்றார்.
நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகர் போஸ் வெங்கட் பேசியிருந்தாலும், அவரது பேச்சு முழுக்க முழுக்க நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.