மெரினா போதை ஜோடி: சொல்வது உண்மையா?

மெரினா போதை ஜோடி: சொல்வது உண்மையா?

நேற்றுமுன்னிதனம் நள்ளிரவில் மெரினாகடற்கரைச் சாலையில் நின்று கொண்டு இருந்த காரை எடுக்கக்கோரி காவல்துறையினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். காரின் உள்ளே இருந்த ஆணும் பெண்ணும் முழு போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரை மிக இழிவாகப் பேசியதுடன், அந்த இருவரும் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

அந்த ஜோடியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த நபர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ ஒன்றை சென்னை மாநகர காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட அவர், “ஓவர் போதையில் இருந்ததால் நிதானமாக இல்லை. நான் என்ன பேசினேன் என்பது கூட நினைவில் இல்லை” என்றும் தெரிவித்து உள்ளார்.

மது அருந்தினால், என்ன செய்கிறோம் – பேசுகிறோம் என்பதே தெரியாமல் போய்விடுமா?

ஓரளவுக்கு மேல் மது அதிகமானால் இப்படி ஆகும்.

மது அருந்துவோர் பலருக்கும் இப்படி நிகழ்ந்திருக்கும்.

“நேத்து சரக்கு அடிச்சோம்… யாரு கூட அடிச்சோம்.. எப்படி வீட்டுக்கு வந்தோம்.. யாரு கிட்ட எல்லாம் போனில் பேசினோம்..” என்கிற குழப்பம், மறுநாள் காலையில் வரும்,

இப்படி நினைவில்லாமல் செயல்படுவதை, பிளாக் அவுட் என்பார்கள்.

இந்த பிளாக் அவுட் ஏன் ஏற்படுகிறது?

மது அருந்தும்போது, இரத்தத்தில் ஆல்கஹால் கலக்கிறது அல்லவா.. அதை, Blood Alcohol Concentration என்பார்கள். சுருக்கமாக பி.ஏ.சி. என்று வைத்துக்கொள்வோம்.

மது அருந்தும்போது இந்த அளவு.. அதாவது பி.ஏ.சி. அளவு 0.03ல் இருந்து, 0.12 வரை இருந்தால், மனநிலை சற்று மாறும். அதாவது தான் மிகப்பெரிய பலசாலி என்றும், தனக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும் என்றும் தோன்றும். இதனால்தான் சற்று மது அருந்தியவர்கள் உரக்கப் பேசுவதும், வீரமாகப் பேசுவதும். (சில அரசியல்வாதிகள் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.)

இந்த பி.ஏ.சி. அளவு 0.9க்கு மேல் உயர்கையில் ( அதாவது மேலும் மது அருந்தும்போது) நினைவுகள் மழுங்கத்துவங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பதும்கூட நடக்கும். பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகள் குறையும். உடல் தடுமாறும்.

இந்த பி.ஏ.சி. இன்னும் அதிகம் ஆகும்போது, மது அருந்தியவருக்கு தான் என்ன செய்கிறோம், எங்கிருக்கிறோம் என்பதே கூட மனதில் பதியாது. திடீரென பாசக்காரராக மாறி கட்டி அணைப்பார். அல்லது கழுத்தை நெரிக்கவும் கூடும்.
இது எதுவுமே அவர் அறிந்து செய்வதல்ல. பிறகு இது நினைவிலும் இருக்காது.

சரி.. எதுவுமே தெரியாமல், புரியாமல் எப்படி சரியாக வீட்டுக்கு வருகிறார், குடித்தவர்?

நம் வீடு, நாம் செல்லும் வழி போன்றவை நமது மூளையில் பதிவாகிறது. பிளாக் அவுட் நேரத்தில் ஏற்கெனவே பதிவானபடி சென்றுவிடுகிறோம். ஆனால் இதெல்லாம் நினைவில் இருக்காது

இன்னொரு விதத்திலும் போதை அதிகமாக ஏறிவிடும்.

குறைந்த நேரத்தில் அதிகமாகக் குடிப்பதாலோ… நெடுநாள் குடிக்காமல் இருந்து மீண்டும் குடிப்பதாலோ இந்த பிளாக் அவுட் ஏற்படும். ( அதற்காக தினமும் குடிக்கணும் என்பது அர்த்தமல்ல.)

இந்த பிளாக் அவுட் நேரத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. இதுதான் மிகப்பெரிய ஆபத்து. தனக்குத் தோன்றியதை எல்லாம் பிளாக்அவுட் ஆசாமி பேச… எதிரே இருக்கும் ந(ண்)பர், “ஓ…இதெல்லாம் மனசுல வச்சிருக்கானா.. இப்பதான் தெரியுது…காலி பண்ண வேண்டியதுதான் இவனை!” என்று நினைப்பார்.

பேசிய நபருக்கோ மறுநாள் காலையில் எதுவுமே நினைவில் இருக்காது. மீண்டும் மது அருந்தும்போதுதான் முந்தைய போதையில் பேசியது நினைவுக்கு வரும்
இதுபோன்ற பேச்சுக்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றாலும், பிறருக்கு தொந்தரவாக இருக்கும்போது அதை அனுமதிப்பார்களா?

இப்படித் தன்னைத்தானே பிளாக் அவுட் செய்துகொள்ளும் மூடத்தனமான மது போதையை விட்டு விலகுவதே சரி.

ஆனால், திடீரென குடியை விட்டால் உடல் நலன் பாதிக்குமாமே என்று அக்கறையுடன்(!) சொல்லும் குடியாளர்கள் உண்டு.

ஆனால் அப்படி எல்லாம் இல்லை.

கிட்டாதாயின் வெட்டன மற என்பதே சரி.

அதாவது, மது அறிந்தினால் மானம், மரியாதை எதுவும் கிட்டாது.. வெட்டனெ மறக்க வேண்டியதுதான்.

அது மிகக் கடினம்தான்…

குடிகாரர்களில் ஆகப்பெரும்போலோர் ஒரு கட்டத்தில், மதுவை விட்டுத்தொலைக்கவே விரும்புவார்கள்.

ஆனால் அது அத்தனை எளிதான விசயம் அல்ல.

சாராயக் கடையை நெருங்கும்போது… குடியால் விளைந்த பொருளாதார சீரழிவு, குடும்ப பிரச்சினை, அவமானங்கள் எல்லாம் மனதில் ஓடும்…
“மாற்றுப்பாதையில் செல்! கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு ஓட்டலில் பிடித்தமானதை சாப்பிடு… மீதமிருக்கும் பணத்தில் நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ இனிப்புகள், பழங்களை வாங்கிச் செல்!” என மனம் கதறும்… கால்களும்கூட திசை மாறத் துவங்கும்..

ஆனால் அதற்குள் இன்னொரு குரல் மனதிற்குள் ஓங்கி ஒலிக்கும்..
“இன்று ஒரு நாள் மது அருந்தலாம்.. நாளை முதல் வேண்டாம்…!”
இந்த இரண்டாம் குரலே ஜெயிக்கும்..!

ஆனால் இதற்கும் இருவித மன நிலையில் குடிகாரர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல…!

இந்த மனப்போராட்டத்தில் நம்மை நாமே வெல்வது எப்படி? குடிக்கு முன்பு இருந்ததுபோல போல குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

குடியில் இருந்து மீண்டவன் என்கிற முறையில் சில ஆலோசனைகளைச் சொல்கிறார்கள்… அவை, மதுப் பிரியர்களுக்காக..

குடும்பத்தினருக்குத் தெரியாமல் பணத்தை ஒளித்து வைக்காதீர்கள்.. அப்படி வைத்திருந்தால் அப்பணத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள்.

“குடிக்க வேண்டும்!” என்ற எண்ணம் வந்த உடனே சாப்பிட்டு விடுங்கள்!

நீங்கள் குடிக்க விரும்பாவிட்டாலும், குடி நண்பர்கள் அலைபேசக்கூடும். அப்படிப்பட்டவர்கள் அழைப்பு வந்தால், செல்பேசியை எடுக்காதீர்கள்.

உங்களுக்குத் தெரியாததல்ல…

எத்தனையோ திறமை, அறிவு, உழைப்பு, நேர்மை இருந்தும்.. குடி ஒன்றினால் எத்தனை எத்தனை இழப்புகள் என மனதில் அசைபோடுங்கள்; அவமானகர சம்பவங்கள் சிலவற்றை நினைத்துப் பாருங்கள்.
அந்த எண்ணத்திலேயே நீடிக்காமல், குடியற்ற சமீப வாழ்க்கை அளித்த நிம்மதி.. குறிப்பாக குடும்பத்தினர் நிம்மதியை, மகிழ்ச்சையை நினைத்துப் பாருங்கள்!

இதையெல்லாம் கடந்தும் மனது, மதுவுக்காக அலைபாய்கிறது…

ஏ.ஏ. அமைப்புக்கு அலைபேசுங்கள்.

அதென்ன ஏ.ஏ..?

ஆல்கஹாலிக் அனானிமஸ் ( alcoholics anonymous ) என்பது குடியை தள்ளிப்போட வைக்கும், மன வலிமையை அளிக்கும் அமைப்பு.

மருந்து, மாத்திரை, கட்டணம் ஏதுமில்லை. அந்த அமைப்பைத் தொடர்புகொள்ளுங்கள். வழிகாட்டுவார்கள்.

உங்கள் பகுதி ஏ.ஏ. அமைப்பினரை தெரிந்துகொள்ள, http://www.aagsoindia.org/ என்ற தொடுப்பில் தேடுங்கள்.
மது விரும்பிகளுக்கு மன வலிமை அதிகம். எத்தனையோ இழப்புகளைத் தாண்டியும் தொடர்ந்து குடித்திருக்கிறோமே!

அதே மனவலிமையை, குடியை விட்டுத்தொலைக்கவும் பயன்படுத்தலாமே..

– டி.வி. சோமு

Related Posts