“கடவுளைவிட சக்தி படைத்த ஏ.ஐ.!”: நாகாவின் ‘ஐந்தாம் வேதம்’ பற்றி அபிராமி ராமநாதன்!
ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.
இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன், அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அஜய், டாக்டர் சீனிவாசன், இசையமைப்பாளர் ரெவா, நடிகர் ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அபிராமி மீடியா ஒர்க்ஸின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில்…,
“மிக நீண்ட நாட்களாவிட்டது, இடையில் எங்கள் தயாரிப்பில் “விநோத சித்தம்” படத்தை உருவாக்கினோம், அது நல்ல வெற்றி. ZEE5 லிருந்து இது நல்ல கதை, தயாரியுங்கள் என்றனர்,
இயக்குநர் நாகாவின் மர்மதேசம் தொடருக்குத் தீவிர ரசிகன் நான், ஒய் ஜி மகேந்திரன் என்னுடன் படித்தவர், நல்ல டீம், நாகா கதை சொன்னார், ஐந்தாம் வேதம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது, இந்த சீரிஸ் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் பற்றிப் பேசுகிறது.
ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் கொலையும் செய்யும், மனித உருவும் எடுக்கும், கடவுளை மீறி விடும், மிகப் பரபரப்பான திருப்பங்களுடன் நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது” என்றார்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்…
“இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன், பல ஊர்களுக்குப் பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அறிமுக நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வரை நிறையப் பேர் இதில் நடித்துள்ளார்கள்,
வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து போது, அனைவருக்கும் காய்ச்சல், ஆனால் யாருமே ஓய்வெடுக்காமல் உழைத்தார்கள். நாகா சாரின் தீவிர ரசிகன், மிகப் பொறுமையாக அனைவரையும் கையாள்வார்.
என்னுடன் நடித்த சிறு பையனுக்குக் காட்சியை அவ்வளவு விளக்கமாகச் சொல்லி, நடிப்பை வாங்குவார்” என்றார்.
நடிகை தன்ஷிகா கூறுகையில்…
“என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாப்பாத்திரம் பற்றிச் சொன்னார். அவர் ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, . இந்த சீரிஸில் எங்கள் படக்குழு கடுமையான உழைப்பைத் தந்துள்ளார்கள். பல தடைகள் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் சார் அனைத்தையும் மிக எளிதாகக் கையாண்டார், . ZEE5 மூலம் இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் சென்று சேரவுள்ளது” என்றார்.
நடிகர் பொன் வண்ணன் கூறுகையில்…
“இந்த படைப்பின் கதாநாயகன் நாகா சார், மர்ம தேசம் வந்து 25 வருடங்களாகிவிட்டது, 25 வருடங்கள் கடந்தும், அதே மனநிலையோடு, அதே திறமையோடு இருக்கும் நாகா சாரை பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. நாகா சார் நினைத்ததைச் செய்வதில் வல்லவர். மிகமிக நுணுக்கமான கலைஞன், ஒவ்வொரு நடிகரிடம் அவர் நடிப்பு வாங்குவதைப் பார்க்க அலாதியாக இருக்கும், இப்படிப்பட்ட மாகா கலைஞனோடு மீண்டும் இந்த ஐந்தாம் வேதம் சீரிஸில் பயணித்தது மகிழ்ச்சி. இந்த சீரிஸை தயாரித்திருக்கும் அபிராமி ராமநாதன் அவர்களும் கலைத்துறையில் முன்னோடி. அவர் தயாரித்த விநோத சித்தம் படமும், இந்த ஐந்தாம் வேதம் சீரிஸை தயாரித்ததும் அவர் முன்னோடி சிந்தனையாளர் என்பதை நிரூபிக்கிறது” என்றார். 
இயக்குநர் நாகா கூறுகையில்..
“ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், முழுமையாக முடிந்த பிறகு . 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார் அவருக்கு என் நன்றி. ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது கதையாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்குமென நம்புகிறேன்” என்றார்.
ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !

