‘மரகதமலை’: அனிமேஷன் விலங்குகளுடன் ஒரு கோடை ட்ரீட்!
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான சாகசத் திரைப்படங்கள் மற்றும் ஃபேண்டஸி கதைகளின் வருகை அரிதாகவே உள்ள நிலையில், அந்த ஏக்கத்தைப் போக்க ஒரு புதுமையான களத்துடன் வருகிறது “மரகதமலை”. அறிமுக பெண் இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, எல்.ஜி மூவிஸ் சார்பாகத் தயாரித்து இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமாகப் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது.
18-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தின் கதை செதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஜமீன்தாரிடம் உள்ள விலைமதிப்பற்ற புதையலைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அந்த ஆபத்திலிருந்து தன் குடும்பத்தையும் புதையலையும் காப்பாற்ற, ஜமீன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அனைவரும் பிரிகின்றனர். பிரிந்து போன குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா மற்றும் புதையல் பாதுகாக்கப்பட்டதா என்பதை விறுவிறுப்பான சாகசங்களுடன் விளக்குகிறது இப்படத்தின் திரைக்கதை.
நாயகன் சந்தோஷ் பிரதாப், நாயகி தீப்ஷிகா, தம்பி ராமையா, ஜெகன் ஆகியோருடன் மாஸ்டர் சஷான்ந், அரிமா வர்மன் உள்ளிட்ட பல குழந்தை நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர். எல்.வி. முத்து கணேஷ் இசையமைக்க, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்துள்ளார். கவிஞர் பா. விஜய், கே.டி. சேஷா மற்றும் இயக்குநர் எஸ். லதா ஆகியோர் பாடல்களை எழுத, பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பி. சண்முகம் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர்களது கூட்டு உழைப்பில் படம் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
“மரகதமலை” படத்தின் மற்றொரு சிறப்பம்சம் அதன் உயர்தர அனிமேஷன் காட்சிகள். புலி, பாம்பு, யானை, கொரில்லா போன்ற விலங்குகள் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில், பிரம்மாண்டமான டிராகன் அனிமேஷனில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. தடா வனப்பகுதியில் சுமார் 30 நாட்கள் கடுமையான உழைப்பில் படமாக்கப்பட்ட இக்காட்சிகள், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் ஆர். கண்ணன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்: “இயக்குநர் லதா அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஒரு அழகான ஃபேண்டஸி உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக படத்தில் வரும் மிருகங்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக நேர்த்தியாக வந்துள்ளன. ஒரு பெண்மணி இத்தனை சவால்களைக் கடந்து, ஒரு பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. சினிமா இன்று சில நெருக்கடிகளைச் சந்தித்தாலும், சங்கங்கள் பேசி அதனைத் தீர்க்க வேண்டும். நல்ல படங்களை மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
தயாரிப்பாளர் தனஞ்செயன்: “நாளை மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்துத் துறைகளையும் ஒரு பெண்ணாக நின்று கையாண்டுள்ள லதா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இன்றைய சூழலில் இது ஒரு துணிச்சலான முயற்சி. சந்தோஷ் பிரதாப் இப்படத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல படம் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த ‘மரகதமலை’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமையும்.”
இயக்குநர் ஆர். கண்ணன்: “லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விடாமல் துரத்தி இந்தப் படத்தை முடித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது சாதாரண காரியம் அல்ல. சம்மர் ஹாலிடேவை முன்னிட்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம், குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.”
நடிகர் சந்தோஷ் பிரதாப்: “சினிமா இன்று பல சவால்களைச் சந்தித்து வருகிறது. பல படங்கள் தயாராக இருந்தும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. நான் பெரிய படங்களோடு சேர்த்து இதுபோன்ற சிறிய படங்களிலும் நடிப்பதற்குக் காரணம், புதிய திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். ஆரம்பத்தில் எனக்கும் யாரோ வாய்ப்பு கொடுத்ததால்தான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். குழந்தைகளும் பெற்றோர்களும் ரசிக்கும்படியான படங்கள் இப்போது குறைந்துவிட்டன. அந்தக்குறையை ‘மரகதமலை’ போக்கும். இந்த வாய்ப்பளித்த இயக்குநர் லதா மற்றும் கண்ணன் சாருக்கு நன்றி.”
நடிகர் ஜெகன்: “இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி. இதில் நிறைய அன்பும், சினிமா மீதான உண்மையான தேடலும் இருக்கிறது. சந்தோஷ் பிரதாப் மற்றும் தம்பி ராமையா போன்ற சிறந்த கலைஞர்களுடன் நடித்த அனுபவம் மிகச் சிறப்பானது. இதில் நடித்திருக்கும் குழந்தைகளும் மிக இயல்பாக நடித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு வரும் இந்தப் படம் ஒரு நல்ல வரவேற்பைப் பெறும்.”
செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக கண்ணன் இப்படத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
