“ம.தி.மு.க.வுக்காக வாக்கு கேட்பேன்..!”: மல்லை சத்யா எக்ஸ்ளூசிவ் பேட்டி!

“ம.தி.மு.க.வுக்காக வாக்கு கேட்பேன்..!”: மல்லை சத்யா எக்ஸ்ளூசிவ் பேட்டி!

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்கிற கட்சியை துவங்கி இருக்கிறார்.

“இது ஆங்கிலத்தில் dvk என வருகிறது. ஏற்கெனவே விஜயின் tvk, ( தவெக), வேல்முருகனின் tvk (தவாக) ஆகியவை இருக்கின்றன. இந்நிலையில் ஆங்கில உச்சரிப்பில் குழப்பம் ஏற்படாதா..” என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவிர, “இதே, திராவிட வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி நடத்தி வருகிறேன்” என்று சரவணன் என்பவர் புகார் எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் மல்லை சத்யாவிடம், tamilankural.com இதழுக்காக பேசினேன்.

 

புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்… வாழ்த்துகள்..!

புதிய அமைப்பு துவங்கி இருக்கிறோம். ஆனால் அதே பழைய பாதைதான். அதாவது திராவிட இயக்க பாதைதான். திராவிடம் என்பதே சமூக நீதி. நினைவு தெரிந்த நாளில் இருந்து அதன் வழி நடக்கிறோம்.

ம.தி.மு.க.வில் துரை வைகோவால் எனக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட உடன், துணை பொதுச் செயலாளர் பதவியை துறந்துவிட்டு, சாதாரண தொண்டனாக பயணிக்க விரும்பினேன். ஆனால் அவரது அழுத்தத்தால் தலைவர் வைகோ என்னை நீக்கினார். அதனால் புதிய அமைப்பு துவங்க வேண்டியதாகிவிட்டது. அவ்வளவுதான்.

கட்சி துவங்கும் முன்பே தி.மு.க. ஆதரவு நிலைபாட்டை எடுத்துவிட்டீர்கள்!

ஆம்! திராவிடம் என்கிற சமூக நீதியின் வழியில் உறுதியாக பயணிப்பது தி.மு.க.தான். இன்று இந்தியா முழுதும் தேவைப்படுவது திராவிட கொள்கைதான். அந்த அளவுக்கு ஆரிய அபாயம் – பாஜகவின் கோர முகம் மக்களை மிரட்டுகிறது. இந்த நிலையில் தி.மு.க.வுடன் தோள் நிற்பது நமது கடமை.

நீங்கள் தனிக் கட்சி துவங்கியதற்கு தி.மு.க.வில் இருந்து எதிர்வினை வந்ததா…?

பாராட்டவும் இல்லை.. விமர்சிக்கவும் இல்லை.

பிறகு எப்படி உங்களது ஆதரவை தி.மு.க. ஏற்கும்?

தி.மு.க.வை ஆதரிக்க வேண்டியது சமூக நீதியை போற்றும் ஒவ்வொருவரது கடமை. அதை நாங்கள் செய்வோம். அதே நேரம், ம.தி.மு.க.வில் இருந்து எங்களை நீக்கியதோடு இல்லாமல், எங்களை தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என வைகோவும் அவரது மகன் துரையும் அழுத்தம் கொடுத்தார்கள்.

‘துரை வைகோ, பாஜகவுடன் செல்ல விரும்புகிறார்’ என நீங்கள்தான் சொன்னீர்கள். இந்த நிலையில், அவர் சொல்லி தி.மு.க. கேட்குமா..?

துரையுடன் ஒரே ஒரு முறைதான் தனிமையில் சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர், ‘நீங்கள் தி.மு.க.வில் சேர முடியாது. அங்கே சொல்லிவிட்டோம்’ என ஆணவத்துடன் சொன்னார்.

துரை வைகோவுக்கு உங்கள் மீது அப்படி என்ன விரோதம்..?

தனது தந்தைக்குப் பிறகு கட்சியை தானே கபளீகரம் செய்யலாம் என நினைத்தார். ஆனால் நான் 32 வருடங்களாக தொண்டர்களோடு தொண்டனாக பழகி வருகிறேன். அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொள்கிறேன். இதனால் தொண்டர்களிடையே எனக்கு இருக்கும் செல்வாக்கு, துரையை உறுத்துகிறது. ஆகவே என்னை கட்சியில் இருந்து ஒழித்துக்கட்ட நினைத்தார்.

மதிமுகவில் உங்களுக்கு செல்வாக்கு இருந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் மிகக் குறைந்த அளவு பொதுக்குழு உறுப்பினர்களே உங்களிடம் வந்தார்கள். மற்றபடி, எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் அங்கே தானே இருக்கிறார்கள்.. உங்களைப் பார்த்து துரை வைகோ ஏன் பயப்பட வேண்டும்?

தி.மு.க.வில் இருந்து வைகோ பிரிந்த போது, 9 மாவட்டச் செயலாளர்கள், கணிசமான பொதுக்குழு உறுப்பினர்கள், ஏராளமான தொண்டர்கள் அவருடன் வந்தனர். இன்று மதிமுகவின் நிலை என்ன..?
தற்போது எங்களுடன் வந்தவர்கள் குறைவாக இருக்கலாம். எங்களிடம் கொள்கை இருக்கிறது. ஆகவே நாளடைவில், தொண்டர்கள் ஆதரவு, மக்கள் ஆதரவு பெருகும். இதை காலம் சொல்லும்.

வைகோவுக்கும் உங்களுக்குமான பிரச்சினை வந்தவுடன், “வைகோ சாதி பார்த்தார், வைகோ ஏராளமான சொத்து வாங்கிவிட்டார்” என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால் அவரோ, “என் எதிரிகள் கூட சொல்லத் தயங்கும் அபாண்டங்கள் இவை” என்கிறார்..

துரைதான் ஆபத்தானவர். வைகோ அல்ல.

அதே நேரம், துரை, கட்சிக்குள் வர விருப்பப்பட்ட போது மனம் உவந்து ஏற்றவன் நான். அப்போது, எனது துணை பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார் என்றேன். அதற்கு வைகோ, “அது பட்டியல் இனத்துக்கானது… உங்கள் இடத்தில் என் மகனா” என்று அனைவர் முன்னிலையிலும் ஆத்திரமாக கூறினார். அதைத்தான் சாதி உணர்வு என்றேன்.

“இத்தனை வருடங்களா வைகோவுடன் இருந்தீர்கள்.. அவர் சாதி உணர்வுடன் செயல்பாட்டாரா. கட்சிகளில் சில பதவிகளை பட்டியல் இனத்தவருக்காக அளிப்பார்கள். அது அவர்களது முக்கியத்துவத்தை உணர்வதற்காகவே. இதைத்தான் வைகோ குறிப்பிட்டார்” என்று ஒரு கருத்து இருக்கிறதே..

தனது மகன் கட்சிக்குள் வரும் வரை சாதி உணர்வு இன்றிதான் தலைவர் வைகோ இருந்தார். அதன் பிறகு மாறிவிட்டார். உதாரணமாக, என்னை தனியாக அழைத்து, “கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி பட்டியல் இனத்துக்கானது. இனி அப்படி பேசாதீர்கள்” என சொல்லி இருக்கலாமே..! மீண்டும் சொல்கிறேன்.. மகன் வருவதற்கு முன் சாதிப் பற்று இல்லாதவராக வைகோ இருந்தார் என்பது உண்மை.“நான் ஏராளமான சொத்துக்களை வாங்கிவிட்டேன் என மல்லை சத்யா சொல்வது கொடுமையான பொய்” என வைகோ எதிர்வினையாற்றி இருக்கிறாரே..

நான் வைகோவை சொல்லவில்லையே.. அவரது மகன் துரை வைகோவைத்தான் சொன்னேன்.
நான் வாழும் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே பல கோடி ரூபாய்க்கு நிலம், அரண்மனை போன்ற வீடு, அடுக்கு மாடி குடியிருப்பில் இரு வீடுகள், ஓட்டல் என வாங்கிக் குவித்து இருக்கிறார் துரை. வெளிநாட்டு வங்கிகளில் ஏழு கணக்குகள் வைத்திருக்கிறார்.

இதன் பின்னணி என்ன என்றுதான் கேள்வி எழுப்புகிறேன்!

கட்சிக்கு வந்த பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து நீங்கள் துணைப் பொதுச் செயலாளர் ஆனீர்கள்?

பல ஆண்டுகள் கழித்து..

ஆனால் துரை வைகோ கட்சிக்குள் வந்தால் துணை பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுப்பதாக கூறினீர்கள் என்கிறீர்கள். அப்படியானால் வாரிசு அரசியலை ஆதரிக்கிறீர்களா..?

தலைவரின் மகன் என்கிற போது அவர் கட்சிக்கு வர வேண்டும் என பலரும் விரும்பினோம். அதற்காக அவருக்கு எனது பதவியையும் அளிக்க தயாராக இருந்தேன். ஆனால் துரை, அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கவில்லை. ஒவ்வொருவராக கட்சியைவிட்டு நீக்குவதிலேயே குறியாக இருந்தார்.

நான் 32 ஆண்டுகள் உழைத்து படிப்படியாக அடைந்த இடத்தை, பாராசூட்டில்போய் வினாடியில் அடைந்தார். முதன்மைச் செயலாளர், எம்.பி. சீட் என அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இவற்றைத்தான் எதிர்த்தோம்.

இப்போது தனி இயக்கம் கண்டு, தி.மு.க. ஆதரவு நிலைபாடு எடுத்து இருக்கிறீர்கள்.. உங்களுக்கு அக்கூட்டணியில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா..?

நாங்களும் சட்டமன்றம், நாடாளமன்றம் செல்லத்தான் விரும்பினோம். ஆனால் அதற்கான வாய்ப்பை தலைவர் வைகோ தரவில்லை. 1996ல் அப்படித்தான் வைகோ முடிவெடுத்தார். அந்தத் தேர்தலில் நான் மட்டுமல்ல வைகோ உள்ளிட்ட அனைவரும் தோற்றோம்..

திமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டு, கையெழுத்து போட்டுவிட்டு, உடனடியாக வைகோ வெளியேறிய சம்பவமும் நடந்தது.

எங்களுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை ஒலிக்க வேண்டும் என்கிற விருப்பம் உண்டு. ஆனால் வரும் தேர்தலில் அந்த நோக்கம் இல்லை. திராவிட இயக்கத்தை வலுப்படுத்த திமுகவுடன் துணை நிற்போம்.

தி.மு.க.வுடன்தான் ம.தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்காக நீங்கள் பாடுபடுவீர்கள் என்றால், ம.தி.மு.க. வேட்பாளர்களுக்காகவும் பரப்புரை செய்வீர்களா..?

நாங்கள் பெரிய பேச்சாளர்கள் அல்லர். ஆனால் ஒரு விசயத்தைப் பார்க்க வேண்டும். திமுகவை எதிர்த்துத்தான் மதிமுக துவக்கப்பட்டது. இன்று ஒரே கூட்டணியில் இருக்கின்றன. சி.பி.ஐ. கட்சியை எதிர்த்துத்தான் சி.பி.எம். கட்சி துவங்கப்பட்டது. இரண்டும் ஒரே அணிதான். இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம். திராவிட இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆகவே திமுக கூட்டணி கட்சிகளுக்காக வாக்கு கேட்பதில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை.

உங்கள் கட்சியின் பெயைரை டி.வி.கே. என ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது, வேல் முருகனின் கட்சி, விஜயின் கட்சி ஆகியவற்றின் பெயரைப் போல இருப்பதாக ஒரு கருத்து எழுந்துள்ளதே..?

எங்களது கட்சி பெயரை ஆங்கிலத்தில் dvk என்றுதானே உச்சரிப்பார்கள்.. ஆகவே அது பிரச்சினை இல்லை.

இதே பெயரில் இன்னொருவர் கட்சி வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். திராவிடம், வெற்றி, கழகம் என்பது எல்லாமே எல்லோருக்கும் உரிய பொதுவான பெயர்தான். ஆகவே அதில் மாற்றமில்லை. ஆனால் அதன் முன்னே ஒரு வார்த்தைையை சேர்க்கப்போகிறோம். அதை அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு முடிவு செய்வோம்.

பேட்டி: டி.வி.சோமு

Related Posts