‘மாரீசன்’: திரை விமர்சனம்

‘மாரீசன்’: திரை விமர்சனம்

ராமாயண புராணத்தில் சீதையைக் கடத்த ராவணனுக்கு உதவியது மாயமான் மாரீசன். இந்தப் படத்தில், மாய மனிதராக வருகிறார் ஒரு நல்ல மனிதர். அதுதான் வித்தியாசம்.

சிறு சிறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் அடைபட்டு மீண்டும் வருவார் சிறைப்பறவை தயாளன். அப்படி ஒரு முறை, தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவரும் அவர், மீண்டும் தன் வேலையைத் துவங்குகிறார். ஆற்றில் குளித்துக்கொண்டு இருப்பவரின் செல்போன், திரையரங்கில் சாவியோடு நிற்கும் இரு சக்கரம் ஆகியவற்றைத் திருடுகிறார். அப்படியே வீடுகளை நோட்டம் பார்த்துச் சென்று கொண்டு இருக்கிறார்.

ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். அங்கு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கிறார் முதியர் வேலாயுதம் பிள்ளை.

அவர், “எனக்கு அல்சைமர் (மறதி) நோய்.. ஆகவே என்னை கட்டிப் போட்டுவிட்டு மகன் வெளியில் சென்றிருக்கிறான்.. என்னை அவிழ்த்துவிட்டால் பணம் தருகிறேன்” என்கிறார்.

அதன்படியே அவரை விடுவித்து ஏடிஎம்முக்கு அழைத்துச் செல்கிறான் திருடன் தயாளன். அப்போதுதான், வேலாயுதம்பிள்ளை கணக்கில் 25 லட்ச ரூபாய் இருப்பது தெரிகிறது.அந்தப் பணத்தை முழுமையாக கைப்பற்ற திட்டமிடுகிறான் திருடன் தயாளன்.

அதற்காக அவன் என்னென்ன செய்கிறான், அவன் நினைத்தது நிறைவேறியதா என்பதுதான் மாரீசன் படத்தின் கதை.

‘மாமன்னன்’ படத்தைப்போல இதிலும் சீரியஸ் ரோலில் நடித்து இருக்கிறார் வடிவேலு. ஆனால் அந்தப் படத்தில் ரசித்தது போல இதில் ரசிக்க முடியவில்லை. ஒரே மாதிரி இருக்கிறது. இவருக்குப் பதிலாக, நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை நினைத்துப் பார்க்கிறது மனசு. ( எட்டுத் தோட்டாக்கள் படத்தில் அசத்தி இருப்பார்.)

அதே போல ஃபஹத் ஃபாஸில் கதாபாத்திரமும் அலுப்பூட்டுகிறது. குறு குறு பார்வை, திருட திட்டமிடும் செயல், உடல் மொழி, பார்வை முழி….. அதே அதே..!

விவேக் பிரசன்னாவுக்கு எதிர்பாராத கதாபாத்திரம். போலீஸாக வரும் கோவை சரளா, ஃபஹத்தின் அம்மாவாக வரும் ரேணுகா, சித்தாரா உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்தாலும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை படத்துக்கு பலம். பாடல்கள், பரவாயில்லை ரகம்.

கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு, சாலை காட்சிகளை அழகாக படம் பிடித்துக் காண்பித்து இருக்கிறது.

இருவர் பயணிக்கிறார்கள். அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதை அதிகபட்சம் பத்திலிருந்து இருபது நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். ஆனால் இடைவேளைவரை அதை இழுத்துச் செல்வது அலுப்பூட்டுகிறது.

இடைவேளையில் அந்த ட்விஸ்ட் பரபரப்பை ஏற்படுத்துவது உண்மையே. ஆனால் அதன் பிறகும் லாஜிக் இல்லாமல் நீளும் காட்சிகள் படத்துடன் ஒன்ற வைக்க விடவில்லை.

ஆனாலும் அவசியமான ஒரு பிரச்சினை குறித்து பேசி இருப்பதற்காக இயக்குநரை பாராட்டலாம்.

Related Posts