லைன் மேன்: திரை விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் லைன்மேன் சுப்பையா. அவர் மகன் செந்தில் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்தவர். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்.
சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்குத் தானாக எரிவது போலவும் ஒளி வந்ததும் அணைவது போலவும் ஒரு கண்டுபிடிப்பை செய்கிறார். இதை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்!
அதன் அனுமதிக்காக ஆட்சியரைச் சந்திக்கவும் முதல்வரைச் சந்திக்கவும் போராடுகிறார். அவர் முயற்சி என்ன ஆனது என்பதுதான் கதை.
லைன் மேன் சுப்பையாவாக வரும் சார்லி, வழக்கம்போல் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார். மகனை நினைத்து பதறும் காட்சிகளில் ஒரு தந்தையின் தவிப்பை அப்படியே தருகிறார். அப்பாவி தந்தையாக மட்டுமின்றி, திருட்டு கரண்ட் இழுப்பவரிடம் ஆவேசம் காட்டும் போது அறச் சீற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்.அவரது மகன் செந்திலாக வருகிறார் அறிமுக நாயகன் ஜெகன் பாலாஜி. தனது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத சோகத்தை முகத்தில் பதித்தபடி இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், நச்சு ஆலைக்கு எதிராகப் போராடும் தமிழ், ஒரு காட்சிக்கு மட்டும் வரும் அதிதி பாலன் உள்ளிட்டஅனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவில் உப்பளக் காற்றைக் காற்றை அனுபவிக்க முடிகிறது. தீபக் நந்தகுமாரின் பாடல்களும் பின்னணியும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. சிவராஜின் படத் தொகுப்பு கச்சிதம்.
உப்பள வாழ்க்கை, உப்பு வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் வீடுகள் என வித்தியாசமான கதைக்களம்.
யதார்த்தமான காட்சிகள், நடிப்பு.. அதே நேரம் ரசிக்கும்படி அளித்து இருக்கிறார்கள்.
ஆனால் இரண்டாம் பாதியில், கந்துவட்டி கொடுமை, பழிவாங்கல், கொலை என திரைக்கதை திசை மாறுவதைத் தவிர்த்து இருக்கலாம்.
ஆனாலும் முதல் படத்திலேயே முத்திரை பதித்து இருக்கிறார் இயக்குநர் உதய்குமார்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள இப்படத்தை ஆஹா ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.