ஜாலியோ ஜிம்கானா: திரை விமர்சனம்

ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு, நான்கு பெண்கள் அடிக்கும் லூட்டிதான் ஜாலியோ ஜிம்கானா. ஆம்.. மகளிர் மட்டும் படத்தில் வரும் குறிப்பிட்டகாட்சியை, முழு நீளப் படமாக கொடுத்து இருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும்போதே லாஜிக் பார்க்காம சிரிங்க என்று சொல்லிவிடுகிறார்கள்.

செல்லம்மா, தனது அப்பா மற்றும் மகள்கள் மூவரோடு சேர்ந்து வெள்ளைக்காரன் பிரியாணி என்கிற ஓட்டல் நடத்துகிறார். அதற்காக கடன் வாங்குகிறார். ஓட்டலுக்கு பெரிய ஆர்டர் கொடுக்கும் எம்.எல்.ஏ பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதனால், சண்டை வர, செல்லம்மாவின் குடும்பத்தினரையும் ஓடலையும் அடித்து நொறுக்குகிறார்.இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ., ஏழைகளின் பெயரில் போலியான மருத்துவக் காப்பீடு செய்து மோசடியாக பணம் சம்பாதிக்கிறார். அதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார் வழக்கறிஞர் பூங்குன்றன்.

பூங்குன்றத்திடம் உதவி கேட்க, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறது செல்லம்மாவின் குடும்பம். அங்கே அவர் இறந்து கிடக்கிறார். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, பூங்குன்றத்தின் பிணத்தோடு ஓட்டலிலிருந்து தப்பிக்கிறார்கள்.

அதன் பிறகு என்ன ஆனது என்பதை, சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

படத்தின் நாகயன் பெரும்பாலும் பிணமாகவே வருவது இந்தப் படத்திலாகத்தான் இருக்கும். ஒரு நீதிமன்றக் காட்சிக்கும், இரண்டு பாட்டுக்கும் மட்டுமே உயிரோடு இருக்கிறார் நாயகன் பிரபு தேவா. ஆனால் மற்ற காட்சிகளிலும் நடன அசைவு போலவே கைகால்களை ஆட்டி சிரிக்க வைக்கிறார். அதிலும் இறுதியில் அவர் “போடும்” சண்டைக் காட்சி வித்தியாசமான ஐடியா.குடும்பத் தலைவி செல்லம்மாவாக அபிராமி. இவ்ளோ அழகும் இளமையுமான அவரை அம்மா ஆக்கிவிட்டார்களே என்கிற ஆதங்கம் வருகிறது. இதை ஒரு காட்சியில் ரோபோ சங்கரைவிட்டும் சொல்ல வைத்துவிடுகிறார்கள். நடிப்பிலும் வழக்கம்போல் முத்திரை பதிக்கிறார் அபிராமி.

அவரது மகள்களில் ஒருவராக வரும் மடோனா செபாஸ்டின் சிறப்பாக நடித்து இருக்கிறார். பிணத்தை வைத்துக்கொண்டு தவிப்பது, அதை வைத்து வங்கியில் பணம் பெற முயற்சிப்பது என்று ஒர ரகளைதான்.

ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு, பாதராக வந்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

படத்துக்கு பாடல் எழுதி உள்ள ஜெகன் கவிராஜ், சாதி சங்க தலைவராக வந்து காமெடியில் மிரட்டி இருக்கிறார்.

படத்தின் பாடல்கள் பற்றி குறிப்பிட வேண்டும். பாடல்கள் ஏஏஏத்தனமாக இருக்கின்றன என்ற விமர்சனம் ஒறுபுறம்.. பாடல்களை தானே எழுதியதாக இயக்குநர் பொய் சொன்னது மறுபுறம்…

ஆனால் பட டைட்டிலில் ஒரிஜினல் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பெயரை போட்டிருக்கிறார்கள். தயாரிப்பாளருக்கு பாராட்டுகள். பாடல்கள் 18+ஆக இருந்தாலும் கவி நயத்துடன் வரிகளை அளித்திருக்கிறார் ஜெகன் கவிராஜ்.

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்

எம்.சி. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகள் குளுமை. அதே போல சேசிங் காட்சிகளையும் பரபரப்பாக அளித்து இருக்கிறார்.

அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்திருக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

அதிரடியான குடும்பம், வித்தியாசமான வில்லன்கள், கடைசியில் நெகிழ வைக்கும் சோசியல் மெஸேஜ் என்று ஃபுல் மசாலா ட்ரீட்.

சிரிக்க, சரியான தேர்வு ஜாலியோ ஜிம்கானா.