“தயாரிப்பாளரின் கண்ணீரில்தான் படக்குழுவினர் சந்தோஷம்!”: ‘சீசா’ விழாவில் கஸ்தூரிராஜா
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில்
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “ஒரு படத்தை ஆக்குவதும், உருவாக்குவதும் மீடியாக்கள் கையில் தான் இருக்கிறது. இப்போது என் பேரன் கூட நடிக்க வந்திருக்கிறார், இந்த அளவுக்கு என் குடும்பம் சினிமாவில் உயர்ந்ததற்கு மீடியாக்கள் தான் காரணம். முதலில் இங்கு நன்றி சொல்ல வேண்டியது தயாரிப்பாளர் செந்தில் வேலனுக்கு தான். ஒரு தயாரிப்பாளர் திடீரென்று மருத்துவம் பார்க்க முடியாது, ஆனால் ஒரு மருத்துவர் படம் தயாரித்திருக்கிறார். இன்றைய சுழலில் ஒரு படம் தயாரிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அனைத்தும் இருப்பவர்களால் கூட இன்று படம் தயாரிப்பு என்பது கஷ்ட்டமான விசயமாக இருக்கிறது. எதுவுமே இல்லாமல், இவ்வளவு முதலீடு செய்து, படத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவர் எத்தனை கஷ்ட்டங்களை கடந்து வந்திருப்பார், என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். பாடல்கள் நன்றாக இருக்கிறது, இசை, பாடல் வரிகள் என அனைத்தும் நன்றாக இருக்கிறது, எனவே பத்திரிகையாளர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த படம் வெற்றி பெற்று டாக்டர் சம்பாதித்தால், நிச்சயம் அடுத்த படம் எடுப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன்.
இயக்குநர் குணா குடும்ப கஷ்ட்டத்தை பற்றி பேசினார். சினிமாவில் இருப்பவர்களை கோழையாக்குவது குடும்ப கஷ்ட்டம் தான். ஓட்டப் பந்தயத்தில் முதுகில் மூட்டையை கட்டிக்கொண்டு ஓடுவது போல தான் சினிமாக்காரர்களுக்கு குடும்பம் இருப்பது. நானும் அந்த கஷ்ட்டத்தை அனுபவித்திருக்கிறேன். அதே சமயம், சினிமா தன்னை தானே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதற்கு தகுதியானவரை அது தானாக தேர்ந்தெடுக்கும். அப்படிதான் நானும் சினிமாவுக்குள் வந்தேன். கிராமத்தை சேர்ந்த நான் சென்னை என்றால் என்ன?, யாரை பார்க்க வேண்டும், என்று எதுவுமே தெரியாமல் சென்னை வந்தேன். சென்னை வந்து வண்ணாரப்பேட்டை சென்றதும் நான் இறங்கிய இடம் மகாராணி தியேட்டர். அங்கிருந்து நான் போக வேண்டிய முகவரியை தேடிய போது திரும்ப திரும்ப அந்த தியேட்டர் முன்பே வந்து நின்றேன். ஒரு தாய் வயிற்றில் இருந்து எப்படி பிறந்தோமோ அப்படி தான் நான் சென்னை வந்தேன். என் கண் முன் தெரிந்த அந்த மகாராணி தியேட்டர் தான் நான் சினிமாவில் வருவதற்கான முதல் சிக்னல் என்று இன்றும் நினைப்பேன். அதனால், உழைப்பும், சோர்வின்மையும் நம்மிடம் இருந்தால் நம்மை எந்த கொம்பனும் அசைக்க முடியாது. நம்முடைய நாற்காலியில் யாராலும் உட்கார முடியாது. அப்போது கூட நான் வேறு வேலைகளை தான் தேடி அலைந்தேனே தவிர சினிமாவில் வாய்ப்பு தேடவில்லை. அப்படி இருந்தும் சினிமா என்னை அழைத்தது. சினிமாவில் இருக்கும் வசதிகள் எங்கும் இல்லை, அதே சினிமாவுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோமா?, இன்றும் என் பிள்ளைகள் என்னை படம் எடுக்க சொல்கிறார்கள், நான் தான் வேண்டாம் என்று சொல்கிறேன். ஒரு தயாரிப்பாளர் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் தான், அந்த படத்தில் பணியாற்றியவர்கள் சந்தோஷமடைகிறார்கள். 50 லட்சம் ரூபாய் செலவு செய்தால், அதில் 15 லட்சம் தான் படத்திற்கு செலவு செய்யப்படும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் செந்தில் வேலன் தைரியமாக படம் தயாரித்திருக்கிறார், அவரை பாராட்ட வேண்டும். சிறிய படம், பெரிய படம் என்று இப்போது சொல்லக் கூடாது, தியேட்டருக்கு வந்தால் தான் தெரியும். இப்போது பல பெரிய படங்கள் சின்ன படங்களாகி விட்டது, சிறிய படங்கள் பெரிய படங்களாகி விட்டது. இசையமைப்பாளர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார், செந்தில் வேலனின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
இயக்குநர் குணா குடும்பம் இருக்கிறது, என்று வருத்தமடைய வேண்டாம். நீங்க பட்ட கஷ்ட்டத்துக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நானும் 39 வயதில் தான் என் முதல் படம் எடுத்தேன். எனக்கு இளையராஜா என்ற ஒரு தெய்வம் கிடைத்தார். ராஜ்கிரண் என்ற இஸ்லாமிய கடவுள் எனக்கு வரம் கொடுத்தார். இதையெல்லாம் மீறி அந்த படத்தை ரசிக்கும் ஆடியன்ஸ் இருந்தார்கள். ஆனால், இன்று அந்த படத்தை எடுத்தால் ஓடாது. இன்றைய ஆடியன்ஸ்களுக்கு என்ன தேவையோ அதை படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் நீங்க பயப்பட வேண்டாம், படம் நிச்சயம் வெற்றி பெறும். பத்திரிகையாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.

