கண்ணப்பா: இதைச் செய்யுமா படக்குழு?

கண்ணப்பா: இதைச் செய்யுமா படக்குழு?

கண்ணப்ப நாயனாரின் புராணக் கதையை முன்னூறு கோடி ரூபாய் செலவில் பல மொழிகளில் உருவாக்கி இருக்கிறார்கள். நாளை வெளியாகிறது.

இந்த நிலையில், “படத்தை யாரேனும் ட்ரோல் ( கிண்டல் கேலி) செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று படக்குழு அறிவித்து இருப்பது கவனத்தை ஈர்த்து உள்ளது.

காரணம், படத்தின் டிரெய்லர் வெளியானபோதே, இணைய வாசிகள், உண்டு இல்லை என ஆக்கிவிட்டார்கள்.

நம்மைப் பொருத்தவரை இந்தப் படத்தை ஆதரிக்கலாம்…

வேடர் குலத்தைச் சேர்ந்த கண்ணப்ப நாயனார், இறைவனுக்கு பன்றிக்கறியை படைக்கிறார்.

ஆக… அர்ச்சனை செய்வதில் சாதி பேதம் தேவையில்லை… இறைச்சியை முன்வைத்து (ஆன்மீக!) அரசியல் செய்யக் கூடாது என்பதைத்தானே படம் சொல்லப்போகிறது!

கவனிக்க வேண்டிய இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கர்நாகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஆகியவற்றில் குறிப்பிட்ட சாதியினர், “நாங்கள் கண்ணப்ப நாயனார் வம்சாவளியினர்” என்கின்றனர்.

பல வருடங்களுக்கு முன் அவர்களை பேட்டி கண்டு இருக்கிறேன்.

சில ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அவர்கள், விவசாயக் கூலிகள். கல்வி அறிவு பெற்றவர்கள் மிக மிகக் குறைவு.

“பழங்குடி இனத்தவரான எங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைத்து இருக்கிறார்கள். பழங்குடி பிரிவுக்கு எங்களை மாற்ற வேண்டும்” என்று அல்லாடிக்கொண்டு இருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

கண்ணப்பா படம் வெற்றி அடைந்தால், அவரது வம்சாவளியினருக்கு படக்குழு – தயாரிப்பாளர் உதவி செய்யட்டும். அதோடு, அரசியல்வாதியாகவும் இருக்கும் சரத்குமார் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர், அந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க குரல் எழுப்ப வேண்டும்.

பார்ப்போம்..!

  • டி.வி.சோமு