ட்ரோல்: ‘கண்ணப்பா’வின் எச்சரிக்கை என்ன ஆகும்?
பெரிய புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களில் பத்தாவதாக வருபவர், கண்ணப்ப நாயனார்.
வேடர் குலத்தவரான இவர், காட்டில் சிவலிங்கத்துக்கு பன்றிக்கறி வைத்து பூஜை செய்தார்.. சிவலிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வரவே, தனது கண்களைப் பிடுங்கி லிங்கத்துக்கு பொருத்தினார்… என்பது பெரியபுராணம் சொல்லும் புராணம்.
இந்தப் புராணத்தை ஏற்கெனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.
தற்போது பிரம்மாண்டமான பொருட் செலவில் – ரூ.300 கோடி பட்ஜெட்டாம் – உருவாக்கி இருக்கிறார்கள். தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ், மலையாளம், கன்னம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்து உள்ளார்.
மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை, கண்ணப்பா படக்குழு வெளியிட்டு உள்ளது.
அதில், “எங்கள் ‘கண்ணப்பா’ திரைப்படம் ஜூன் 27, 2025 அன்று முழு சட்டப்பூர்வ அனுமதியுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தையோ அல்லது அதன் பங்குதாரர்கள் குறித்தோ அவதூறு பரப்பினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே பொறுப்புடன் கருத்து தெரிவிக்கவும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு திரையுலகை மட்டுமின்றி, சமூகவலைதளவாசிகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
திரையுலகைச் சேர்ந்தவர்கள், “சமீபகாலமாகவே படங்கள் வெளியான உடனேயே சமூகவலைதளங்களில் விமர்சனம் என்கிற பெயரில் பலரும் கருத்திடுகிறார்கள். அதிலும் யு டியுபர்கள் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
சமீபத்தில்கூட, ’ரெட்ரோ’, ’தக் லைப்’ உள்ளிட்ட திரைபடங்கள் வெளியான முதல் நாளிலேயே கடும் விமர்சனங்களை சந்தித்தன. இப்படங்களின் தோல்விக்கு சமூகவலை விமர்சனங்களே காரணம்” என்கின்றனர்.
“திரைப்படங்கள் வெளியாகி 48 மணி நேரம் கழித்தே விமர்சனம் செய்யப்பட வேண்டும்” என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்துக்கும் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, நடப்பு தமிழ் திரைப்பட தயாரி்ப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி.சிவலிங்கம் என்ற சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘‘புதிய படங்கள் பற்றி முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார்.
இதற்கு உயர்நீதிமன்றம், “விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸில் புகார் அளி்க்கலாம். அதே நேரம் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது தனிமனித கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சில படங்களுக்கு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் வருகின்றன. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும், யூ-டியூப் நிறுவனமும் 4 வார காலங்களி்ல் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
பிறகு, “விமர்சனம் என்பது அவரவர் உரிமை. இங்கே தடுத்தால் அஜர்பைஜானில் ஒருவர் செய்வார்” என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
அதற்கு முன்பே, 2019ம் ஆண்டில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் “திரைப்பட விமர்சனம் என்னும் பெயரில் பலர் நடிகர்கள், தயாரிபாளர்கள் மற்றும் இயக்குனர்களை தாக்கி எல்லை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தவிர இப்படிப்பட்டவர்களை திரைப்படம் குறித்து எந்த ஒரு நிகழ்வுக்கும் அழைக்க மாட்டோம்” என தீர்மானம் இயற்றினார்கள்.
உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரேனும் அவதூறாக பேசினால் வழக்கு தொடர முடியும். திரைப்படம் குறித்த விமர்சனத்துக்காக வழக்கு தொடுக்க முடியாது” என்றார்.
இந்நிலையில்தான், நாளை கண்ணப்பா படம் வெளியாகும் நிலையில், “யாரேனும் ட்ரோல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என படக்குழு அறிவித்து உள்ளது.
எது விமர்சனம், எது தனி நபர் தாக்குதல் என்கிற புரிதல் நம் அனைவருக்கும் இருந்தால் இந்தப் பிரச்சினையே இல்லை.
– டி.வி.சோமு

