காஜல் & ஷ்ரேயாஸின் ‘தி இந்தியா ஸ்டோரி’ : அதிரவைக்கும் உண்மையைச் சொல்ல வருகிறது!

காஜல் & ஷ்ரேயாஸின்  ‘தி இந்தியா ஸ்டோரி’ : அதிரவைக்கும் உண்மையைச் சொல்ல வருகிறது!

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story: Slow Poison) திரைப்படம் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இத்திரைப்படத்தை, எம்.ஐ.ஜி புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். சேட்டன் DK இதனை இயக்கியுள்ளார்.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் ரசாயனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதையும், அதனால் பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் படம் விரிவாகப் பேசுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கடுமையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் தேவை என்பதை ஒரு குடும்பத்தின் கதை வழியே உணர்த்துகிறது.படம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே, “நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும், ஆனால் வெளியில் தெரியாத ஒரு ஆபத்தான உண்மையை இப்படம் பேசுகிறது. ரசாயனங்களின் தவறான பயன்பாடு என்பது மனித வாழ்வாதாரம் சார்ந்த ஒரு முக்கியப் பிரச்சினை. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “கதையின் உண்மைத்தன்மை மாறாமல் இருக்க ஒட்டுமொத்த குழுவும் உழைத்துள்ளது. காஜல் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இருவரின் சிறப்பான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிப்பதால், இவர்களின் கூட்டணி கதைக்குக் கூடுதல் ஆழம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்ய, மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பையும், ஷகீல் அஜாமி பாடல்களையும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர். ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ் உள்ளிட்ட பலர் இதன் இணை தயாரிப்பாளர்கள் ஆவர்.

கருத்துள்ள திரைப்படங்களை விரும்பும் இன்றைய ரசிகர்களுக்கு, ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடும் இந்த ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கும் படமாக இருக்கும்.