பார்த்திபன் கனவு பலிக்கட்டும்!

பார்த்திபன் கனவு பலிக்கட்டும்!

டிகர், இயக்குநர் ரா.பார்த்திபனின் சமூக அக்கறையுள்ள, புதுவிதக் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அவை, பிராந்தியில் கலந்த நீர் போல நம் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்துபோய்விடுகின்றன.

சமீபத்தில், முதலமைச்சரைச் சந்தித்த ரா.பார்த்திபன், டாஸ்மாக் மதுக்கடைகள் பற்றி வைத்த ஒரு முக்கிய கோரிக்கையும் அப்படித்தான் ஆகிவிட்டது.

உண்மையில் அவர் கூறிய கருத்து, நாட்டுக்கு மிக முக்கியமானது.

அந்தச் செய்தி…

முதலமைச்சரைச் சந்தித்துப் பள்ளி, கோவில் அருகே இருக்கும் 717 கடைகள் அப்புறப்படுத்தப்படுவதைப் பாராட்டிய பார்த்திபன், “மக்கள் நடமாட்டம் இல்லாத, ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் மயானங்கள் அருகில் டாஸ்மாக் கடைகளை வைக்க வேண்டும்” என்றார்.

மிகச் சிறந்த ஆலோசனை இது.

“உலகில் எங்காவது இப்படி மயானத்தில் மதுக்கடைகள் உண்டா” என்று தெளிவாக ஆத்திரப்படுவார்கள் பலர்.

“மக்கள் நடமாட்டம் இல்லாத, ஊருக்கு ஒதுக்குப்புறமாய்…” என்கிற பார்த்திபனின் கருத்தை நாம் கவனிக்க வேண்டும்.

வெகுபல நாடுகளில் இந்த விதி கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. அங்கே, மக்கள் எளிதில் அணுக முடியாதவாறு, ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில்தான் மதுக்கடைகளை அமைக்க முடியும்.

இங்கே பெரும்பாலும், குடியிருப்புப் பகுதிகளிலேயே மதுக்கடைகள் இருக்கின்றன… மூடப்படும் 717 போகவும்!

இதனால் சண்டை, சச்சரவுகளால் பொதுமக்களுக்குப் பாதிப்பு… பெண்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு அச்சம்… சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள்!

எனக்குத் தெரிந்த மதுப்பிரியர்களில் ஒருவர், “ஆபீஸிலிருந்து கிளம்பும்போதே, இன்னைக்குக் குடிக்கக் கூடாதுன்னு மனசு உறுதியோடத்தான் கிளம்புவேன். அதே எண்ணம்தான் இருக்கும். ஆனா வழியில டாஸ்மாக்கைப் பார்த்ததும், வண்டி தானா அங்கே போயிருது” என்று (நிஜமாகவே) வருந்தியது உண்டு. இப்படிப் பலர்.

மதுக்கடைகளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், இப்படிப்பட்டவர்களுக்குக் குடிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படாது.

தவிரத் தூரத்தில் இருந்தால், “போய்க் குடிக்கணுமே” என மது அருந்துவதைப் பலரும் தள்ளிப்போடுவார்கள்.

ஆகவே, பார்த்திபனின் யோசனை மிக அற்புதமானது.

மேலும் அவர், “மதுப்பிரியர்களின் ஊதியமும் வாழ்க்கைத்தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதன் பின்பே அவர்கள் பணக்காரர்களைப் போல ஜாலிக்காக மிதமாகக் குடிக்கப் பழகுவார்கள்” என்றதோடு, “உலகம் முழுக்கத் தங்கள் குடியைக் கெடுக்காமலும் குடிக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

இதுவும் முழு உண்மை. ஆராய்ந்து, அறிந்து பேசியிருக்கிறார்.

உதாரணமாக, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரு நபர், தனது மாத வருமானத்தில் மதுவுக்காக ஒதுக்குவது 3% முதல் 4% மட்டுமே. இதர வருமானம் அவரது குடும்பத்திற்குச் செலவிடப்படுகிறது.

ஆனால் (இந்தியாவில்) தமிழ்நாட்டில், ஒரு கூலித் தொழிலாளி தனது வருமானத்தில் கிட்டத்தட்டப் பாதியை மதுவுக்காகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது. குடும்பத்தின் உணவு, கல்வி பாதிக்கப்பட்டு வறுமை சூழ்கிறது. அவர்களது ஊதியம், வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டால், பார்த்திபன் சொல்வது போல, ராஜ போதையில் இருப்பார்கள். ராஜ போதை என்பது அளவற்ற போதை அல்ல. அளவோடு குடித்து வளமோடு வாழ்வது!

“நம்மூரில்தான் மதுவில் குளிக்கிறார்கள்” என பார்த்திபன் வேதனைப்படுவதும் உண்மை.

வெளிநாடுகள் பலவற்றில், வார இறுதி நாட்களில்தான் மது அருந்துகிறார்கள். இங்கேதான் பலருக்குத் தினசரி கடமையாக ஆகிவிட்டது.

இன்னும் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

நம்மில் பலர் வெளிநாட்டுத் திரைப்படக் காட்சிகளைப் பார்த்து, “அவனுங்க குடிச்சாலும் வீணாப்போறதில்லையே” என்கிற ஆதங்கம் இருக்கும்.

பலருக்கும் தெரியாத விஷயம்…

அங்கே, இருவிதமான மதுக்கடைகள் உண்டு.

வீரியம் குறைந்த பீர், ஒயின் போன்ற பானங்கள் விற்கும் கடைகள் அதிகமாக இருக்கும். தனியார்கள் நடத்துவார்கள்.

வீரியம் அதிகம் உள்ளவைகளும் இருக்கும். இதில் ஆல்கஹால் அளவு வெறும் ஐந்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை மட்டுமே இருக்கும்.

விஸ்கி, பிராந்தி போன்ற கடுமையான “ஹார்ட் லிக்கர்” சுமார் 42% ஆல்கஹால் உள்ள மதுவகைகளை அரசே நேரடியாக விற்கும். இந்தக் கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நடத்தப்படும்.

மிக முக்கிய விஷயம்… இந்த மதுக்கடை அருகில் பார் இருக்காது. நம்ம கேரளா போல பாட்டிலை வாங்கி வீட்டில் அல்லது வேறு எங்காவது தனிப்பட்ட இடங்களில் குடிக்க வேண்டியதுதான்.

பர்மிட் பார் போன்றவை மட்டுமே நகருக்குள்… அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும்.

வெளிநாடுகள் பலவற்றில் உள்ள இன்னும் சில விதிகளை இங்கே கொண்டு வந்தால் நல்லது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கடைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும். அதாவது வாரத்துக்கு ஒன்றரை புல்… ஸாரி, ஒன்றரை நாள் முழு விடுமுறை! முக்கியமாக, இந்த ஒன்றரை நாளில் கடையில் இருந்து ஒரு சொட்டு மது கூட லீக் ஆகாது!

இன்னொரு விஷயம்… தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மதுவகைகளின் தரம் மிக மோசமானது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் உண்டு. தரத்தை உயர்த்த வேண்டும்.

பார்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

ஆனால், வரும் 30-ம் தேதியோடு, பார்களின் காலம் முடியப்போகிறது… புது டெண்டர் விட அரசு தயாராகி வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மொத்தத்தில்…

ஊரைவிட்டுத் தள்ளி மதுக்கடைகளை வைத்து, வீரியம் குறைவான மதுக்களை விற்று, பார்களை இழுத்து மூடினால்… பார்த்திபனின் கனவு பலிக்கும். பெண்கள், குழந்தைகளின் கனவுகள் சிதையாமல் தடுக்கப்படும்.

பார்த்திபன் கனவு மெய்ப்பட வேண்டும்!

– டி.வி.சோமு