நடிகர் விதார்த்தின் மகள் காதம்பரி: நடிப்பில் முத்திரை பதித்த குட்டி நட்சத்திரம்!

நடிகர் விதார்த்தின் மகள் காதம்பரி: நடிப்பில் முத்திரை பதித்த குட்டி நட்சத்திரம்!

பிரபல நடிகர் விதார்த்தின் மகள் காதம்பரி,  முதல் முதலாக நாடக மேடையேறி சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

மைனா, குரங்கு பொம்மை, பயணிகள் கவனிக்கவும், வீரம், அஞ்சாமை என தான் நடித்த அனைத்து படங்களிலும் இயல்பான நடிப்பின் மூலம் நம்மை கவர்ந்தவர், விதார்த்.கதாபாத்திரமாகவே மாறி, நம்மையும் திரைப்படத்துடன் ஒன்றச் செய்யும் ஆற்றல் கொண்டவர், அவர்.  இப்போது, அவரது மகள் காதம்பரியும் நடிப்பில் முத்திரை பதித்து உள்ளார்.இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை, ‘காற்றினிலே வரும் கீதம் – இசையரசியின் வாழ்க்கைப் பயணம்’ என்கிற தலைப்பில், அழகுற எழுதி இருக்கிறார், ரமணன். இந்த நூலில் அடிப்படையில், இதே தலைப்பில், மிகச் சிறப்பாக நாடகமாக்கி இருக்கிறார் பாம்பே ஞானம். இந்த நாடகத்தில், முதன் முதலாக நாடக மேடையேறி, சிறப்பாக நடித்து அசத்தி இருக்கிறார், நடிகர் விதார்த் – காயத்ரி தேவி தம்பதியின் மகள் காதம்பரி.

எம்.எஸ்.சுப்புலட்சுமியை, குடும்பத்தினர் குஞ்சம்மாள் என்றே அழைப்பார்கள். சிறுமி குஞ்சம்மாவுக்கு, பாடகியாக வேண்டும் என்பது விருப்பம். ஆனால் அக்காலத்தில், ஆண்கள்தான் வாய்ப்பாட்டு பாட முடியும். பெண்கள், பக்கவாத்தியம்தான்.

குஞ்சம்மாள், தன் தாய் வடிவாம்பாலிடம், தனக்கு வாய்ப்பாட்டுச் சொல்லித்தர குரு வேண்டும் என ஆசையுடன் கேட்கிறார். தாயார் மறுக்க… குஞ்சம்மாள் அடம் பிடிக்கிறார்.

இந்தக் காட்சியில் காதம்பரி தத்ரூபமாக நடித்து, அரங்கத்தினரின் ஏகோபித்த கைதட்டலைப் பெற்றார்.

தொடர்ந்து தாயார், குருவை நியமிக்க… குஞ்சம்மாவான காதம்பரி மகிழ்வது, நேர்த்தியாக பாடி முடித்து அண்ணனை பெருமிதத்துடன் பார்ப்பது, ‘எங்கே இதெல்லாம் கத்துக்கிட்டே’ என கேட்கும்போது, குழந்தைத்தனத்துடன் ‘எங்கேயோ கத்துக்கிட்டேன்’ என்று சொல்லிவிட்டு, மணல் வைத்து விளையாட ஓடுவது…

இப்படி காட்சிக்குக் காட்சி வியக்க வைத்துவிட்டார் குஞ்சம்மா… ஸாரி, காதம்பரி!

இது குறித்து நாடக இயக்குநர் பாம்பே ஞானத்திடம் பேசினோம். அவர், “காதம்பரி ஒரு அற்புதக் குழந்தை.  அவர் பரதநாட்டிய குரு, வித்யா சொல்லித்தான்  நாங்கள் காதம்பரியைப் பார்த்தோம்.  சுமார் அறுபது நாட்கள் பயிற்சி. சொல்லிக்கொடுத்த உடனே, புரிந்துகொண்டு இயல்பாக நடிப்பார், காதம்பரி” என்று பாராட்டினார்.

காதம்பரியின் தந்தை விதார்த்திடம் பேசியபோது அவர், “நாடக இயக்குநர் பாம்பே ஞானம் உள்ளிட்ட குழுவினர், கியேட்டிவ் ஹெட் மோகன் பாபு,  தயாரிப்பாளர்கள் பாஸ்கர், லாவண்யா ஆகியோருக்கு நன்றி…! நான் தொடர்ந்து படப்பிடிப்புக்காக வெளியூர் போயிருவேன்.  என் மனைவி காயத்ரிதான்,  காதம்பரியை தயார் படுத்துற வேலைகளை பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கும் நன்றி சொல்லணும்..” என்றார் நெகிழ்ச்சியாக.

விதார்த் நடிப்பு பற்றி, சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

அதே நேரம், விதார்த் குறித்து விக்கி பீடியா பக்கத்தில், ‘2001ல் அவர் நடித்த முதல் படத்தில் இருந்து . 2007ல் வெளியான குருவி வரை, ‘(பெயர்) குறிப்பிடப்படாத பாத்திரம்’ என்றே குறிப்பிட்டு இருக்கும். அதன் பிறகு அவர் நடிப்பில் முத்திரை பதித்தது.. பதித்து வருவது நிஜம்.

ஆனால், அவரது மகள் காதம்பரி, தனது முதல் நடிப்பு மேடையிலேயே, குறிப்பிட்டுச் சொல்லும் கதாபாத்திரத்தில்.. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்து அசத்தி இருக்கிறார்!

விதார்த் பெருமைப்படலாம்!

வாழ்த்துகள் காதம்பரி!

– டி.வி.சோமு

Related Posts