‘மெய்யழகன்’ படப்பாடலில் சாதி வெறியா?
96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த, பிரேம்குமார் இயக்கி உள்ள படம், மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சுவாமி, திவ்யா ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. அதே நேரம், ஒரு சர்ச்சையையும் சிலர் கிளப்பி வருகிறார்கள்.
“இப்படத்தில் வரும், ‘வெறி’ பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது. அந்த பாடலில் தமிழரின் வீரம், போராட்டம் எல்லாம் காட்சிகளாக வருகின்றன.
அதே நேரம், ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) காட்சிகள் அதிகம் வருகின்றன. ஏறு தழுவுதல் என்பதே குறிப்பிட்ட சில சாதியினருக்கானவை என்பதே நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், அந்த பாடலில் ‘மறப்பண்பாடு’ என்கிற வார்த்தை வருகிறது. அதாவது, ‘இனத்துக்காக போராடுபவர்கள்- ஏறு தழுவுதலில் ஈடுபடுபவர்கள் மறவர் சாதி மக்கள் மட்டுமே’ என்கிற அர்த்தத்தை கொடுப்பதாக இருக்கின்றன அந்த வார்த்தை.. இது சாதி வெறி” என்று சமூகவலைதளத்தில் ஆதங்கப்படுகின்றனர் ஒரு சிலர்.
வேறு சிலரோ, பாடலில் இடம் பெற்ற இந்த வார்த்தை, தங்களைக் குறிப்பதாகச் சொல்லி ஒருவர் பெருமிதப்படுவதையும் சமூகவலைளத்தில் பார்க்க முடிந்தது.சிரிப்புத்தான் வருகிறது.
மொழிக்காக, இனத்துக்காக, மக்களுக்காக போராடியவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் சாதியைக் கடந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.
ஆம்… குறிப்பிட்ட பாடலில் வரும், ‘மறப்பண்பாடு’ என்கிற வார்த்தை, சாதியைக் குறிப்பது அல்ல.
அரசன் மாற்றார் மீது படையெடுத்துச் சென்றதனையும்; ஆநிரை கவர்ந்து வந்ததனையும் போர் மரபாக – மறப்பண்பாடாக சொல்கிறது புறநானூறு. அதாவது தமிழர்களுக்கான பண்பாடு!
இதிலிருந்தே மறப்பண்பாடு என்பது சாதியைக் குறிப்பது அல்ல. தமிழரின் பண்பாட்டைக் குறிக்கும் பொதுச் சொல் என்பதை அறியலாம்.
தஞ்சை பகுதியில் பரவலாக வாழும் கள்ளர் இன மக்களில், ‘நாட்டார்’ என்ற உட்பிரிவு உண்டு. ஒரு படத்தில்கூட, ‘சோழ நாட்டார்’ என்று வரும்.
அதே நேரம், ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றால், பரம்பரையாக ஒரு பகுதியில் வாழும் மக்களின் பண்பாடு, இலக்கியத்தைச் சொல்லும் துறை என்பது அர்த்தம். இதற்கு சாதி அர்த்தம் கிடையாது.
இன்னும் எளிதாகச் சொல்வதானால்,
பிள்ளை என்றால் மைந்தன் – மகன் என்று அர்த்தம்.
அதே நேரம், சில சாதியினர், தங்கள் பெயருக்குப் பின்னால் பட்டப்பெயராக ‘பிள்ளை’ என்று சேர்த்துக்கொள்வது உண்டு.
ஒரே வார்த்தைக்கு பல அர்த்தம் உண்டு. இதை உணராதவர்கள்தான், தானும் குழம்பி, பிறரையும் குழப்ப முயற்சிக்கின்றனர்.
தேவையற்ற சர்ச்சையைத் தவிர்ப்போம்.
– டி.வி.சோமு