அரசியலுக்கு வருகிறார் ஜோதிகா?
“இந்து மதத்தை விமர்சித்தார்!” என ஜோதிகாவை சமூகவலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர். அதே நேரம், “ஜோதிகா தவறாக ஏதும் சொல்லவில்லை. பள்ளி, மருத்துவமனைகளுக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும்!” என்பதையே அவர் கூறினார் என்றும் பலர் பதிவிட்டனர்.
இந்த விவாதம் பூதாகரமெடுக்கவே, “தவறான நோக்கத்தில் ஜோதிகா ஏதும் கூறவில்லை!” என அவரது கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை வெளியிட்டார்.
சூர்யா குடும்பத்தினர் நடத்தும் அகரம் பவுண்டேசன் என்கிற அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
நீட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சூர்யா வெளிப்படையாக கருத்து தெரிவிக்க, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து.
இந்நிலையில், பொது விசயங்கள் குறித்து ஜோதிகாவும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதையடுத்து ஜோதிகா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பபில், ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம், வரும் 29ம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாகிறது
இது குறித்து ஜோதிகா கூறும்போது, “எனது படங்களை, பல ஆண்டுகள் கழித்தும் மக்களி நினைவு வைத்துப் பேச வேண்டும் என விரும்புகிறேன்.
சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது. பொன்மகள் வந்தாள் திரைப்படம், மக்களுக்குத் தேவையான செய்தி ஒன்றை சொல்கிறது. அடுத்தடுத்து நான் தேர்வு செய்து வைத்துருக்கும் படங்களும் அப்படியானவையே.
என் படங்களை பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஹைலைட் பண்ணி படங்கள் பண்ணவேண்டும். நிறைய ரசிகர்கள் படத்தைப் பார்ப்பார்கள். ஆகையால், சமூக அக்கறையுள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறேன். கமர்ஷியல் படங்களில் பாட்டு, காதல் காட்சிகள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி படங்களில் வித்தியாசமான களங்களில் நம்மை காண முடியும். நான் கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போது தான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது!” என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
“சமூக அக்கறை உள்ள படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன்” என அவர் கூறியதை அடுத்து, அவர் அரசியலுக்கு வருவாரோ என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.