‘ஜனநாயகன்’: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த படத்தலைப்பு!

டி.வி.சோமு சிறப்புப்பக்கம்:
நடிகர் – தவெக தலைவர் விஜய் நடிக்கும் கடைசி படத்தின் முதல் பார்வை சற்றுமுன் வெளியாகி இருக்கிறது.
‘லியோ’ மற்றும் ‘கோட்’ படப்பிடிப்புகளுக்கு இடையே வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்த பாணியில் பர்ஸ்ட் லுக் உள்ளது.
அதே நேரம் நெய்வேலியையும் நினைவு படுத்துகிறது. அங்கு படப்பிடிப்பில் ரசிகர்களுடன் இப்படி செல்பி எடுத்துக்கொண்டார். அதோடு, விஜயை, வருமான வரித்துறை அதிகாரிகள் ஏதோ, பிடித்துக்கொண்டு போகிற மாதிரி காரில் வைத்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
ஆகவே, பர்ஸ்ட் லுக்கில் இந்த மாதிரிய போஸ்டரை விஜய் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே போல, ‘டைம் டூ லீட்’ கேப்சன் இருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்தேன். இல்லை.
அதான் அரசியலுக்கு வந்து கட்சித் தலைவர் ஆகிவிட்டாரே, அதனால் அந்த வார்த்தையை வைக்காமல் இருந்திருக்கலாம்!அதே நேரம், எம்.ஜி.ஆர். சாட்டையைச் சுழற்றும், “நான் ஆணையிட்டால்..” பாடல் வரிகளை பதிந்து, அதே போல விஜய் சாட்டையுடன் போஸ் கொடுக்கும் செகண்ட் லுக் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அது அந்தக் கால படம்.
ஆனால் இந்தக் காலத்திலும் சீமான், “பச்சை மட்டையில அடிப்பேன்” என்று உளறுவதும், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போல பாஜக அண்ணாமலை அலப்பறை செய்வதும்.. ஏற்கவே முடியாத விசயம்.
இந்த நிலையில், அரசியலுக்கு வந்துவிட்ட நடிகர் விஜய் சாட்டையுடன் போஸ் கொடுத்து இருக்கிறார்.
என்னத்தைச் சொல்வது?
முக்கயமான விசயத்துக்கு வருவோம்.
படத்தின் தலைப்பு, ‘ஜனநாயகன்’ என்பதைப் பார்த்தவுடன் எனக்கு ஸ்பார்க் அடித்தது. அதை
ஆமாம்…
உடனடியாக நினைவுக்கு வந்தவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
14 வயதில் ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’வை ஆரம்பித்ததில் இருந்து துவங்கி 2021 மே 7 ஆம் தேதி அவர் முதலமைச்சராகப் பதவியேற்றது வரையிலான, அவரது அரசியல் வாழ்க்கையை – முக்கிய நிகழ்வுகளை – தொகுத்து ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியானது. திருவாருர் ஜெயகாந்தன் தொகுத்து இருந்தார்.
தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யப்போவதாக கூறிய விஜய், அந்த திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து வெளியான புத்தகத்தின் தலைப்பை எப்படி தனது படத்தலைப்பாக தேர்ந்தெடுத்தார்?
ஆச்சரியம்தான்!
அந்த நூலாசிரியர் திருவாரூர் ஜெயகாந்தனிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை. அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை.
ஜனநாயகம் என்கிற பெயரை தலைப்பாக வைத்து இருந்தால் அது பொது வார்த்தை. ‘வாழ்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில்கூட ஒரு திரைப்படம் வெளியானது.
ஆனால், வழக்கமான வார்த்தையில் இருந்து வேறுபட்டு, ‘ஜனநாயகன்’ என்று இருக்கும்போது அனுமதி பெறுவதே முறை.
அதே போல, பிரபல எழுத்தாளர் பத்திரிகையாளர் பா.ராகவன், பாலஸ்தீன விவகாரம் குறித்து, ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்கிற தலைப்பில், பத்திரிகையில் தொடர் எழுதினார். பிறகு புத்தகமாக வெளியானது.
அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடிக்க இருந்த ஒரு படத்துக்கு, ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட… பா.ராகவன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதே போல பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை தொகுப்பு ‘ஊமைச் செந்நாய்’ என்கிற தலைப்பில் வெளியானது. இது குறித்து நான் ஜெயமோகனிடம் பேசியபோது வருந்தினார்.
ஏற்கெனவே உள்ள படத் தலைப்புகளையே மீண்டும் வைக்காதீர்கள் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
காரணம், குறிப்பிட்ட பெயரை கூகுளில் தட்டச்சினால், முந்தைய புத்தகம் அல்லது திரைப்படம் குறித்த செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. தேவையற்ற குழப்பம்.
இப்போது கூட, சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘பராசக்தி’ என தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.
1952ல், கலைஞர் வசனத்தில் வெளியானது இப்படம். அவரது வசனங்கள் இன்றும் உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடியவை.
சிவகார்த்திகேயனின் படத்துக்கு, ‘பராசக்தி’ என பெயர் வைப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கலைஞரின், ‘பராசக்தி’ குறித்த தகவல்கள் கூகுளில் சர்ச் செய்யும் போது பின்னே சென்றுவிட்டன.
கலைஞரின் வசனங்களை வருங்கால சந்ததியினர் கவனிக்கக்கூடாது என திட்டமிட்டே இப்படி செய்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.
பல கோடி ரூபாய் செலவு செய்து, பல நூறு பேர் இணைந்து திரைப்படம் எடுப்பவர்களுக்கு, புதிதாக தலைதப்பு வைக்க நேரம் கிடைக்காதா?
உடனடியாக, ‘பராசக்தி’, ‘ஜனநாயகன்’ இரு படங்களின் தலைப்பையும் திரும்பப்பெற வேண்டும்.
– டி.வி.சோமு