நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தோல்வி!: கருத்துக்கணிப்பு உண்மையா?
2024 மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்.டி.ஏ) எதிர்கொள்ள, நாடு முழுவதும் உள்ள, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ஐ.என்.டி.ஐ.ஏ. என்கிற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில், நாடு முழுதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதகவும், இதன் அடிப்படையில் ஐ.என்.டி.ஏ. கூட்டணி, 357 இடங்களையும், என்.டி.ஏ. கூட்டணி 155 இடங்களையும் இதர கட்சிகள் 31 இடங்களையும் பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பை பேராசிரியர் ராஜநாயகம் இயக்குநராக பொறுப்பு வகிக்கும் மக்கள் ஆய்வகம் நடத்தியதாகவும் சமூகவலைதளங்களில் ஒரு பதிவு பரவி வருகிறது
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், மக்கள் ஆய்வகம் நடத்தும் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை தேர்தல் முடிவோடு ஒத்துப்போகும்.
ஆனால், அப்படி கருத்து கணிப்பு நடத்தினால், அந்த அமைப்பு செய்தியாளர் கூட்டத்தி வெளியிடும். அப்படி ஏதும் இல்லாத நிலையில், திடுமென ஒரு கருத்துக்கணிப்பு என பரவி வருகிறது.
ஆகவே, இது குறித்த உண்மைத் தன்மை குறித்து அறிய, மக்கள் ஆய்வகம் இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகத்தைத் தொடர்பு கொண்டு தமிழன் குரல் இணைய இதழ் சார்பாக பேசினோம்.
அவர், “கடைசியாக கடந்த 2016 மற்றும் சமீபத்திய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவற்றின் போது கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதன் முடிவுகளை செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டோம்.
ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து இதுவரை நாங்கள் எந்தவொரு கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை. அதற்காக இப்போததான் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அதற்குள் யாரோ விசமிகள் இப்படி எங்கள் பெயரைப் பயன்படுத்தி போலியாக ஒரு தகவலை பரப்பி வருகின்றனர்.
எப்போதுமே செய்தியாளர்களை அழைத்து, எங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவோம். ஆகவே வீண் புரளியை எவரும் நம்ப வேண்டாம்” என்றார்.

