கலவரத்தைத் தூண்டும் திரைப்படம்! அடுத்த படமும் ரெடியாகுது!
டி.வி.சோமு சிறப்புப் பக்கம்:
சாவா (chavva) என்ற திரைப்படம், மராட்டிய மாநிலத்தில் கவலரத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு தரப்பினருக்கு இடையேயான மோதலில் வீடுகள், வாகனங்கள எரிக்கப்பட்டு உள்ளன. காவல்துறை கண்ணீர்புகை குண்டு வீசி கும்பலை கலைத்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் அதே அம்சத்துடன் இன்னொரு பான் இண்டியா படம் தயாராகி வருவது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செய்தியை விரிவாகப் பார்ப்போம்…
முகலாய மன்னரான அவுரங்கசீப், 658 முதல் 1707ஆம் ஆண்டுவரை பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்தவர். இவரது கல்லறை, மராட்டிய மாநிலம் குல்தாபாத் என்ற சிற்றூரில் உள்ளது. “இதை சிதைக்க வேண்டும், உருத்தெரியாமல் அழிக்க வேண்டும்” பல காலமாகவே இந்துத்துவவாதிகள் முழங்கி வருகிறார்கள்… அவ்வப்போது கலவரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் கலவரம் வெடித்து இருக்கிறது.அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நேற்று முன்தினம் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள், மராட்டிய மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. நாக்பூரை மையமாக வைத்து நடந்த அந்த போராட்டதில் இஸ்லாமியரின் புனித நூலான குரானைதான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் இஸ்லாமியர்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன.
தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதில் சுமார் 10 பேர் காயம் அடைந்தனர். 3 காவல் அதிகாரிகள் உட்பட 15 காவலர்கள் காயமடைந்தனர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச சங் பரிவாரிகள், அவுரங்கசீப்பின் கல்லறையை உடைப்பவருக்கு 21 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸின் தலைவரான தினேஷ் ஃபல்ஹாரி இதுதொடர்பாக ஒரு வீடியோவில், ” ஔரங்கசீப்பின் கல்லறையை புல்டோசர் மூலம் இடிப்பவருக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி சங்கர்ஷ் நியாஸிடமிருந்து 21 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.
ஔரங்கசீப் இந்து கோயில்களை இடித்தார், இந்து பெண்களுக்கு அட்டூழியங்களைச் செய்தார்.. அவர் மராட்டிய வீரர்களையும் கொடூரமாக தாக்கினார். சமீபத்திய திரைப்படத்தில் அதைப் பார்த்த பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று ஆவேசமாக கூறி இருக்கிறார்.
இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்… ஒரு திரைப்படம், இந்த வெறியை (மீண்டும்) ஏற்படுத்தி இருக்கிறது.
அந்தத் திரைப்படம், சாவா (chavva).
லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷால், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
படத்தின் கதைக்கு வருவோம். அதுதான் பிரச்சினை.
முகலாய மன்னர் அவுரங்கசீப், இந்துக்களுக்கு எதிராக கொடும் செயல்களில் ஈடுபடுவது போலவும், சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்போஜியை கொடூரமாக சித்திரவதை செய்து கொல்வது போலவும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “தற்போது வெளியாகி இருக்கும் ‘சாவா’ திரைப்படமே முகலாய மன்னர் அவுரங்கசீப் மீது மக்களின் கோபத்தைத் தூண்டியது” என்று நாக்பூர் கலவரம் குறித்து மராட்டிய சட்டப் பேரவையிலேயே தெரிவித்தார்.
அதோடு, ” கலவரத்தில் ஈடுபடுவோர் மீது சாதி மத பேத மின்றி நடவடிக்கை எடுக்கப்படும்… நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவோம்” என்றார்.
ஆனால் இது எந்த அளவுக்கு நடக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது. இவர் பாஜக-வைச் சேர்ந்த முதலமைச்சர்.
விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர், “அவுரங்கசீப் சமாதியை அகற்றக் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் மனு அளிப்போம். அப்போதும் அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம்” என்று ஆவேசமாக தெரிவித்து உள்ளனர்.
இப்போது புரிகிறதா, நமது கேள்வியின் அர்த்தம்!
சிவாஜியின் மகன் சாம்போஜியை, அவுரங்கசீப் கொன்றது உண்மையே. அதே நேரம், இதில் இருந்தது அதிகார வெறியே.
முகலாய வம்சத்தில் பிறரை மட்டுமல்ல.. தங்கள் குடும்பத்தினரையே அதிகாரத்துக்காக கொன்று இருக்கிறார்கள். இதே போன்று சிவாஜியின் வம்சத்திலும் நடந்திருக்கிறது. ஏன், உலகின் அரச வம்சம் அனைத்திலும் நடந்திருக்கிறது.
“இந்து” சாம்பாஜியை, “இஸ்லாமிய” அவுரங்கசீப் கொன்றார் என்பதுதான் சமீபத்தில் வெளியாகி கலவரத்துக் காரணமான படத்தின் கதை.
சாம்பாஜியின் தாத்தா… அதாவது சிவாஜியின் அப்பா.. பெயர் மாலோஜி. இவர் தக்காணத்தைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் செல்வாக்குடன் இருந்த மூன்று இஸ்லாமிய சுல்தான்களிடம் மாறி, மாறி தளபதியாக இருந்தவர்தான்.
இன்னொரு தகவல்..
சிவாஜியின் மகன் சாம்பாஜி (அவுரங்கசீப்பால்) கொல்லப்பட்ட பிறகு, சிவாஜி குடும்பத்தினரிடையே அடுத்தகட்ட அதிகார போட்டி ஏற்படுகிறது.
அப்போது சாம்பாஜியின் மகன் ஷாஹூவை வளர்த்தவர் அவுரங்கசீப்தான்.
“இந்த சிறுவனை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும். இஸ்லாமியப் பெயர் சூட்டக்கூடாது. அவனது வழிபாட்டு முறை எதுவானாலும் பின்பற்றட்டும்” என்றும் உத்தரவிட்டார்.
இவற்றைக் குறிப்பிடக் காரணம்… கொல்வது, அரவணைப்பதும் அரசர்களின் அரசியல். அவ்வளவே.
எப்போதோ நடந்த குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து, மக்களின் உணர்வுகளை கிளறி கலவரத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
இதே போன்ற அதிர்வலைகளை ஏற்படுத்தும் இன்னொரு படமும் உருவாகி வருகிறது.
அது குறித்து கடந்த ஜனவரி மாதமே எழுதினேன்.
அந்த லிங்க்…
https://tamilankural.com/hari-hara-veeramallu-aurangzeb-villain-muslims-controversy-l/
– டி.வி.சோமு
