‘ஹரி ஹர வீரமல்லு’ சர்ச்சை : பவன் படத்தில் அவுரங்கசீப் வில்லன்!

‘ஹரி ஹர வீரமல்லு’ சர்ச்சை : பவன் படத்தில் அவுரங்கசீப் வில்லன்!

ந்திர மாநில துணை முதலமைச்சரும் டோலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான பவன்கல்யாண் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம், ‘ஹரி ஹர வீரமல்லு’. தெலுங்கில் தயாரானாலும், தமிழ், கன்னடம், மலையாளம, இந்தி என பான் இண்டியா படமாக வெளியாக  உள்ளது.

இந்தத் திரைப்படமும், தி காஷ்மீர் பைல்ஸ்,  கேரளா ஸ்டோரி போன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை விதைக்கும் படமாக இருக்குமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் படத்தை, ஏ. தயாகர் ராவுடன் இணைந்து தயாரிப்பவர் ஏ.எம்.ரத்தினம். இவர், இந்தியன், நட்புக்காக, கில்லி உள்ளிட்ட தமிழ்ப் படங்களை மட்டுமின்றி தெலுங்கு படங்கள் பலவற்றையும் தயாரித்தவர். படத்தை இயக்குபவர் இவரது மகனும், ‘எனக்கு இருபது உனக்கு பதினெட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவுருமான ஜோதி கிருஷ்ணா. இவருடன் இணைந்து இயக்குபவர், கிரிஷ் ஜகர்லமுடி. (இவர், போதைப் பொருள் வழக்கு ஒன்றில் சிக்கியவர் என்பது பலருக்கு நினைவு இருக்கும்.)

சர்ச்சை ஏன் ஏற்பட்டது?

படக்குழு, “கி.பி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் நடக்கும் கதை. அப்போது இந்திய வளங்களையும் நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்க படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும் எதிர்த்து ஓடவிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த ஹரி ஹர வீரமல்லு” என்று ப்ரஸ் ரிலீஸ் கொடுத்தது.

ஆனால், படத்தின் டிரெய்லரில், ( நெற்றியில் குங்குமம், திருநீறு வைத்துள்ள) இந்துக்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து, “நம்மள ஜமீன் கொள்ளையடிச்சா, அவரை கோல்கொண்டா நவாப் கொள்ளையடிப்பான்; அந்த நவாப்பை டில்லியில் இருக்கிற முகல் சக்ரவர்த்தி கொள்ளையடிப்பான்” என்கிற வசனம் பின்னணியில் ஒலிக்கிறது.

திரைப்படத்தில் ஔரங்கசீப்

இங்கு குறிப்பிடப்படும் முகல் சக்ரவர்த்தி, அவுரங்கசீப். முகலாய சாம்ராஜ்ய வரலாற்றிலேயே, அதீத (இஸ்லாமிய) மதப்பற்று கொண்டவராக அறியப்படுபவர். நவாப்பும் இஸ்லாமியர். ஜமீன் மட்டும் இந்துமதத்தைச் சேர்ந்தவராக காண்பிக்கப்படுகிறார்.

தொடர்ந்து வரும் வசனம், “மேல இருக்கிற இந்த திருடர்களை கொள்ளையடிக்க கடவுள் கண்டிப்பா ஒருத்தனை அனுப்புவான்; அவன் வந்து இந்த திருடர்களை எல்லாம் ஒழிச்சுகட்டுவான்” என்று இருக்க… கழுத்தில் காவி துண்டுடன், வந்து குதிக்கிறார், பவன் கல்யாண்.

காவி உடையுடன் பவன் கல்யாண்

இந்த பவன்கல்யாண், ஆந்திர துணை முதலமைச்சர் , ஜனசேனா கட்சியின் நிறுவன தலைவர் மட்டுமல்ல… அதீத (இந்து )மதப்பற்று கொண்டவர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், மாட்டு கொழுப்பு கலந்து இருப்பதாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சொல்ல…பொங்கி எழுந்தார் பவன் கல்யாண்.

“திருப்பதி கோயில் அசுத்தமாகி விட்டது… நான் 11 நாள் விரதம் இருக்கிறேன்” என்று உட்கார்ந்தார். பிறகு கால்நடையாக திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கினார்.

பிரகாஷ்ராஜ் – கார்த்தி

“துணை முதலமைச்சர், தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையை கண்டறிவாரா… இப்படி விரதம், பாதயாத்திரை என்று போகிறாரே” என்று விமர்சனம் எழுந்ததை அவர் கண்டுகொள்ளவில்லை.

‘மெய்யழகன்’ படத்தின் தெலுங்கு வெர்சன் பிரோமோசனுக்காக ஹைதராபாத் சென்ற அப்படத்தின் நாயகன் கார்த்தி, விளையாட்டாக, திருப்பதி லட்டு விவகாரத்தை பேசப்போக.. பவன்கல்யாண் கொதித்தெழ… கார்த்தி மன்னிப்பு கேட்டதும் தெரிந்த சேதிதானே! இதே விவகாரத்துக்காக நடிகர் பிரகாஷ்ராஜையும் கடுமையாக எச்சரித்தார், பவன்.

அதோடு, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேச.. “சனாதனத்தை விமர்சிப்பவர்கள் அழிந்து போவார்கள்” என்று ஆவேசமானார் பவன்.

உதயநிதி

மேலும் சனாதனத்தைக் காக்க, ‘நரசிம்ம வராஹி படை’ ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார்.

இப்படி இந்துத்துவ மனநிலை உள்ளவர்தான், அதி தீவிர இஸ்லாமிய பற்றாளராக அறியப்படும் முகலாய மன்னர் அரங்கசீப்பிடம் இருந்து வைரத்தை பறிக்கும் நாயகனாக படத்தில் நடிக்கப்போகிறார்.

இதில் ஔரங்கசீப் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர், பிரபல வில்லன் நடிகர் பாபிதியோல்.

பட டீசரில் வரும் சண்டைக் காட்சிகளில் பவன் மற்றும் அவரது அணியினர் காவி நிற ஆடை அணிந்து இருக்கிறார்கள். எதிரி வீரர்கள் அனைவரும் கருப்பு அல்லது வெள்ளை நிற ஆடை அணிந்து உள்ளனர்.

மோடி – பவன்

பவன் கல்யாண்  ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி மீது மிகுந்த மதிப்பு உள்ளவர். “மோடி மட்டும் இல்லாவிட்டால் இந்தியா என்ன ஆகியருக்குமோ…” என்கிற அளவுக்கு புகழ்பவர்.

இந்த மோடி பதவிக்கு வந்ததுமே டில்லியில் அவுரங்கசீப் பெயரில் இருந்த சாலையின் பெயரை மாற்றி, அப்துல் கலாம்  சாலை பெயரை வைக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என மாற்றப்பட்டது.

அதுமட்டுமல்ல… மோடி,”அவுரங்கசீப் கொடுங்கோலர்; அவரைப் புகழ்பவர்கள் தேசத்துரோகிகள்” என்றார்.

பாஜக எம்.பி. மகேஷ்கிரி இன்னும் வெளிப்படையாக “அவுரங்கசீப் ஒரு பயங்கரவாதி” என்றார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “அவுரங்கசீப்பின் சந்ததியினர் ரிக்‌ஷா ஓட்டுவதாக சிலர் என்னிடம் கூறினார்கள். அவர் இந்து கோயில்கள் ஏராளமானவற்றை இடித்ததே இதற்குக் காரணம்” என்றார் கிண்டலாக.

சாலை பெயர் மாற்றம்

பாஜகவைப் போன்ற இதர இந்துத்துவா கட்சிகளும் சும்மா இல்லை.

மகராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் அவுரங்கசீப்பின் கல்லறை உள்ளது. சிவசேனா, நவ நிர்மான் சேனா ஆகிய இந்துத்துவ கட்சிகளின் தலைவர்கள், “அந்த சமாதியை இடித்து அகற்ற வேண்டும்” என்றனர்.

அவுரங்கசீப் கல்லறை

தற்போது உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது.

தவிர, “இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கூடாது. பிசி, எஸ்.சி. இட ஒதுக்கீடு இதனால் குறைகிறது” என்றெல்லாம் மோடி உள்ளிட்ட பாஜக ஆட்கள் பேச, இதை வழிமொழிந்தார் பவர்.

அந்த அளவுக்கு பவன் உள்ளிட்ட இந்துத்துவ ஆட்கள் அவுரங்கசீப் மற்றும் இஸ்லாமியர்கள் மீது ‘பாசத்துடன்’ இருக்கிறார்கள்.

ஆகவே, இந்தப்படம் படம் இஸ்லாமியருக்கு எதிராக இருக்கும் என நினைப்பது இயல்புதானே!

சரி, உண்மையில் அவுரங்கசீப் எப்படிப்பட்டவர்… நல்லவரா, கெட்டவரா?

அவுரங்கசீப் என்றவுடன் ஜிசியா வரிதான் நினைவுக்கு வரும். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் இதர மதத்தவருக்கு விதிக்கப்பட்ட வரி. மேலும், அவுரங்கசீப் காலத்தில் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு குறைவான சுங்கவரியும் பிற மத வியாபாரிகளுக்கு அதிகமான சுங்க வரியும் இருந்ததாகவும், பிறகு இஸ்லாமியர்களுக்கு சுங்கவரி முற்றிலும் விலக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்துக்களை வெறுத்தார். ஏராளமான இந்து கோயில்களை இடித்து மசூதிகளை கட்டினார் என்பதும் நினைவுக்கு வரும். ( உ.பி.யில் காசி நகரத்தில் உள்ள ஞானவாபி மசூதி இப்படி கட்டப்பட்டதுதான் என்கிற சர்ச்சை நடந்து கொண்டு இருப்பதை அறிவீர்கள்.)

அவுரங்கசீப்

ஆனால், “அவுரங்கசீப் குறித்து அதீதமான வெறுப்பை சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்படுத்திவிட்டன. உண்மை அது இல்லை” என்கிறார்கள் பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

‘ஒளரங்கசீப் – தி மேன் அண்ட் தி மித்’ என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்க வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆட்ரி ட்ருஷ்கி, “அவுரங்கசீப் சில கோயில்களை இடித்தார் என்பது உண்மையே. ஆனால் ஏகப்பட்ட கோயில்களை இடித்தார் என்பது தவறு” என்கிறார்.

இதே கருத்தைச் சொல்கிறார், வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டேல்ரிம்பிள். இவர் தனது, ‘பிரின்சஸ் அண்ட் பெயின்டர்ஸ் இன் முகல் டெல்லி, 1707-1857’ என்ற புத்தகத்தில் அவுரங்கசீப் பற்றிய பல்வேறு ஆச்சரிய தகவல்களை 2012-ல் வெளியிட்டார்.

“அவுரங்கசீப் இந்துக்களை வெறுத்தார் என்பது தவறு. அவரது அரண்மனையில் முக்கிய பொறுப்புகளில் இந்துக்கள் இருந்தனர். தவிர யாரையும் அவர் மதம் மாற்றவில்லை” என்கிறார்.

அதே போல வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆட்ரி ட்ருஷ்கி, “அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் மதக் கலவரங்கள் நடந்ததில்லை. அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்படவில்லை.  முன்னர் சித்தரித்ததைப் போல அவர் கொடூரமானவர் இல்லை” என்கிறார்.

அதுமட்டுமல்ல… ” அவுரங்கசீப் காலத்தில்தான் கணிசமான, ராஜபுத்திர (இந்து) அரசர்கள், முகலாய பேரரசுடன் நட்பில் இருந்தனர். மான்சாப்  மற்றும் ஆளுநர்கள் பதவிகள் ராஜபுத்திரர்களுக்கே வழங்கப்பட்டன. அக்பருக்குப் பிறகு ஆண்ட அவுரங்கசீப் மட்டுமே ராஜா ரகு ராஜ் என்ற இந்துவைத் தன்னுடைய திவானாக வைத்துக்கொண்டார்” என்கிறார்.

ரெசாவி என்ற வரலாற்று ஆராய்ச்சியாளர், “ பல இந்து கோயில்களுக்கு அவுரங்கசீப் மானியம்  அளித்தார்” என்கிறார்.

அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் பீம்சேன்கூட அவரை, அதி தீவிர முஸ்லிம் மதப்பற்று கொண்ட ஆட்சியாளராகப் பார்க்கவில்லை.

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் சில விசயங்கள் அவுரங்சீப்பின் இன்னொரு முகத்தைக் காட்டுகின்றன.

“அவர் மிக எளியவராக வாழ்ந்தார். தினமும் இருமுறை மக்களை நேரடியாக சந்தித்தார். அவர்களது பிரச்சினைகளை கேட்டு தீர்த்தார்.

வீண் செலவுகளை தவிர்த்தார். ஆடம்பர கட்டிடங்களை தவிர்த்தார். அதற்கு பதிலாக மக்களுக்கு உதவும் அரண்கள், பாலங்கள் போன்றவற்றைக் கட்டினார்.

‘திமேன் அண்ட் மித்’ புத்தகத்தை எழுதிய ஆட்ரி ட்ருஸ்கி

ஒரு முறை, வரி கட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அதுகுறித்து அவுரங்கசீப்பின் யோசனை கேட்டு, ஆளுநர் கடிதம் எழுதினார். அதற்கு, ‘அதீத மழை அல்லது வறட்சியால் விவசாயம் முழுதுமாக பாதிக்கப்பட்டால் வரி தள்ளுபடி செய்யவும். அதே நேரம், வரி கட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்கவும்’ என்று பதில் அனுப்பினார்.

இவரது ஆட்சி காலத்தில்தான் ஜவுளித் துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. கைவினைஞர்களுக்கான பட்டறைகள் ஏராளமாக உருவாகின.

தனிப்பட்ட முறையிலும் “அவர் முசுடு, கலைகளை வெறுத்தார்” என்கிற பிம்பம் உண்டு. இதையும் பிற்கால ஆராய்ச்சியில் வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் வில்லியம் தால்ரிம்பில் எழுதிய, ‘டேல்ரிம்பிள்’ என்ற புத்தகத்தில், ‘அவுரங்கசீப் சிறப்பாக வீணை வாசிப்பார்’ என்ற – இதற்கு முன் யாரும் அறியாத – தகவல் இடம்பெற்று உள்ளது.

அவுரங்கசீப் அரசவையில் மான்சாப் (நிர்வாகப் பதவி) ஆக இருந்த ஃபக்கீருல்லா இந்திய இசையைப் பற்றி ‘ராக் தர்பண்’ என்ற நூலை எழுதியிருக்கிறார் எனும் தகவலும் கிடைத்திருக்கிறது. ஆக, ‘இசைக்கு எதிரானவர் அவுரங்கசீப்’ என்கிற பிம்பம் தவறு.

பிறகு அவுரங்கசீப் என்றால், மிக மோசமானவர் என்கிற பிம்பம் எப்படி உருவானது?

“ஆட்சியைப் பிடிக்க தனது சகோதரரை கொன்றதும், தனது தந்தையை வீட்டுச் சிறையில் அடைத்ததும் காரணமாக இருக்கலாம். ஆனால் இது போன்ற சம்பவங்கள் முகலாய மற்றும் இதர லம்ச ( அதாவது சேர, சோழ, பாண்டிய)  அரசர்கள் காலத்திலும் நடந்தேறி உள்ளன என்றாலும் அவுரங்கசீப் குறித்துத்தான் குறிவைத்துச் சொல்லப்படுகிறது.

பிறகு ஏன் அவுரங்கசீப் குறித்து பல எதிர்மறை தகவல்கள் பரவின?

“ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, இந்து-முஸ்லிம் மக்களிடையே பகைமையை வரலாற்றாசிரியர்கள் ஊக்குவித்தனர். அவர்களே, அவுரங்கசீப் குறித்த தவறான பிம்பத்துக்குக் காரணம்” என்கிறார், வரலாற்று ஆராய்ச்சியாளர் ரெசாவி.

இந்த நிலையில்தான், ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில், அவுரங்கசீப்பை வில்லனாக காண்பித்து இருப்பார்களோ என்கிற எண்ணம்.. டீசர் மூலம் ஏற்பட்டு உள்ளது.

டீசரைப் பார்க்கையில் இன்னொரு விசயத்தையும் யூகிக்க முடிகிறது.

நிதிஅகர்வால் (ஜெப்- உன் -நிசா?)

நாயகி நிதி அகர்வால், முகலாய இளவரசியாக ஜொலிக்கிறார். படத்தில், இவர் அவுரங்கசீப் மகள் ஜெப்- உன் -நிசா என்பவராக இருக்கக்கூடும்.

இந்த ஜெப்- உன் -நிசாவை, தனது அண்ணன் மகனுக்கு திருமணம் செய்துவைத்தார் அவுரங்கசீப். அந்தத் திருமண பந்தம் தொடரவில்லை. பிறகு, ஜெப்- உன் -நிசாவை சலீம்கர் சிறையில் அடைத்தார் அவுரங்கசீப்.

இந்த நிலையில், “திருமண உறவு முறிந்த பிறகு, ஜெப்- உன் -நிசா, இந்து அரசரான சத்ரசல் புந்தேலாவை காதலித்தார். இன்னொரு இந்து மன்னர் மீதும் அவருக்கு காதல் இருந்தது” என்று ஒரு தகவல் உண்டு. இதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் இன்றுவரை அந்த கூற்று தொடர்கிறது.

ஒருவேளை  இது, ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் இருக்கலாம். அதாவது நிதி அகர்வாலை (செப்நிசா) பவன் காதலிப்பது போல காட்சிகள் இருக்கலாம். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும்.

நமது கேள்வி இதுதான்.

எத்தனையோ பிரச்சினைகள்-  கதைகள் இருக்க… எப்போதோ நடந்த அல்லது நடந்ததாக சொல்லப்படும்  சிக்கலான விவகாரங்களை இப்போது தோண்டி எடுக்க வேண்டுமா?

பவன் கல்யாண்

சமீப காலத்திய அரசியலை – பிரச்சினையை சொன்னதாக சொல்லிக்கொள்ளும் தி காஷ்மீர் பைல்ஸ்,  கேரளா ஸ்டோரி போன்ற படங்களிலேயே பல்வேறு தவறான தகவல்கள் – காட்சிகள் உள்ளன என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், ‘வரலாற்று புனைவு’  என்று எடுக்கப்படும் படத்தில் எத்தனை சிக்கல்கள் இருக்கும்… இது தேவையா?

– டி.வி.சோமு

Related Posts