இரவு… இளம் பெண்.. தடுத்த அரசு பேருந்து நடத்துநர்!
பேஸ்புக் தளத்தில், Rani Aidwa Didugul என்பவரின் பதிவு அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. அந்த பதிவு:
“ராமேஸ்வரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில வகுப்பு நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள இன்று (28/11/2025) மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு, தோழர் சுகந்தி அவர்களும் நானும் பேருந்தில் பயணம் செய்தோம்.
பேருந்து ராமேஸ்வரத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.
இரவு 10.30 மணி.
பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல் கலாம் நிறுத்தத்தில் பேருந்து நின்றது. வெளியூரில் படிக்கும் மாணவி ஒருவர், இறங்கத் தயாரானார்.
அவரிடம், விசாரித்த நடத்துநர், “இரவு நேரம்.. உன்னை தனியாக இறக்கி விட்டுச் செல்ல முடியாது.. உன்னை அழைத்துச் செல்ல யாராவது வந்திருந்தால்தான் இறக்கி விடுவேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டார். ஓட்டுநரும் அதையே கூறினார்.
அந்த மாணவியிடம், அவரது பெற்றோர் எண்ணை வாங்கி பேசினார். அவர்கள் வர கொஞ்சம் தாமதம் ஆகும் என தெரிந்தது.
அதுவரை அந்த பேருந்து அங்கேயே நின்றது. மாணவியின் சித்தப்பா வந்த பிறகே, மாணவியை அனுப்பினர் நடத்துநரும், ஓட்டுநரும்.
“காலம் கெட்டு கிடக்கு… பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும்” என்றனர் இருவரும்.
நடத்துனர் முத்துராமலிங்கம், ஓட்டுநர் அந்தோணி ராஜ் இருவரும் பாராட்டுக்கு உரியவர்கள்!”

