கஜானா: திரை விமர்சனம்

கஜானா: திரை விமர்சனம்

ந்த கோடை காலத்தில், குளு குளுவென காட்டுப் பகுதிக்குச் செல்லவேண்டும் குழந்தைகளுக்கான ஃபேண்டசி படம் பார்க்க வேண்டும்  என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றி வந்திருக்கிறது ‘கஜானா’.

கதை:

நாகமலை என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பொக்கிஷத்தை எடுக்க பலர் முயற்சித்து பலியாகி கொண்டிருந்தாலும், பேராசை பிடித்த மனிதர்கள் பலர் அந்த பொக்கிஷத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.

அவர்களில் ஒருவராக நாயகன் தனது குழுவினருடன் நாகமலைக்கு செல்கிறார். மறுபக்கம், அதே பொக்கிஷத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியில் பிரபல பெண் அகழ்வாராய்ச்சியாளர் ஒருவரும் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே, பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படும் அந்த இடத்தில், நாக இனத்திற்கு சொந்தமான பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் நவரத்தின கற்கள் இருக்கும், உண்மை தெரிய வருகிறது. அதனை கைப்பற்றுவதற்காக பல வருடங்களாக போராடி வருகிறாள் கருட இனத்தின் தலைவி. நாயகன் இடத்தை நெருங்கும் போது, அவரிடம் இருந்து அதனை கைப்பற்ற திட்டமிடுகிறாள்.

நவரத்தின கற்களை கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களின் நிலை என்ன ஆனது, அதனை பாதுகாக்கும் யாளி உண்மையா, நாகமலையை சுற்றியிருக்கும் மாய உலகத்தின் பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கு பிரமாண்டமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலமும், சுவாரஸ்யமான ஃபேண்டஸி கற்பனை கதை மூலமும் பதில் அளிப்பது தான் ‘கஜானா’.

பழங்காள மிருகமான யாளி, பேசும் மரங்கள், ஆவி யானை, எரி சக்தி வீசும் கண்கள் உள்ள பெண் என பல்வேறு ஆபத்துக்களை எதிர் கொள்கிறது அந்தக் குழு.

இறுதியில் என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார்கள். நடிப்பு:

புதையலைத் தேடிச் செல்லும் பேராசை கொண்ட நாயகனாக, இனிகோ பிரபாகரன். தன்னை ஏமாற்ற நினைக்கும் தனது குழுவினரை எச்சரிப்பது, காட்டுக்குள் உலவும் துப்பாக்கி மனிதரை திடுமென கொல்வது என அதிரவைக்கிறார்.

கருட இனத்தின் தலைவியாக – அபூர்வ சக்தி கொண்டவராக சாந்தினி தமிழரசன் கவர்கிறார். அவர் கண்களில் இருந்து நெருப்பு சக்தி பாய்ந்து, வித்தியாசமான விலங்குகளைக் கொல்லும் காட்சியில் கூடுதலாக மிரட்டி இருக்கிறார்.

பொக்கிசத்தை தேடும் முயற்சியில் ஈடுபடும் வேதிகா, எதிர்பாராமல் காட்டுப்பகுதிக்குச் சென்று அமானுஷ்ய சக்தியால் உயிர் விடும்  சென்ட்ராயன் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.  முக்கியமாக அனிமேஷன் காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருப்பதும், அதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பதும் திரையில் தெரிகிறது.

வேலு பிரபாகரன், பிரதாப்போத்தன் உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள்.

கதைக்கு ஒட்டாத யோகிப்பு, மொட்டை ராஜேந்திரன் பகுதி எரிச்சல் படுத்துகிறது. அவை இல்லாவிட்டால் படம் இன்னும் சுவாரஸ்யப்படும்.

தொழில்நுட்பகலை:

அச்சு ராஜாமணியின் இசை படத்துக்கு பலம். அதுவும் பரபரப்பான கிராபிக்ஸ் காட்சிகளில், தனி ஆவர்த்தனம் நடத்தி இருக்கிறது பின்னணி இசை.   “போலாம் போலாம் ரைட்…” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. சிவன் பாடல் கதைக்களத்தை விவரிப்பதோடு, திரைக்கதையின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

கே.எம். ரியாஸின் எடிட்டிங் கச்சிதம்.  குறிப்பாக, படத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும், அனைத்தையும் தெளிவாக புரியும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

கோபி துரைசாமி மற்றும் வினோத் ஜேபி ஒளிப்பதிவு சிறப்பு. காட்டுப் பகுதிகளை கண் முன் நிறுத்துகிறது.

அதோடு கிராபிக்ஸ் காட்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன. ஆவியாக வரும் யானை… அதன் மீது அமர்ந்திருக்கும் ஆவி அரசன், யாளி மிருகம், பேசும் மரங்கள்… இப்படியான கிராபிக்ஸ் கவர்கின்றன.இயக்கம்:

தொழில் நுட்ப ரீதியாக மிரட்டும் இவற்றை கற்பனையில் உருவாக்கிய இயக்குநர் பிரபதிஷ் சாம்ஸூக்கு பாராட்டுகள்.

ஃபைனல் கமெண்ட்:

வெளிநாட்டுப் படங்கள்தான் கிராபிக்ஸில் மிரட்டும் என்கிற மாயைப் போக்கி, அதிரவைத்து இருக்கிறார்கள்.

அந்தக்கால சிறுவர்களை கவர்ந்தது அம்புலிமாமா புத்தகம். கஜானா திரைப்படம் விஷூவல் அம்புலிமாமாவாக வந்திருக்கிறது.

ஆகவே சிறுவர்களை மட்டுமல்ல.. பெரியவர்களையும் கவரும்.

ரேட்டிங்: 3.1/5

Related Posts