போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஆண்ட்ரியா பதிவிட்ட கவிதை!

போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஆண்ட்ரியா பதிவிட்ட கவிதை!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதல் நடந்து வரும் நிலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஆன்ட்ரியா, பாலஸ்தீன கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டினர் வெளியேற்றம், பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு தடை, பாகிஸ்தானுடனான தபால், பார்சல் ஆகியவற்றுக்கான தடை என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.

தவிர, பெஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது கடந்த 7ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக காஷ்மீரில் பல இடங்களில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது.

மேலும், இந்தியாவின் எல்லை மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 தினங்களாக வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்நேரமும் போர் நிகழலாம் எனும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இந்தியா போரில் வெற்றி பெற வேண்டும் என சிலரும் போரினால் இரு நாடுகளிலும் உள்ள சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சிலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் போரை எதிர்க்கும் பாலஸ்தீன கவிஞர் மெஹமுத் டார்விஷ் எழுதிய கவிதை ஒன்றை நடிகை ஆண்ட்ரியா தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அக்கவிதை,

“போர் ஒருநாள் முடிவடையும்

தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்

மரணமடைந்த மகனின் வருகைக்காக வயதான தாய் காத்திருப்பாள்

காதல் கணவனை எதிர்பார்த்து மனைவி காத்திருப்பாள்.

அவர்களின் குழந்தைகள் தங்களின் வீரமான தந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்

எங்கள் மண்ணை யார் விற்றார்கள் என எனக்குத் தெரியாது

ஆனால், அதற்கான விலையை யார் தருகிறார்கள் என்பதை நான் கண்டேன்.

– மெஹமுத் டார்விஷ்,”
– ஆண்ட்ரியாவைத் தொடர்ந்து பலரும் இந்த கவிதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே பெஹல்காம் தாக்குதல் நடந்தபோது அதற்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து ஆண்ட்ரியா தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts