தொடரும் : திரைப்பட விமர்சனம்  

தொடரும் : திரைப்பட விமர்சனம்  

சொந்தமாக டாக்சி வைத்து ஓட்டும் மோகன்லால், மனைவி ஷோபனா, கல்லூரியில் படிக்கும் மகன், பள்ளி செல்லும் மகள் என அமைதியாக வாழ்கிறார். ஒரு நாள், தனக்குத் தெரியாமல் அந்த காரை எடுத்துச் சென்ற மகனை அடித்துத் துவைத்துவிடுகிறார். அந்த அளவுக்கு கார் மீது பாசம்!

முன்பு, சென்னையில் சினிமா பைட்டராக இருந்த மோகன்லாலுக்கு குருநாதராக இருந்தவர் பாரதிராஜா. அவர் இறந்துவிட்டார் என தகவல் வர, அதற்காக சென்னை செல்கிறார் மோகன்லால். போகும்போது, தனது காரை, சில ரிப்போர்கள் செய்வதற்காக ஒர்க்க்ஷாப்பில் விட்டுச் செல்கிறார்.

வந்து, வாகனத்தை எடுக்கச் சென்றவருக்கு அதிர்ச்சி. ஒர்க்க்ஷாப்பில் வேலைபார்த்த இளைஞன் அந்த காரில் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, டாக்ஸி பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் நிற்கிறது; அந்த இளைஞன் தலைமறைவாகி விட்டான்.

காவல் உதவி ஆய்வாளர், மோகன்லாலிடம் திமிராக பேசுகிறார். டாக்ஸியை தர மறுக்கிறார். தினசரி டாக்ஸிக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைகிறார் மோகன்லால்.

இன்னொரு பக்கம், நண்பர்கள் முன்னிலையில் தன்னை அடித்துவிட்டார் என்கிற கோபத்தில் மோகன்லாலிடம் பேச மறுக்கிறார் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவரது மகன்.

அடுத்த சில நாட்களில் அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா, மோகன்லாலிடம் அவரது டாக்ஸியை ஒப்படைக்கும்படி எஸ்.ஐ.,க்கு உத்தரவு போடுகிறார். ஆனால் அன்றைய தினம் இரவு, தங்களது ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரின் இல்ல திருமணத்துக்கு தங்களை அழைத்துச் சென்றுவந்து மீண்டும் விட்டு விட வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். வேறு வழி இன்றி அதற்கு ஒப்புக்கொள்கிறார் மோகன்லால்.

போகிற வழியில் அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு ஆளாகிறார் மோகன்லால். இன்னொரு பக்கம், ஹாஸ்டலில் தங்கி பயின்று வந்த மகனை காணவில்லை என்று தகவல் வருகிறது.

சிக்கலில் தவிக்கும் மோகன்லால் அதில் இருந்து மீண்டாரா என்பதே மீதிக்கதை.

த்ரிஷ்யம் படத்திற்குப் பிறகு, மோகன்லால் எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், அதே அதிரடியை இந்தப் படத்தில்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி, பிள்ளைகள் மேல் பாசம் – குடும்பத்திற்காக வாழ்வது, அதற்கு ஒரு பாதிப்பு என்றால் அசுர வதம் செய்வது என அசத்தி இருக்கிறார்.

கார் ஓட்டிக்கொண்டே ஐயப்ப பக்தர்களிடம் ஜாலியாக பேசி வருவது, காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கித் தவிப்பது, இறுதியில் தனது இன்னொரு முகத்தை காண்பிப்பது என அசத்தல். குறிப்பாக பாத்ரூமில் ஷவரை திறந்துவிட்டு நனைந்தபடி அழுது கதறுவது மனதை கனக்க வைக்கிறது.

பெரும் இடைவேளைக்குப் பிறகு மோகன்லாலுடன் இணைந்துள்ளார் ஷோபனா. கணவன் மீது காண்பிக்கும் காதல், பிள்ளைகள் மீது வெளிப்படுத்தும் பாசம் என நிஜமான குடும்பத்தலைவியை கண்முன் நிறுத்துகிறார். காவல் அதிகாரியால் மகளுக்கு ஆபத்து என்றவுடன் அவர் பார்க்கும் அந்த பார்வை ஒன்றே போதும் அவர் நடிப்பைச் சொல்ல.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா படம் முழுதும் மிரட்டுகிறார். சிரித்தபடியே அவர் செய்யும் கொடூரங்கள் நடுங்க வைக்கின்றன. சிரித்துக்கொண்டே தனது இழிவான செயல்களுக்கு மற்றவரை உடன்பட வைக்கும் தந்திரம், அதே பாணியில் மிரட்டுவது என அசத்துகிறார்.

பதவி ஆசைக்காக அதற்கு ஒத்துழைக்கும் எஸ்ஐயாக வரும் பினு பப்புவும் அசத்தி இருக்கிறார்.

மோகன்லால் சோபனாவின் மகன், மகளாக நடித்திருப்பவர்கள், அவரது நண்பர்களாக வரும் மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்டவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே உடன் வருகிறது. குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், பிணத்தை கொண்டு போகும் திகில் காட்சி, இறுதியில் வரும் அதிரடி காட்சி என சூழலுக்கு ஏற்ப இசையை அளித்து கவர்கிறார் ஜேக்ஸ் பிஜாய். இடைவேளை வரையிலான திக் திக் காட்சிகளுக்கும் சரி, கிளைமாக்ஸில் அரை மணி நேரம் நம்மை ஆக்சன் மூடுக்கு மாற்றுவதிலும் சரி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.

அதே போல ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார். இரவு நேரக் காட்சிகள், காட்டுப் பகுதி.. குறிப்பாக டாக்சி சேற்றில் சிக்கும்போது நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொண்டு வந்துவிடுகிறார். சிறப்பு.

அடர்ந்த காட்டுக்குள் மோகன்லால் மேற்கொள்ளும் அந்த டாக்சி பயணத்தில் நாமும் சிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வை தனது ஒளிப்பதிவால் ஏற்படுத்தி விடுகிறார். அதே போல கிளைமாக்ஸில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அந்த சண்டைக்காட்சியை அவர் படமாக்கிய விதம் மிரட்டல்.இயக்குனர் பாரதிராஜா, நடிகர் இளவரசு கதாபாத்திரங்கள், போட்டோவில் விஜய் சேதுபதி, பின்னணியில் இளையராஜா பாடல்கள் என தமிழ் ரசிகர்களையும் குறிவைத்த படம் எடுத்து இருக்கிறார்கள்.

குடும்ப + க்ரைம் த்ரில்லரை அழகாக ஒன்றுபடுத்தி அளித்த இயக்குனர் தருண்மூர்த்தியை பாராட்டலாம். அதோடு ஆணவக்கொலையைச் சொன்ன விதமும் அதற்கான தண்டனை அளித்த விதமும் சிறப்பு. சமூகத்துக்கு இன்னொரு விதமும் சொல்கிறார். அதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மொத்தத்தில் ரசித்துப் பார்க்கக் கூடிய படம்.

ரேட்டிங்: 3.1/5

 

Related Posts