ககனாச்சாரி: விமர்சனம்
கேரள மாநிலத்தில் இயற்கை பேரழிவு ஏற்ப்பட்டு, பெரும் சேதம் ஏற்படுகிறது. 2050 ஆம் ஆண்டில், மூன்று மனிதர்களிடம் ஒரு ஏலியன் பெண் தஞ்சமடைகிறாள். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளைக் கலகலப்பான காமெடியுடன், புதுமையான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் சொல்லியிருக்கிறது ககனாச்சாரி திரைப்படம்.
மக்களை அரசு அடக்குமுறை செய்கிறது.ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை காவல்துறையும் கண்காணிக்கிறது.
இப்படியான ஒரு காலக்கட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, ஒரு கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக சேனல் ஒன்று அவரை சந்திக்கிறது. அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள்.
காட்சிகள் ஆவணப்பட கோணத்தில் திரையில் விரிகிறது.
அந்த மூவருடன், ஒரு பெண் ஏலியன் இணைகிறது. 250 வயதாகும் அந்த இதுவரை எந்த பெண்ணும் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கும் ஏலியன் மீது, கவலைப்படும், கோகுல் சுரேஷுக்கு ஏலியன் மீது காதல் அரும்புகிறது.
அந்த காதல் என்ன ஆனது, பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதை விவரிக்கிறது மீதிக்கதை.
கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், கணேஷ் குமார் மூவருமே வித்தியாசமான நடிப்பை அளித்து இருக்கிறார்கள். ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் வசனம் பேசாமல் பார்வையிலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய், தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து இருக்கிறார். ஆவணப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.
அந்த வித்தியாசமான கட்டிடம், காட்சிகளுக்கு அளித்து இருக்கும் நிறங்கள் என கலை இயக்குநர் எம்.பாவா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசை படத்துக்கு பலம். குறிப்பாக ஆங்காங்கே வரும் பீஜியம்கள் ஈர்க்கின்றன.
படத்தொகுப்பாளர் சீஜே தனது பணியை அற்புதமாக செய்து இருக்கிறார்.
வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.
மிக முக்கியமான அறிவியல் செய்திகளை, நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி அளித்து இருக்கிறார் இயக்குநர் அருண் சந்து.
செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமை, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை – வெள்ள பாதிப்பு, பெட்ரோல் தட்டுப்பாடு, ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்களை ரசிக்கும்படி சொல்லி இருக்கிறது ‘ககனாச்சாரி’.